1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா கண்காணிப்பு பதற்றமான இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திருவண்ணாமலை மற்றும் ஆரணி ெதாகுதிகளில்

திருவண்ணாமலை, ஏப்.10: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில், 1,040 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் விரிவான முன்னேற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகிறது. மேலும், தேர்தல் பணிகளை கண்காணிக்க, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பார்வையாளர் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 1,722 வாக்குச்சாவடிகளில், 166 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், ஒரு வாக்குச்சாவடி அதிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல், ஆரணி மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 1,760 வாக்குச்சாவடிகளில், 108 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 3 வாக்குச்சாவடிகள் அதிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. அதைெயாட்டி, பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி திருவண்ணாமலை தொகுதியில் 475, ஆரணி தொகுதியில் 556 உள்பட மொத்தம் 1,040 வாக்குச்சாவடிகளை வெப்கேமரா பொருத்தி, ஆன்லைன் மூலம் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை நேரடியாக இந்த வாக்குச்சாவடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும். அதன்மூலம், தேர்தல் வாக்குப்பதிவு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும். மேலும், தேர்தல் பணியை ஒருங்கிணைக்க 192 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். மண்டல அலுவலர்களின் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு ெகாண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா கண்காணிப்பு பதற்றமான இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திருவண்ணாமலை மற்றும் ஆரணி ெதாகுதிகளில் appeared first on Dinakaran.

Related Stories: