ஐ.டி வேலையை துறந்து விவசாயத்தில் லட்சத்தில் லாபம் ஈட்டும் பட்டதாரி!

நன்றி குங்குமம் தோழி

கணவன்-மனைவி இருவருக்கும் ஐ.டி துறையில் வேலை. கை நிறைய சம்பளம். ஆனால் இவை எதுவுமே வேண்டாம் என்று தன் சொந்த ஊரில் விவசாயம் செய்ய குடும்பத்துடன் கிளம்பிவிட்டார் பிருந்தா. அவர் மட்டுமில்லாமல் கணவர், மாமனார், மாமியார் என அனைவரும் விவசாயத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள். ‘‘விவசாயம் நொடிந்துவிட்டது என்று கூறுவது தவறானது. கோவிட் காலத்தில் எங்க குடும்பத்திற்கு கைகொடுத்தது விவசாயம்தான். இன்று இதில் நாங்க லட்சத்தில் லாபம் பார்த்து வருகிறோம்’’ என்றார் பிருந்தா. விவசாயத்தில் ஈடுபடக் காரணம்… அதில் அவர் செய்யும் விவசாய முறைகள் பற்றி விளக்குகிறார் பிருந்தா.

‘‘நான் முதுகலைப் பட்டதாரி. நாங்க இருவருமே ஐ.டி துறையில்தான் வேலை பார்த்து வந்தோம். நாங்க தலைமுறை தலைமுறையாக சென்னையில்தான் வசித்து வந்தோம். எங்களின் குடும்பத் தொழில் தையல் கலை. என் மாமனார், அவரின் மூதாதையர்கள் எல்லோரும் இந்தத் தொழிலில்தான் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அதில் அவர்களால் பெரிய அளவில் முன்னேற்றம் பார்க்க முடியவில்லை. நாம் தைக்கும் துணிக்கு ஏற்பதான் வருமானமும் இருந்தது.

இதில் உள்ள சிக்கல்கள் தெரிந்ததால் என் கணவர் அந்தத் தொழிலில் ஈடுபடாமல், ஐ.டி துறையை தேர்வு செய்தார். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் கொரோனா சூறாவளியால் எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. நாங்க பார்த்து வந்த வேலை எங்களின் கைவிட்டுப் போனது. என்ன செய்வதுன்னு தெரியல. சென்னை போன்ற நகரத்தில் நிரந்தர சம்பாத்தியம் இல்லாமல் வாழ்வது என்பது அசாத்தியமான விஷயம்.

அதனால் கையில் இருக்கும் காசைக் கொண்டு கிராமத்தில் ஏதாவது ஒரு விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம்னு முடிவு செய்தோம். இயற்கையோடு ஒத்து வாழலாம்னு நாங்க அனைவரும் குடும்பமாக திட்டமிட்டோம். எங்கு வாங்கலாம் என்று யோசித்த போது தேனிதான் நினைவிற்கு வந்தது. அங்கு விவசாய நிலம் வாங்குவது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் வத்தலக்குண்டு பகுதியில் இரண்டரை ஏக்கரில் தென்னை தோப்பு விலைக்கு இருப்பதாக தெரிய வந்தது. மேலும் அது பராமரிப்பு இன்றி இருப்பதால் அந்த நிலத்தையே எங்களின் விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம்’’ என்றவர் அதன் பிறகு குடும்பத்துடன் வத்தலக்குண்டுவில் செட்டிலாகிவிட்டார்.

‘‘2019ல்தான் கோவிட் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்க ஆரம்பித்தது. விவசாயம் என்று முடிவு செய்யும் போது நிலமும் கிடைத்ததால், அதை வாங்கினோம். அந்த நிலம் பராமரிப்பு இன்றி இருந்ததால், அதை நாங்க சீராக்க எங்களுக்கு கிட்டத்தட்டஒரு வருட காலமானது. நிலம் அனைத் தும் சீரானதும், நாங்க அனைவரும் சென்னையை விட்டு முழுமையாக குடும்பத்தோடு வத்தலக்குண்டுவிற்கு இடம் பெயர்ந்தோம்.

எங்களின் விவசாய நிலத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கி விவசாயத்தினை குடும்பத்தோடு செய்து வந்தோம். கிட்டத்தட்ட இரண்டரை ஏக்கர் நிலம் அது. ஆனால் எங்களால் தினமும் வீட்டிற்கு சென்று நிலத்தினை வந்து பார்த்துக் கொள்வது என்று முடியாமல் போனது. அதனால் நிலத்திலேயே ஒரு பகுதியில் வீடு கட்ட முடிவு செய்தோம். தற்போது எங்களின் நிலத்திலேயே வீடு கட்டி, விவசாயத்தையும் பார்த்துக் கொள்கிறோம்’’ என்ற பிருந்தா, தான் செய்யும் விவசாய முறைகள் பற்றி கூறினார்.

‘‘முழுக்க முழுக்க எந்த வித ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில்தான் விவசாயம் செய்ய வேண்டும்னு நாங்க முடிவு செய்தோம். இயற்கை விவசாயத்திற்கு மாடு அவசியம் என்பதால், இரண்டு பசு மாடுகள், ஒரு காளை மாடு வாங்கினோம். அதன் சாணம்தான் எங்க விவசாய நிலத்தின் உரம். இப்போது ஐந்து அடுக்கு விவசாயம் தான் டிரண்டாக இருக்கிறது. ஒரு நிலத்தில் நமக்கு வேண்டிய காய்கறிகளை பயிர் செய்து அதை அறுவடை செய்யலாம்.

ஆனால் ஐந்து அடுக்கு விவசாயம் அப்படி இல்லை. வல்லுனர்களின் உதவி இல்லாமல் இந்த விவசாயத்தை செய்ய முடியாது. அந்த விவசாயம் தெரிந்தவர் ஒருவரை கண்டறிந்து எங்களின் நிலத்திற்கு வரவழைத்தோம். அவரின் ஆலோசனையில்தான் நாங்க இந்த ஐந்தடுக்கு விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தோம்.

ஐந்தடுக்கு விவசாயம் என்றால், ஒரு நிலத்தினை ஐந்து பகுதியாக சூரியன் வெளிச்சத்திற்கு ஏற்ப பிரித்து பயிர் செய்வது. அதாவது ஒரு பகுதியின் அடிமட்டத்தில் கிழங்கு வகைகள் பயிர் செய்வோம். அதன் அருகே செடி வகைகள், கொடிகளுக்கு பாத்தி கட்ட வேண்டும் என்பதால் செடிகளுக்கு அடுத்து கொடிகளை விளைவிப்போம். அதன் பிறகு மரங்கள். இந்த விவசாயத்திற்கு சூரியனின் கதிர்கள் மிகவும் அவசியம். எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு சூரிய ஒளி வேண்டும் என்று நிர்ணயித்து அதற்கு ஏற்ப அந்தந்த இடத்தில் பயிர் செய்வோம்.

உதாரணத்திற்கு ஒரே நிலத்தில் நாம் பலதரப்பட்ட செடிகளை நட்டு விவசாயம் செய்ய முடியும். பப்பாளி மரம் ஒரு இடத்தில் பயிர் செய்யும் போது அதன் அருகே குறிப்பிட்ட தூரம் இடைவெளி விட்டு கிழங்கு வகைகளை பயிர் செய்யலாம். அதேபோல் மறுபடியும் சிறிது இடைவெளி விட்டு வாழைக்கன்றை நடலாம். இடைப்பட்ட இடைவெளியில் சாமந்தி பூச்செடிகளை விளைவிக்கலாம். நிலத்தின் பாத்தி ஓரத்தில் கீரை வகைகளை பயிர் செய்யலாம். இதுதான் ஐந்து அடுக்கு விவசாயம். நாங்க மஞ்சள் கப்பக்கிழங்கு, மா இஞ்சி, தென்னை, முருங்கை, வாழை, செவந்தி, கத்தரிக்காய், அவைரக்காய், கீரை என வீட்டிற்கு தேவைப்படும் அனைத்து காய்கறிகள், கிழங்கு மற்றும் பூ வகைகளை விவசாயம் செய்து வருகிறோம்.

இவை தவிர கோழி, வாத்து வளர்ப்பதால் அதன் முட்டைகளையும் விற்பனை செய்கிறோம். மேலும் பசு மற்றும் ஆட்டுப் பாலில் இருந்து பால் மற்றும் நெய் உற்பத்தி செய்கிறோம். தேய்காயில் இருந்து சுத்தமான செக்கு எண்ைண தயாரிக்கிறோம். மேலும் பயோகேஸ் தயாரிக்கும் இயந்திரம் பொருத்தி இருப்பதால், மாட்டுச் சாணம் மூலம் எங்கள் வீட்டுச் சமையலுக்கு தேவையான எரிவாயுவினை இதனைக் கொண்டு பெற்றுக் கொள்கிறோம். நாங்க இன்டகிரேடெட் விவசாயத்தை பின்பற்றுவதால், அனைத்திற்கும் இயந்திரம் கொண்டு இயக்குகிறோம். தேங்காய் காய்ந்த பிறகு தானாகவே கீழே விழுந்துவிடும் என்பதால், அதனை பறிக்க ஆட்கள் அவசியமில்லை.

அதேபோல் தேங்காயை உரிக்கவும் இயந்திரம் உள்ளது. உரித்த தேங்காயை சோலார் மூலம் இயக்கப்படும் டிரையர் மூலம் காயவைத்து அதை கொப்பரையாக மாற்றி அதில் இருந்து தேங்காய் எண்ணையை உற்பத்தி செய்கிறோம். மேலும் விவசாயத்திற்கு நாங்க எந்தவித ரசாயனமும் பயன்படுத்துவதில்லை. பஞ்சகவ்ய சாண உரம், மாட்டுக் கோமியம். ஜீவாமிர்தம் மீன் அமிலம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள்தான் உரமாக பயன்படுத்தி வருகிறோம். குடும்பமாகத்தான் நாங்க விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் விவசாயம் செய்ய ஆர்வம் இருந்தால் எந்த சிரமங்களையும் கடந்து தொடர்ந்து பயணிக்க முடியும்.

நாங்க இந்த விவசாயத்தை வியாபார நோக்கத்திற்காக செய்யவில்லை. முழுமையாக இயற்கை முறையில் விவசாயம் செய்து அதனை நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு கொடுக்க வேண்டும். ஆனால் நாங்க விவசாயம் ஆரம்பித்த போது, எங்களை சுற்றியுள்ளவர்கள், உற்றார், உறவினர்களும் இதெல்லாம் ஒரு வேலையா என்று கேலி செய்தார்கள். அதற்கெல்லாம் சோர்வடையாமல் எங்களால் ஜெயித்து காட்ட முடியும் என்ற குறிக்கோளில்தான் குடும்பத்தோடு களமிறங்கினோம், வெற்றியும் கண்டிருக்கிறோம்’’ என்றார் பிருந்தா.

The post ஐ.டி வேலையை துறந்து விவசாயத்தில் லட்சத்தில் லாபம் ஈட்டும் பட்டதாரி! appeared first on Dinakaran.

Related Stories: