சூர்யகுமார், இஷான் கிசான் அதிரடி ஆட்டம்; பெங்களூருவை வீழ்த்தியது மும்பை

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசியது. விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்து ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். கோஹ்லி 3 ரன் மட்டுமே எடுத்து பும்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வசம் பிடிபட, பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்னில் வெளியேறினார். ஆர்சிபி 3.4 ஓவரில் 23 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், டு பிளெஸ்ஸி – ரஜத் இணைந்து அதிரடியாக 82 ரன் சேர்த்தனர். ரஜத் 50 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கோட்ஸீ பந்துவீச்சில் இஷான் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். எனினும், டு பிளெஸ்ஸி – தினேஷ் கார்த்திக் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

டு பிளெஸ்ஸி 61 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். மகிபால் லோம்ரர் (0), சவுரவ் சவுகான் (9), விஜய்குமார் (0) ஆகியோர் பும்ராவின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அணிவகுத்தனர்.

பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. கார்த்திக் 53 ரன் (23 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), ஆகாஷ் தீப் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பும்ரா 5, கோட்ஸீ, மத்வால், கோபால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

17 பந்தில் அரைசதம் விளாசி அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 52 ரன் (4 சிக்சர், 5 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக இஷான் கிசான் 69 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். ரோகித் சர்மா 24 பந்தில் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 21, திலக் வர்மா 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

The post சூர்யகுமார், இஷான் கிசான் அதிரடி ஆட்டம்; பெங்களூருவை வீழ்த்தியது மும்பை appeared first on Dinakaran.

Related Stories: