சுயமரியாதை முக்கியம்!.. கூட்டணி தர்மத்திற்குக் கட்டுப்பட்டுத் தேர்தல் பணிகளிலிருந்து மௌனமாய் வெளியேறுகிறோம்: பாமக அறிவிப்பு!!

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் தேர்தல் பணிகளிலிருந்து மௌனமாய் வெளியேறுகிறோம் என்று பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்நிலையில் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை என எந்தவித நிகழ்ச்சிக்கும் பாமகவை பாஜக மாநில தலைமையோ, வேட்பாளரோ அழைக்கவில்லை என கோவை மாவட்ட பாமக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை பாமக தேர்தல் பணிகளில் இருந்து மிகுந்த மனவருத்தத்துடன் வெளியேறுகிறோம் என தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் பட்டியிட்டுள்ளார். அதில்,

பிரச்சாரத்தில் வெளியேற காரணங்கள்
வேட்பாளர் பாமக அலுவலகத்துக்கு வரவில்லை. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவை அழைக்கவில்லை. 6 தொகுதியில் இரண்டு தொகுதிக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை. தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு பாமகவை அழைக்கவில்லை. எந்த ஒரு பிரச்சாரத்திற்கும் இதுவரை அழைக்கவில்லை.

சுயமரியாதை முக்கியம்
தேர்தல் வாக்குறுதி வெளியிட்டு நிகழ்ச்சிக்கு பாமகவுக்கு அழைப்பில்லை. கூட்டணி தர்மம் முக்கியம் தான் அதைவிட சுயமரியாதை முக்கியம். கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்கள் யாரையும் மதிப்பதில்லை,ஏறக்குறைய அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுமே மிகுந்த மனவருத்தத்தில் தான் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மௌனமாய் வெளியேறுகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

The post சுயமரியாதை முக்கியம்!.. கூட்டணி தர்மத்திற்குக் கட்டுப்பட்டுத் தேர்தல் பணிகளிலிருந்து மௌனமாய் வெளியேறுகிறோம்: பாமக அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: