தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களின் ஆதரவால் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேட்டி

திருவனந்தபுரம்: தமிழ்நாடு, கேரளா கர்நாடகா உள்பட தென்மாநிலங்களின் ஆதரவால் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கப் போவது உறுதி என்று கர்நாடக துணை முதல்வர் டி. சிவகுமார் ஆலப்புழாவில் கூறினார். கேரள மாநிலம் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.சி. வேணுகோபாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக கர்நாடக துணை முதல்வர் டி. சிவகுமார் நேற்று கேரளா வந்தார். பல்வேறு பகுதிகளில் வேணுகோபாலுடன் சேர்ந்து பிரசாரம் செய்த சிவகுமார், சேர்த்தலாவில் நடந்த ரோடு ஷோவிலும் கலந்து கொண்டார்.

அதன் பிறகு அவர் கூறியது: கர்நாடகா, கேரளாவில் ஏப்ரல் 26ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது. அங்கும் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும். ஆனாலும் ஆலப்புழாவில் போட்டியிடும் வேணுகோபாலுக்காக நான் பிரசாரம் செய்ய இங்கு வந்துள்ளேன். அதற்கு காரணம் இருக்கிறது. வேணுகோபால் தான் என்னை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஆக்கினார். என்னை தலைவராக்கினால் கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்று சோனியா காந்தியிடம் வேணுகோபால் தான் கூறினார். கடந்த தேர்தலில் தென்மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் தான் பாஜவுக்கு ஆதரவான அலை வீசியது. ஆனால் இந்த முறை அப்படி அல்ல.

கர்நாடகாவில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பாஜ அலை வீசவில்லை. கர்நாடகாவில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகாவில் நாங்கள் அளித்த 5 கேரண்டிகளையும் நிறைவேற்றி விட்டோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்பட தென் மாநிலங்கள் அளிக்கும் பலத்தால் இந்தியா முன்னணி இந்த முறை நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும். கேரளாவில் 20 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 20 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 10க்கும் அதிகமான தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களின் ஆதரவால் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: