ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திட்ட பணிகள் தொடர டி.ஆர்.பாலுவுக்கு வாக்களிக்க வேண்டும்: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம்

 

தாம்பரம், ஏப்.15: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா நேற்று செம்பாக்கம் தெற்கு பகுதி மற்றும் சிட்லபாக்கம் பெரிய ஏரிக்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் எண்ணற்ற பணிகள் நடைபெற்று உள்ளது. தாம்பரம் சானிடோரியத்தில் 450 மகளிர் தங்கக்கூடிய அளவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதி ரூ.18 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

ரூ.132 கோடியில் நவீன மருத்துவ வசதிகளுடன் தாம்பரம் அரசு மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.2 கோடியே 80 லட்சத்தில் தொகுதி முழுவதும் தெருக்களின் புதிய பெயர் பலகைகள் அமைக்கப்படுகிறது. தாம்பரம் ரயில்வே நிலையத்தை 3வது பெரிய ரயில்வே முனையமாக மாற்றியது மற்றும் தேஜாஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.30 கோடியில் தொகுதி முழுவதும் எல்இடி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் சட்டமன்றத் தொகுதி, தாம்பரம் மாநகராட்சி திட்டம் மற்றும் பொது நிதிகள் மூலம் ரூ.168 கோடியே 2 லட்சத்தில் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 3 நிதி ஆண்டுகளில் ரூ.1 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 11 நியாய விலை கடைகள் கட்டப்பட்டுள்ளது.

தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.1 கோடியே 13 லட்சத்தில் 8 பூங்காக்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு கிடைத்திட ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். பகுதி செயலாளர் செம்பாக்கம் இரா.சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் ஜெகன், சானடோரியம் சுரேஷ், ராஜா, திமுக நிர்வாகிகள் தேவேந்திரன், மனோகர், விஜயகுமார் உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திட்ட பணிகள் தொடர டி.ஆர்.பாலுவுக்கு வாக்களிக்க வேண்டும்: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: