யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

பெரியபாளையம், ஏப். 10 : சிறுவாபுரி முருகன் கோயிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமையான நேற்று யுகாதி பண்டிகையும் கொண்டாடப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

பொது தரிசனம், ₹50 மற்றும் ₹100 கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டனர். கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு வேண்டுதலை நிறைவேறுவதற்காக கோயிலின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகளவிலான பக்தர்கள் வருகை புரிந்ததால் சிறுவாபுரியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான சிறுவாபுரி கோயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: