‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு வருகை புரிகிற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசைத் திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக சோனியா காந்தி குடும்பத்தின் மீதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார்கள். பாஜகவினரின் இத்தகைய இழிவான பிரசாரம் மக்களிடம் எடுபடாது. நேற்று கிருஷ்ணகிரியில் பேசிய நிர்மலா சீதாராமன் 2ஜி அலைக்கற்றை ஊழலைப் பற்றி பேசியிருக்கிறார். வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிபதி ஒ.பி.சைனி, எந்த ஆதாரமும் இல்லையென குற்றவாளிகளை நிரபராதிகள் என விடுதலை செய்தார்.

அதை ஊழல் என்று கூறுவதற்கு பாஜகவிற்கு என்ன உரிமை இருக்கிறது? ஆனால், சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறையில் நிகழ்ந்த ஒப்பந்த முறைகேடுகளிலும், நிர்வாகத்திலும் ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு மற்றும் ஊழல் நடந்ததாக அறிக்கை வெளியிட்டது. ஆனால் இதுவரை அந்த அறிக்கை மீது விசாரணை நடத்தவோ, வழக்கு பதிவு செய்யவோ, ஊழலை ஒழிப்பதாக சூளுரை மேற்கொண்ட பிரதமர் மோடி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்? தேர்தல் பத்திர நன்கொடை மூலம் வசூலித்த பல ஆயிரம் கோடி ரூபாயை வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக கனவு காண்கிறது. ஆனால், நேற்று கோவையில் நடைபெற்ற வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உரையை கேட்ட பிறகு 2024 தேர்தலுக்கு பிறகு மக்கள் விரோத மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதியாகியிருக்கிறது.

மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், ‘நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன்’ என்று கூறியிருக்கிறார். இதையொட்டி பேசிய ராகுல்காந்தி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற இருக்கிற மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டிருக்கிறார். இதன்மூலம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பேராதரவோடு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு முடிவுகட்டப்படும். அதற்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்கிற வரலாற்றுச் சிறப்பு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. பாசிச பாஜக ஆட்சி வீழ்த்தப்படுவதும், மோடியின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா மீட்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: