திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்கு செலுத்துவதில் குளறுபடி: அரசு ஊழியர்கள் புகார்

பூந்தமல்லி, ஏப். 14: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்கு செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டதாக அரசு ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி, பூந்தமல்லி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி செய்வது குறித்த பயிற்சி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கான தபால் வாக்குப்பதிவும் பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இதில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிலர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். அப்போது, ஏராளமான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தபால் வாக்குகள் செலுத்துவதற்கான ஆவணங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வழங்கவில்லை என ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதுவரை தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கு இரண்டு முறை மனு அளித்தும் இதுவரை தபால் வாக்குகள் செலுத்தப்படவில்லை. உரிய காரணங்கள் எதுவும் அதிகாரிகள் தெரிவிக்காமல் தபால் வாக்குகள் செலுத்துவதற்கான மனுவை தள்ளுபடி செய்கின்றனர். அதனால் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு மீண்டும் மனு அளித்திருப்பதாகவும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

மேலும், 18ம் தேதி தபால் வாக்குகள் செலுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அன்றைய தினத்தில் வாக்கு சாவடி மையங்களுக்கு பணியாளர்கள் செல்ல வேண்டிய இருப்பதால் தபால் வாக்குகளை செலுத்த முடியாத நிலை ஏற்படும். அப்படி இல்லை என்றால் தங்களது தபால் வாக்குகளை வாக்கு எண்ணிக்கை நடை பெறுவதற்குள் செலுத்த அனுமதிக்க வேண்டும், என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 100% வாக்குகள் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு ஊழியர்களே 100% தபால் வாக்குகளை செலுத்த முடியாத நிலை ஏற்படுவது வருத்தம் அளிக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

காவல்துறையினர் வாக்களிப்பு: இந்நிலையில் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, பெரும்புதூர், அரக்கோணம், காஞ்சிபுரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த காவல்துறையினர் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கத்திலும், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் கள்ளக்குறிச்சி சேலம் ஆகிய நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த காவல்துறையினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தளம் கூட்டரங்கத்திலும், மேலும் பிற நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த காவல் துறையினர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆய்வு கூட்டரங்கத்திலும் தங்கள் தபால் வாக்கினை பதிவிட்டனர்.

மீதமுள்ள 628 காவல்துறையினரிடம் தபால் வாக்கிற்கான 12டி படிவம் பெறப்பட்டு அவர்களுடைய தபால் வாக்கு பதிவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தபால் வாக்கு பதிவிடும் முகாம் 14, 15 மற்றும் 16ம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி சுகபுத்ரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், கலால் உதவி ஆணையர் ரங்கராஜன் மற்றும் காவல்துறையினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்கு செலுத்துவதில் குளறுபடி: அரசு ஊழியர்கள் புகார் appeared first on Dinakaran.

Related Stories: