மேஜிக் செய்யும் ‘மில்லட்’ உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

சிறுதானிய உணவுகள் பற்றி நமக்கு விழிப்புணர்வு இருந்தாலும் அதை பக்குவமாக சமைக்க பலருக்கு தெரிவதில்லை. மேலும் அதில் என்னென்ன வகை உணவுகளை எல்லாம் செய்யலாம் என்பது குறித்தும் பலருக்கு புரியவில்லை. இதனாலேயே நாம் அதை வாங்கி சமைக்க யோசிக்கிறோம். ஆனால் சிறுதானிய உணவுகளில் பல வெரைட்டி உணவுகளையும் செய்யலாம் என்கிறார் மில்லட் மேஜிக் என்ற சிறுதானிய உணவகத்தின் நிறுவனரான ஆதீஸ்வரி. சென்னையில் இவரின் சிறுதானிய உணவகத்தில் 200க்கும் மேற்பட்ட உணவு வகைகள் கிடைக்கின்றன.

‘‘எனக்கு பூர்வீகம் திருநெல்வேலி. டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படித்துவிட்டு, பாலிடெக்னிக்கில் கொஞ்ச காலம் ஆசிரியையாக வேலை பார்த்தேன். திருமணம், குடும்பம், குழந்தைகள் என்ற பிறகு வேலையை தொடர முடியவில்லை. என் கணவர் சுரேஷ்குமாருக்கு சென்னையில் வேலை என்பதால் நான் இங்கு வந்து செட்டிலாகிட்டோம். எனக்கு சமையலில் ஆர்வம் அதிகம். வீட்டில் இருக்கும் போது சமைக்க கற்றுக் கொண்டேன். முக்கியமாக குக்கீஸ், கேக் வகைகளை செய்ய கற்றுக்கொண்டேன்.

அந்த சமயத்தில் ஒரு வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக 45 நாட்கள் அரிசி சாதம் சாப்பிடுவதில்லை என்று வேண்டிக் கொண்டேன். நமக்கு சின்ன வயதில் இருந்து அரிசி சாதம் தானே சாப்பிட்டு பழகி இருக்கிறோம். அதற்கு மாற்றாக என்ன சாப்பிடலாம்னு யோசித்தபோது நண்பர்கள் சிறுதானியங்களை சாப்பிடு அது நல்லது என அறிவுரை சொன்னார்கள். எனக்கு சிறுதானிய உணவுகள் அவ்வளவாக சமைத்து பழக்கமில்லை. சிறுதானியங்களை எப்படி சுவையாக சமைப்பது என்பதும் தெரியவில்லை. அதனால் அதை சமைத்து சாப்பிடவும் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் அதையே சுவையாக சமைக்க வேண்டும் என்ற பிடிவாதம் மட்டும் எனக்குள் இருந்தது. அது குறித்த தேடலில் இறங்கினேன். ஒவ்வொரு
சிறுதானியம் குறித்து ஆய்வு செய்தேன். அதனை பலவகையில் சமைக்கவும் செய்தேன். என்னுடைய போராட்டத்திற்கான விடையும் கிடைத்தது.

சிறுதானியத்தில் என்ன உணவுகளை எப்படி செய்யலாம் என்பதற்கான ரெசிபிகளை கண்டறிந்தேன். அப்போது என்னைப் போல் சிறுதானிய உணவினை சமைக்க விரும்புபவர்களும் இதே போல் பல சிக்கல்களை சந்தித்து இருப்பார்கள் என்று. நான் தெரிந்து கொண்ட ரெசி்பிக்களை மற்றவர்களுக்கு கற்றுத்தரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. நானும் என் தோழியும் இணைந்து சிறுதானியம் சமைப்பது குறித்த பயிற்சியினை தொடங்கினோம்.

அதில் பத்து ரெசிபிகள் கற்றுக்கொடுத்தோம். எங்களிடம் கற்றுக்கொண்டவர்கள் அதனை வீட்டில் செய்து பார்த்த போது அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே விஷயம், ‘‘நீங்கள் செய்யும் அளவிற்கு சுவையாகவும், பக்குவமாகவும் எங்களால் சமைக்க முடியவில்லை’’ என்பதுதான். அதுதான் நான் சிறுதானிய உணவகம் தொடங்க காரணம்’’ என்றவர் தன்னுடைய சிறுதானிய உணவகம் குறித்து பேசத் தொடங்கினார்‘‘சிறுதானிய உணவுகளை பக்குவமாக சமைக்க வேண்டும் என்பதுதான் அதில் இருக்கக்கூடிய சவால்.

அந்த பக்குவத்தை புரிந்து கொண்டாலே போதும் எல்லா சிறுதானியங்களையும் எளிதில் சமைத்து விடலாம். முதலில் 450 சதுர அடி கொண்ட இடத்தை வாடகைக்கு எடுத்தேன். அங்கு ஆட்கள் அமர்ந்து சாப்பிட இடம் இல்லாததால், பார்சல் மட்டுமே கொடுத்து வந்தேன். அதில் வெரைட்டி ரைஸ், சாம்பார் சாதம், தயிர் சாதம், ராகி களி அதற்கேற்ற குழம்பு, துவையல், பாயசம் போன்ற 8 அயிட்டம் கொண்ட காம்போ லஞ்சினை கொடுத்தேன். அதிலும் வித்தியாசம் வேண்டும் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான வெரைட்டி ரைஸும், துவையல் மற்றும் பாயசங்களை கொடுத்தேன். 100 ரூபாய் மதிப்பு கொண்ட காம்போவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உதவிக்கு பெண்கள் இருந்தாலும் இந்த உணவுகளை நான் மட்டும்தான் சமைப்பேன். காலையில் 4 மணிக்கு வேலையை தொடங்கினால் இரவு பத்து மணி வரை சமையல் வேலை இருக்கும்.

அப்ப எனக்கு வயது 48. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 5 சாப்பாடுதான் சமைத்தேன். சாப்பாட்டின் ருசி பலருக்கும் பிடிக்கவே பலரும் என்னிடம் ஆர்டர் செய்ய தொடங்கினர். அதனால் அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதற்கான வசதிகளை செய்தோம். சாப்பாட்டினை தொடர்ந்து முறுக்கு, கேக், தோசை, இட்லி என அனைத்து வகை உணவினையும் செய்ய ஆரம்பித்தேன். தற்போது 8 ஆண்டுகளை கடந்து விட்டோம். சென்னையில் எங்க உணவகம் இரண்டு கிளைகளில் இயங்கி வருகிறது.

எந்த நேரத்தில் யார் வந்தாலும், உணவு இருக்கும். சாப்பாட்டு காம்போவில் ஆரம்பித்து தற்போது 180க்கும் மேலான உணவு வகைகளை தருகிறோம். முறுக்கு, தட்டை, பிஸ்கெட், குக்கீஸ் லட்டு, மிக்சர் சாக்லெட்ஸ் என அனைத்துமே சிறுதானியத்தில் கொடுக்கிறோம். மைதா, சோடா, வெள்ளைச் சர்க்கரை, அஜினமோட்டோ எதுவும் கலப்பதில்லை. அதுபோன்று உணவகத்துக்கு வருபவர்களுக்கு பானகம் வழங்கிய பின்புதான் மற்ற உணவுகளை தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். வெட்டிவேர் கலந்த நீரைதான் குடிக்க கொடுக்கிறோம்.

எங்களுடைய சிக்னேச்சர் உணவு, மினி இட்லி வகைகள், சாமையில் தோசை, சிவப்பரிசி சாமை கலந்த ஆப்பம், பீட்சா என்று சொல்லலாம். உணவுகளுக்கான மசாலாக்களை அன்றாடம் தயார் செய்வோம். உணவுகள் இல்லாமல் சிறுதானியத்தில் பிரவுனி, குக்கீஸ் போன்ற ஸ்நாக்ஸ்களும், பொடி வகைகளும் உள்ளது. பருப்பு பொடி, ஆளி விதை, கறிவேப்பிலை பொடி, வேர்க்கடலை பொடி, இட்லி பொடி என பல பொடி வகைகளும் விற்பனைக்கு இங்குள்ளது.

ஃபுல் மீல்ஸ் காம்போவில் ஒருநாள் கோதுமை பரோட்டா என்றால், அடுத்த நாள் ராகி பரோட்டா இருக்கும். மாலை நேர ஸ்நாக்ஸாக வாழைப்பூ வடை, பீட்ரூட் வடை, மில்லட் பருப்பு வடை, மில்லட் போண்டா, வரகு இலை கொழுக்கட்டை, தினை பனீர் கட்லெட் இருக்கும். குழந்தைகளைக் கவரும் விதத்தில், அமெரிக்கன் கார்ன், பனீர், பேபி கார்ன் ஃபிரையும் தருகிறோம். இரவுநேர டிபனாக சிறுதானிய பொங்கல், ராகி இடியாப்பம், ரவா இட்லி, வரகு இடியாப்பம் தருகிறோம்.

பல கல்லூரிகளில் இருந்து சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த என்னை பேச அழைக்கிறார்கள். அங்கு ஸ்டால் வைக்கவும் வாய்ப்பு தந்தார்கள். சவாலாக ஒரு திருமணத்தில் ஆயிரம் பேருக்கு முழுக்க முழுக்க சிறுதானிய உணவுகளை மட்டுமே தயாரித்துக் கொடுத்தேன். அது எங்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக நினைக்கிறேன். இருந்தாலும், எனது தேடல் நிற்கவில்லை. மேலும் சிறுதானியத்தில் என்ன புதுமையாக செய்யலாம்என்ற உந்துதல் இருந்துகொண்டே இருக்கிறது. சொந்தமாக சிறுதானிய கேட்டரிங் ஒன்றை தொடங்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ஆதீஸ்வரி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post மேஜிக் செய்யும் ‘மில்லட்’ உணவுகள்! appeared first on Dinakaran.

Related Stories: