பொய்கை மாட்டுச்சந்தையில் வரத்து அதிகரித்தும் தேர்தல் நடத்தை விதிமுறையால் கால்நடைகள் விற்பனை மந்தம்

*வியாபாரிகள், விவசாயிகள் கவலை

வேலூர் : வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகமாக இருந்தாலும் விற்பனை மந்தமாக இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைகளில் சிறப்பு மிக்கது வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் இச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக ஏராளமான மாடுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

கறவை மாடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் காளைகள், உழவு மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கால்நடைகள் மட்டுமின்றி அதோடு இணைந்த காய்கறி சந்தையும் இங்கு நடக்கிறது. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ரூ.70 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை மந்தமாக உள்ளது. காரணம், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு செல்வதாக இருந்தால் அதற்கு உரிய ஆவணம் இருக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதியில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று கால்நடைகள் அதிகளவில் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். இருப்பினும் விற்பனை மந்தமாக இருந்தது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து வியாபாரிகள், விவசாயிகள் கூறியதாவது: தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்து வர முடியவில்லை. இதனால் மாடுகளை வாங்க விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.

பணத்தை எடுத்து வந்தால் நடுவழியில் அதிகாரிகள் பறிமுதல் செய்துவிடுகின்றனர். சிறுகசிறுக சேமித்த பணத்திற்கு என்ன ஆவணம் கொண்டு வர முடியும். சாதாரணமாக ஒரு கறவை மாட்டுக்கே ரூ. 50 ஆயிரம் தேவைப்படும் நிலையில் வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் பெரும்பாலும் வரவில்லை.

இந்த வாரமும் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் அதிகம் விற்பனைக்காக வந்திருந்தாலும், வியாபாரம் என்பது ரூ. 30 லட்சம் கூட தாண்டவில்லை. பல விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த மாடுகள் வாங்க வராததால் மீண்டும் அவர்கள் கொண்டு சென்றனர் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

The post பொய்கை மாட்டுச்சந்தையில் வரத்து அதிகரித்தும் தேர்தல் நடத்தை விதிமுறையால் கால்நடைகள் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Related Stories: