என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்!

நன்றி குங்குமம் தோழி

தனது தந்தை காட்டிய வழியில், தனக்கான ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டு, இன்று புகழ்பெற்ற சேலம் ஆர்.ஆர்.பிரியாணி ஓட்டலின் நிர்வாகப் பொறுப்பாளராக பிசினசில் பல மாற்றங்களையும் கொடுத்து வருகிறார் தமிழ்ச்செல்வி மோகன்.‘‘எங்களின் பூர்வீகம் சேலம் என்றாலும், நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். படிச்சதும் சென்னையில்தான். ஆங்கிலத் துறையில் இளங்கலைப் பட்டம் படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் திருமணம். என் கணவர் பொறியியல் படித்திருந்தாலும் எங்க நிறுவனத்தில் மேலாண்மைப் பணிகளைப் பார்த்துக் கொள்கிறார். எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே என் அப்பாவின் தொழிலில் உறுதுணையா இருக்க வேண்டும்னு விருப்பம்.

அவரின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த பணிகளை செய்ய வேண்டும்னு விரும்பினேன். அதனால்தான் என் திருமணத்திற்குப் பிறகு அவரின் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பு மட்டுமில்லாமல் கணக்கு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கிறேன். எங்க உணவகங்களுக்கு தமிழகம் முழுதும் 15 மாவட்டங்களில் கிளைகள் உள்ளன. சென்னையில் மட்டுமே 14 கிளைகள் உள்ளன. எங்க உணவகத்தின் சிறப்பம்சமே பிரியாணிதான். அதிலேயே பத்துக்கும் மேற்பட்ட வெரைட்டியில் தருகிறோம். அது தவிர சிக்கன், மட்டன் வகையில் உணவுகள் மற்றும் எந்தவித இறைச்சி துண்டுகளும் சேர்க்கப்படாத குஸ்காவும் உள்ளது’’ என்றவர், நிர்வாகத் துறையில் மட்டுமில்லாமல், உணவினையும் தரமாக கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘‘சிறு வயதில் இருந்தே அப்பா இந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பதை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அவரிடம் தொழில் சார்ந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கேன். குறிப்பாக உணவினை தரமாக வழங்க வேண்டும் என்பதில் அப்பாவைப் போல் நானும் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறேன். அப்பா அவரின் அனுபவத்தால் உணவின் நிறம் மற்றும் மணம் பார்த்தே அதன் நிறை குறைகளை சொல்லிடுவார்.

அது அவரின் அனுபவம். என்னால் அவர் அளவிற்கு துல்லியமாக சொல்ல முடியாது என்றாலும், சுவைத்து பார்த்து அதில் உள்ள நிறை குறைகளை கண்டறிய முடியும். மேலும் உணவுத்துறை என்பது மிகவும் கவனமாகக் கையாள வேண்டியது. சுவையில் சிறு மாற்றம் இருந்தாலும் நாளடைவில் நாம் இவ்வளவு நாள் கட்டிக் காத்து வந்த மதிப்பினை பாதிக்கும். நான் இந்த துறைக்கு வரும் முன்பே அப்பா எங்களிடம் சொல்வார்.

அவரைத் தொடர்ந்து நானும் என் அண்ணனும் அவரின் தொழிலை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. அவர் பல கஷ்டங்களை சந்தித்துதான் இதில் ஒரு இடத்தினை தக்க வைத்துள்ளார். அது எங்களுக்குத் தெரியாது. அதே சமயம் என்னதான் நானும் அண்ணணும் இந்த துறைக்கு வந்தாலும், அடிமட்டத்தில் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்னு நினைத்தார். அப்ப நான் மூன்றாம் வகுப்பு படித்து வந்தேன்.

அண்ணன் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். சனி மற்றும் ஞாயிறுகளில் பள்ளி விடுமுறை என்பதால் அப்பா எங்கள் இருவரையும் கடைக்கு அழைத்து வருவார். அங்கு எங்களை வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பிளேட்களை எடுக்க சொல்வார். இதுதான் இந்தத் தொழிலின் அடிப்படை பணி. அதில் இருந்துதான் படிப்படியாக மற்ற பணிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பார்.

பொதுவாக பெண்கள் ஒரு தொழிலை நிர்வகிக்கும் போது, அதில் பல சவால்கள் நிறைந்திருக்கும். இதுவே ஆண்கள் செய்யும் போது அவர் சரியா செய்வார் என்ற நம்பிக்கை இருக்கும். அதையே நான் செய்ய முன் வரும்போது, இந்தப் பெண்ணால் செய்ய முடியுமான்னு யோசிக்கிறாங்க… பெண்ணாக இருந்தாலுமே அவர்களாலும் எந்த வேலையையும் திறமையாக சமாளிக்க முடியும் என்பதை புரிய வைக்க, நான் இந்த துறையில் படிப்படியாக என்னை உயர்த்திக் கொண்டேன். பல வேலைகளை வெற்றிகரமாக முடித்திருக்கேன்’’ என்றவர் தன் பெற்றோரிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளார்.

‘‘அப்பா ஆரம்பத்தில் இருந்து தொழில் செய்து வருகிறார். அவர் வெளியே பலரை சந்திப்பார். அவர்களை எப்படி நடத்த வேண்டும், தொழிலை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்னு பல அனுபவங்கள் மூலம் கற்றுக் கொண்டுள்ளார். அதே சமயம் அம்மா இல்லத்தரசிதான். ஆனால் அவர் வீட்டை நிர்வகிக்கும் திறனைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மேலும் இருவருமே நேர மேலாண்மையில் திறமையானவர்கள். ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் அதை முறையாகக் கடைபிடித்து செல்வார்கள். அப்பா கடினமான உழைப்பாளி. எத்தனையோ நாள் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உழைத்திருக்கார். புத்தகங்கள் படிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். பல விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்துள்ளார். இவர்கள் இருவரும்தான் என் வாழ்க்கை மற்றும் தொழிலின் வழிகாட்டிகள்னு நான் சொல்வேன்.

தொழிலைப் பொறுத்தவரை அதில் ஈடுபாடு இருந்தால்தான் செய்ய முடியும். அப்படி இல்லாமல் இருந்தால் அந்த தொழில் சிறப்பாக அமையாது. அதேபோல் ஒரு வேலையில் ஈடுபடும் முன், அதைப் பற்றி முழு தகவலையும் சேகரிக்க வேண்டும். வேலைக்கு என தனிப்பட்ட நேரம் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி எனும் எல்லைக் கோட்டை எட்ட முடியும். அதற்கு முழு உதாரணம் அப்பாதான்.அவர் சாதாரண தள்ளுவண்டி கடையில்தான் முதன் முதலில் பிரியாணி வியாபாரம் செய்து வந்தார். அப்படி ஆரம்பிக்கப்பட்ட தொழில்தான் இன்று பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் அவரின் தளராத முயற்சி, கடின உழைப்பு, மனிதநேயம், பலருக்கும் உதவும் அற்புதமான நோக்கங்கள் மட்டுமே. இன்றும் பலருக்கு அன்னதானம் செய்கிறார். மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். உதவி கேட்டு வரும் ஏழைப் பெண்களுக்கு அவர்களின் உண்மை நிலையை அறிந்து அதற்கு ஏற்ப வேலை வாய்ப்பினை அளித்து வருகிறார். அவரை புற்றுநோய் தாக்கிய போது, நாங்க எல்லோரும் பயந்தோம். ஆனால் அவர் எங்களிடம் ‘நான் மீண்டு வருவேன்’ என்று சொன்னது மட்டுமில்லாமல், தன்னம்பிக்கையுடன் அந்த நோயை எதிர்த்து வாழ்ந்து வருகிறார். அவர் செய்த தர்மங்கள்தான் அவரை காத்து வருகிறதுன்னு நான் சொல்வேன்’’ என்றவர் தங்களின் நிறுவனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.

‘‘எங்க உணவகத்தில் ஒவ்வொரு கிளையிலும் அனைத்துப் பிரிவிலும் பெண்களை வேலைக்கு நியமித்திருக்கிறோம். தற்போது உணவகம் மட்டும் நடத்தி வருகிறோம். வரும் காலத்தில் உணவிற்குத் தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் பணியை துவங்கும் திட்டம் உள்ளது. இதன் மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரமுடியும். அடுத்து பிற மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் கிளைகளை துவங்க வேண்டும். உணவகத் துறையில் இருப்பதால் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி ஒன்றை நிறுவ வேண்டும். இதனை இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்’’ என்றார் தமிழ்ச்செல்வி.

தொகுப்பு: விஜயா கண்ணன்

The post என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்! appeared first on Dinakaran.

Related Stories: