ஏரோபிளேனில் வந்து இறங்கி ரோடு ஷோ காட்டுனா ஓட்டு போடுவாங்களா: முதல் முறையாக மோடியை தாக்கிய எடப்பாடி

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்துபொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியிலிருந்து அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார்கள். அதனால் தமிழகத்துக்கு என்ன பிரயோஜனம்?. தமிழகத்துக்கு ஏதேனும் திட்டத்தை கொடுத்து, அதனால் மக்கள் நன்மை பெற்றிருந்தால் சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு நேராக ஏரோபிளேனில் வந்து இறங்குறாங்க.

அதன்பிறகு ரோட்டில (ரோட் ஷோ) போராங்க. இதனால மக்கள் ஓட்டு போட்டுருவாங்களா. தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா? அறிவு திறன் படைத்தவர்களாவர். தமிழகத்தில் ஒருபோதும் அது நடக்காது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர், ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறுகிறார். இது தமிழக அரசு, கேரள அரசு இரு அரசுகளும் பேசி தீர்க்கக்கூடிய பிரச்னையாகும்.

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்ட அரசு அதிமுக அரசாகும். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லையென்றால், காங்கிரஸ் ஆட்சி. இப்படி இருக்கும்போது எப்படி இந்த ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை பாரதிய கட்சி தலைவர் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுக்க முடியும். இதற்கு மத்திய அரசு தலையிட்டு நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு குறைவாகும்.

காவிரி நதிநீர் பிரச்னையில் சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்வு பெற்றோம். காவிரி நதிநீர் பிரச்னையில் உச்சநீதிமன்றம் கூட தீர்ப்பு அளித்தது. ஆனால் மத்தியில் ஆளும் அரசு ஒத்துழைக்கவில்லை. கூட்டணியில் இருக்கும்போதே காவிரி பிரச்னையை தீர்க்காத நீங்க, இந்த பிரச்னையையா தீர்க்க போகிறீர்கள்?. எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள். எப்படி விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
கர்நாடகாவில் பாஜ ஆட்சி இருந்தது. அப்போது அங்கு இருக்கும் முதல்வர், நீர்வள துறை அமைச்சர் மேகதாது அணை கட்டப்படும் என்றனர். அப்போது எல்லாம் அண்ணாமலை வாய் திறந்து பேசவில்லை. சட்டப்படி, மேகதாது அணை கட்டக் கூடாது என ஏன் சொல்லவில்லை. இப்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இப்போது மேகதாது அணை குறித்து சொன்னால், தேர்தலில் தங்களுக்கு சுணக்கம் ஏற்பட்டு விடுமோ என தயங்குகின்றனர். இவ்வாறு எடப்பாடி பேசினார்.

கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி எடப்பாடி பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பேட்டி கொடுப்பதுதான் அண்ணாமலை வேலை’
எடப்பாடி பழனிசாமி பேசும்போது பாஜ தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சாடினார். அவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் ஒரு தலைவர் இருக்கிறார். அவர், பிளைட்டில் ஏறும்போதும் பேட்டி கொடுப்பார். இறங்கும்போதும் பேட்டி கொடுப்பார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். பேட்டி கொடுப்பதுதான் அவரின் வேலை. பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்க பார்க்கிறார். டெக்னிக்கா பேட்டி கொடுத்து மக்களை நம்ப வைக்க நினைக்கிறார். அவரின் வேலை தமிழ்நாட்டு மக்களிடத்தில் எடுபடாது’’ என்றார்.

The post ஏரோபிளேனில் வந்து இறங்கி ரோடு ஷோ காட்டுனா ஓட்டு போடுவாங்களா: முதல் முறையாக மோடியை தாக்கிய எடப்பாடி appeared first on Dinakaran.

Related Stories: