மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி வகுப்பு * கலெக்டர் நேரில் ஆய்வு * தபால் வாக்குகளை செலுத்த சிறப்பு ஏற்பாடு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஏப்.14: திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பயிற்சி நடந்த 8 மையங்களிலும் தபால் வாக்குகளை செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அதையொட்டி, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தேர்தல் முன்னேற்பாடுள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பணிபுரிய 11400 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், கலசபாக்கம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 இடங்களில் நடந்தது.

உதவி தேர்தல் நடந்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் ஆகியோர் தேர்தல் பயிற்சி வகுப்பை நடத்தினர் அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, வாக்குப்பதிவு தொடங்கும் முன்பு முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், படிவங்களை பூர்த்தி செய்வதல், வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்தல் போன்றவை குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், மாதிரி வாக்குப்பதிவு நடந்ததும், அதில் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டதை முகவர்கள் முன்னிலையி்ல உறுதி செய்த பிறகே, வாக்குப்பதிவை தொடங்க வேண்டும். வாக்குப்பதிவு விபரங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மண்டல அலுவர்கள் மூலம், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேர்தல் பயிற்சி வகுப்பை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவரும் தவறாமல் தபால் வாக்குகளை அளிக்க வேண்டும். தேர்தல் பணிச் சான்று பெற்றவர்கள், தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், எவ்வித பாரபட்சமும் இல்லாமல், வெளிப்படை தன்மையுடன் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என தெரிவித்தார். அதோடு, வரும் 18ம் தேதி குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களுக்கு ஒதுக்கப்படும் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று பணியில் சேர வேண்டும் என்றார்.

இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்த 8 மையங்களிலும், தபால் வாக்குகளை செலுத்த சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் ஆகியோர் ஆர்வமுடன் தபால் வாக்குகளை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, தபால் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு எந்த வாக்குச்சாவடியில் பணி ஒதுக்கப்படுகிறது என்கிற ஆணை, வரும் 18ம் தேதி வழங்கப்படும். அதனை, மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று பெற்றுக்கொண்டு, வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

The post மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி வகுப்பு * கலெக்டர் நேரில் ஆய்வு * தபால் வாக்குகளை செலுத்த சிறப்பு ஏற்பாடு திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: