திருவள்ளூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொறிக்கும் பணி: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

திருவள்ளூர், ஏப். 11: திருவள்ளூர் நாடாளுமன்ற ெதாகுதிக்கானவாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து கல்லூரி, பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் செயிண்ட் ஆனிஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதிக்கான கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன் வளக் கல்லூரியிலும், ஆவடி, – பட்டாபிராம் தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து கல்லூரி, பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் செயிண்ட் ஆனிஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொறிக்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.

இந்தப் பணி முடிந்தவுடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தஷேக் அப்துல் ரகுமான், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, உதவி தேர்தல் அலுவலர்கள் பூந்தமல்லி கற்பகம், திருவள்ளூர் தனலட்சுமி, கலால் உதவி ஆணையர் ரங்கராஜன், வட்டாட்சியர்கள் பூந்தமல்லி ஆர்.கோவிந்தராஜ், திருவள்ளூர் வாசுதேவன், ஆவடி விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

பூந்தமல்லி: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தக்கூடிய 475 வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் புகைப்படம் பொருத்தும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆய்வு செய்தார். அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் மற்றும் வேட்பாளர் புகைப்படம் ஆகியவை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வாக்குப்பதிவின் போது வாக்குச் சாவடியில் கொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டு கண்ட்ரோல் யூனிட் சரி பார்க்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தம் பணி நடைபெற்று வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு 24 மணிநேரம் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் பாதுகாப்பு பணிகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

The post திருவள்ளூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொறிக்கும் பணி: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: