விளிம்புநிலை வாழ்வை புகைப்படமாக்கும் நிஷா சகோதரிகள்…

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் ஹயருநிஷா, என் தங்கை நூர்நிஷா. விளிம்புநிலை மக்களை புகைப்படம் எடுப்பதற்காக நான் வெளியில் செல்லும்போது என்னுடன் எனது தங்கை நூர்நிஷாவும் வரத்தொடங்கி, அப்படியே அவளுக்கும் போட்டோகிராஃபியில் ஆர்வம் வர ஆரம்பித்தது. இருவருக்கும் சிந்தனைகளும் ஒரே மாதிரி என்பதால் புகைப்படத் துறையில் இணைந்தே தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தோம்’’ என சுருக்கமாகத் தங்களை அறிமுகப்படுத்தி பேச ஆரம்பித்தவர் சகோதரிகளில் மூத்தவரான ஹயருநிஷா.

‘‘ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பார்கள். எங்கெல்லாம் மக்களுக்கான பிரச்னைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் சகோதரிகள் நாங்கள் இருப்போம்’’ என்றவர், பிரபல கல்லூரியின் இதழியல் துறையின் டிஜிட்டல் ஜர்னலிசம் பிரிவில் ஹயருநிஷா இரண்டாம் ஆண்டும், தங்கை நூர்நிஷா அதே துறையில், அதே கல்லூரியில் முதலாம் ஆண்டும் படிக்கிறார்களாம்.

புகைப்படக் கலைக்குள் சகோதரிகளாக வந்தது குறித்து மேலும் கேட்டபோது… ‘‘பள்ளியில் படிக்கும்போதே மாலை நேர வகுப்பில் போட்டோகிராஃபி வொர்க்‌ஷாப் ஒன்றை நடத்தினார்கள். நானும் தங்கையுமாக அதில் இணைந்தோம். அப்படியே புகைப்படக் கலையில் ஆர்வம் மேலிட இருவருமாக இந்தத் துறையில் தொடர ஆரம்பித்தோம்’’ என்ற ஹயருநிஷா, ‘‘விளிம்பு நிலை மக்களின் துயரங்களைப் பதிவு செய்து, தன்னெழுச்சியோடு இந்தத் துறையில் நாங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணம் எங்களுக்குள் இருக்கும் அதீத ஆர்வம்தான்’’ என்கிறார்.

‘‘துவக்கத்தில் போட்டோகிராஃபி வகுப்பிற்குள் நுழைந்தபோது, திருமணங்களிலும், மாடலிங் துறையில் இருப்பவர்களை மட்டுமே எடுப்பது என்றே தவறாக நினைத்திருந்தேன். அப்போது எதேச்சையாக புகைப்படக் கண்காட்சி ஒன்றில் நானும் பங்கேற்றேன். அங்கு பழனிகுமார் என்கிற மிகச் சிறந்த புகைப்படக் கலைஞரின் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் எனது சிந்தனையை மொத்தமாக மடைமாற்றி, டாக்குமென்டரி போட்டோகிராஃபி செய்வது மற்றும் விளிம்புநிலை மக்கள் துயரங்களை புகைப்படம் எடுப்பதென வேறொரு கோணத்தை காட்டினார். புகைப்படக் கலையின் அத்தனை நுட்பங்களையும் அவரிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். அவரிடம் இருந்தே எனது கலைப் பயணம் ஆரம்பித்தது.

கூடவே, நான் வடசென்னைப் பொண்ணு. வடசென்னை என்றதும் பொதுமக்கள் மனதில் தவறான எண்ணங்களே எப்போதும் முன்னால் நிற்கும். காரணம், திரைப்படங்களில் வடசென்னை குறித்து தவறான கண்ணோட்டங்களை விதைத்துள்ளனர். வடசென்னையில் வெளியில் தெரியாத விஷயங்களும் இருக்கின்றது. குறிப்பாக உழைக்கும் மக்கள் இங்குதான் அதிகம். மீன்பிடித் தொழிலும், மீன் மொத்த விற்பனையும் இங்குதான் நடைபெறுகிறது.

விளையாட்டுக்கும் இங்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது. நாங்கள் வாழுகிற வடசென்னை வாழ்க்கையை புகைப்படங்கள் வழியே எப்படிச் சொல்லலாம் என யோசித்ததில், Reframed North Chennai என்கிற தலைப்பில் நண்பர்கள் ஆறு பேர் இணைந்து புகைப்படங்களை எடுத்து கண்காட்சி ஒன்றை நடத்தினோம். “எங்கள் பார்வையில் எங்களின் வாழ்வை உங்களுக்குக் காட்டுகிறோம்” என்பதே இதன் பொருள்.இதற்காக பயணிக்கத் தொடங்கியதில், தொழிற்சாலைகள் வட சென்னையில் மட்டுமே அதிகமாக இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டோம்.

அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகள், அருகிலிருக்கும் கொசஸ்தலை ஆற்றில் கலந்து, சுகாதார கேடுகளை வடசென்னை மக்களுக்கு தருவதை காட்சிப்படுத்த முடிந்தது. எண்ணூர் தொழிற்சாலை ஒன்றில் நடந்த பிரச்னையை பதிவு செய்ய, தன்னார்வ அமைப்பினருடன் பயணித்ததில், நாங்கள் எடுத்த புகைப்படங்களை டாக்குமென்டரியாக்கி வெளிப்படுத்தினோம்.
‘வடசென்னை குறித்து நாங்கள் நினைத்திருப்பது ஒன்று. இங்கு வந்து பார்த்தால் உங்கள் புகைப்படங்கள் எங்களுக்கு வேறொன்றை உணர்த்துகிறது’ என கண்காட்சிக்கு வந்தவர்கள் விமர்சனங்களை மிகச் சிறப்பாகவே பதிவு செய்தனர். புகைப்படம் எடுப்பதன் முக்கியத்துவம் அப்போதுதான் எங்களுக்கே புரிய ஆரம்பித்தது.

புகைப்படம் எடுப்பது சும்மா சென்று ஒரு புகைப்படத்தை எடுத்துவிட்டு வருவது மட்டும் கிடையாது. மக்களிடம் பேசுவது, அவர்களின் சூழலைப் புரிந்துகொள்வது, அவர்களின் துயரங்களை, அவர்களின் வலிகளை எல்லாக் கோணங்களிலும் பதிவு செய்வது எனப் புரிய ஆரம்பித்தது. களத்தில் நாங்கள் சந்தித்த மக்களிடம் இருந்தே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டோம். பள்ளிக்கூடம் சொல்லித் தராத விஷயங்களையும் புகைப்படக் கலை எங்களுக்குக் கற்றுத் தந்தது.

தொடர்ந்து மக்களை அவர்களின் இடத்திலேயே சந்தித்து பேச ஆரம்பித்தேன். பல்வேறு இடங்களுக்கும் பயணித்ததில், பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்ததில், அவர் களின் பிரச்னைகளை புகைப்படங்கள் மூலமாவே வெளிப்படுத்தத் தொடங்கினோம். கதவைத் திறந்த உடனே முடிகிற வீடுகள். காலை நீட்டிப் படுக்க முடியாத அரசு குடியிருப்புகளைப் பதிவு செய்தோம். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும், உழைப்பையும், அவர்களின் வலிகளையும் தொடர்ந்து கேமராவில் பதிவேற்றினோம். கேமரா வழியே நாங்கள் பார்க்கும் விஷயங்கள் எங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

நிலத்தைக் கையகப்படுத்த அரசு குடிசைகளை அகற்றும்போது, மக்கள் படும் கஷ்டங்களை, அவர்கள் உள்மன உணர்வுகளை, குழந்தைகள் படும் துயரங்களை எல்லாம் கேமராவில் பதிவு செய்தோம். இயற்கையான விஷயங்கள்கூட வசதியானவர்களுக்கு ஒரு மாதிரியும், விளிம்புநிலை மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் இருப்பதை நேரில் காணவும் உணரவும் முடிந்தது.

தொடர்ந்து வடசென்னையில் வாழுகிற விளிம்பு நிலை மக்களைத் தேடித்தேடி பயணித்தோம். அவர்களின் பிரச்னைகளையும் கதைகளையும் புகைப்படங்கள் வழியே தொடர்ந்து ஆவணப்படுத்தத் தொடங்கினோம். எங்கெல்லாம் பிரச்னைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் சகோதரிகள் நாங்கள் கண்டிப்பாக இருப்போம்’’ என்ற நிஷா சகோதரிகள், ‘‘எங்கள் புகைப்படங்களைப் பார்த்து மக்கள் விவாதங்களை நடத்தினால் அதுதான் எங்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி’’ என்றவாறு இருவருமாக விடைபெற்றனர்.

டிஜிட்டல் ஜர்னலிசம் படிக்கிறோம்!

‘‘நாங்கள் சார்ந்த இஸ்லாமிய சமூகத்தில் சிறு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து விடுவார்கள். அதுவும் பெண்கள் போட்டோகிராஃபி துறையில் இருப்பதெல்லாம் தவறான விஷயமாகவே பார்க்கப்படும். வீட்டுக்குள் பெண்கள் இருக்கணும், குரான் படிக்கணும், ஸ்கூல் போகணும்… அவ்வளவுதான் எங்கள் வாழ்க்கை. இப்படியாகத்தான் நானும் வளர்க்கப்பட்டேன்.எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டுமே. அம்மா உணவகத்தில் வேலை செய்து வருகிற வருமானத்தில்தான் வீட்டு வாடகை, எனக்கும் தங்கைக்குமான கல்விச் செலவு, அவரின் மருத்துவச் செலவு எனக் கஷ்டப்பட்டு ஜீவனம் செய்து கொண்டிருந்தார் அம்மா.

நான் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்ததால், அப்படியே சினிமாவிற்குள் நுழைந்து விடுவேனோ என நினைத்த உறவினர்கள் கூடி, +2 தேர்வு எழுதியதுமே திருமணம் செய்ய முடிவானது. தேர்வை முடித்துவிட்டு வந்த ஒரு மாலை நேரத்தில், என்னை பூக்களால் அலங்கரித்து உறவினர் கூடி அறைக்குள் அமர வைத்துவிட்டனர். சிறிது நேரத்தில் நல்லவிதமாக நிச்சயம் முடிந்துவிட்டது. திருமணத்தை அடுத்த மாதமே நடத்திவிடலாம் எனப் பேசிக் கொண்டனர். இத்தனையும் என்னை கேட்காமலே எனக்குச் சொல்லாமலே நடந்துகொண்டிருந்தது.

எனக்கோ அழுகைவர கண்ணீர் வடிய நின்று கொண்டிருக்கிறேன். என் அழுகையை கண்டுகொள்ள அங்கு யாரும் இல்லை.திருமணம் நடந்தால் நான் புர்க்கா அணிய வேண்டும். மேலே படிக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே அடிமை மாதிரி இருக்க வேண்டும். வாழ்க்கையே போச்சு என யோசிக்க ஆரம்பித்தேன். எனக்கு அப்போது 17 வயதுதான். இளம் வயதில் திருமணம் என்கிற முறையில், எனது திருமணம் நட்பு வட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஜமாத்தில் அனைவரின் முன்பும் எனக்குத் திருமணம் வேண்டாம். மேலே படிக்கவே விரும்புகிறேன் என தைரியமாகச் சொன்னேன். காரணம், எது சரி, எது தவறு என்கிற புரிதலை நான் தேர்ந் தெடுத்த புகைப்படக் கலைத் துறை எனக்கு கற்றுத் தந்திருந்தது.

எந்த இடத்தில் எதை எதிர்த்து நான் நிற்க வேண்டும் என்கிற சுய சிந்தனையையும், யோசிக்கும் தன்மையையும், திருமணம் வேண்டாம் என எதிர்க்கும் தைரியத்தையும் புகைப்படக் கலைதான் எனக்கு முழுமையாய் தந்தது. தைரியத்தைக் கொடுத்தது. இன்று பிரபலக் கல்லூரியின் டிஜிட்டல் ஜர்னலிசம் துறை மாணவி நான். மேல் படிப்பை டெல்லி சென்று படிக்க நினைத்திருக்கிறேன்.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

 

The post விளிம்புநிலை வாழ்வை புகைப்படமாக்கும் நிஷா சகோதரிகள்… appeared first on Dinakaran.

Related Stories: