எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் வரி செலுத்தாமல் இயங்கிய 6 சொகுசு கார்கள் பறிமுதல்: மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடவடிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், அரசுக்கு வரி செலுத்தாமல் தனியார் வாடகைக்காக பயன்படுத்தப்பட்ட 6 சொகுசு கார்களை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர். தமிழக ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, மும்பை, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா, பீகார், தெலங்கானா ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், ராக்கெட் உதிரி பாகங்கள், காற்றாலை பிளேடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.

இந்த சோதனை சாவடி வழியாக சென்று வரும் அனைத்து வாகனங்களையும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் இதர அதிகாரிகள் முறையாக வாகன தணிக்கை செய்ய வேண்டும் என்பது வழக்கம். ஆனால், ஆந்திர பதிவு கொண்ட பல சொகுசு கார்கள் வாடகைக்கு சொந்தக்காரர்களை பயன்படுத்தி, அரசுக்கு வரி செலுத்தாமல் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் பல மாதங்களாக சென்று வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து தமிழக போக்குவரத்து கமிஷனர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எஸ்.அருள்தாஸ், ஜே.லோகநாதன், கே.ரமேஷ்பாபு , பி.ஏழுமலை ஆகியோர் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வரும் வாகனங்களை இரவு பகலாக தீவிரமாக சோதனையிட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் சென்ற வாகனங்களை சோதனை செய்தபோது, முறையாக அனுமதி பெறாமல் சட்ட விதிமுறைக்கு மாறாக வெள்ளை நிற பெயர் பலகை பயன்படுத்தி வரும் 6 சொகுசு கார்கள், வாடகை கார்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையறிந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள், 6 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து சோதனைச்சாவடி கிடங்கில் அடைத்தனர். இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பல லட்ச ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் வரி செலுத்தாமல் இயங்கிய 6 சொகுசு கார்கள் பறிமுதல்: மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: