இயற்கை காஸ்மெடிக் பொருட்கள் தயாரிப்பில் கலக்கும் இல்லத்தரசி!

நன்றி குங்குமம் தோழி

என்னதான் பல பெயர்களில், உயர்ந்த ரகங்களில் பல அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், நம் பாட்டிகள் மற்றும் அம்மாக்கள் பயன்படுத்திய சாதாரண பொருட்களில் இருந்து கிடைக்கும் அழகும், பொலிவும் வேறு எதிலும் கிடைப்பதில்லை. தற்போது பல இடங்களில் ஹாண்ட் மேட் சோப்புகள், ஷாம்புகள், க்ரீம்கள் என பலர் உற்பத்தி செய்து வருகிறார்கள். இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது என்று கூறினாலும், அவை முற்றிலும் அவர்கள் சொன்ன கோட்பாடுகளில் உற்பத்தி செய்கிறார்களா என்பது சந்தேகம்தான். ஒருசிலர், இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தங்களின் பொருட்களின் உற்பத்தி வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி இருந்தும் அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்கு வரவே பல மாதங்கள் அல்லது வருடங்களாகிறது. அந்த வழியில் இயற்கை முறையில் ஆர்கானிக் சோப்புகள் தயாரிக்க ஆரம்பித்து குறைந்த நாட்களிலே உள்ளூர் என்றில்லாமல், வெளிநாடுகளுக்கும் தங்களது சோப்புகள், ஷாம்புகள், க்ரீம்கள், தலை முடிகளுக்கான எண்ணெய், பேஸ் மாஸ்க் போன்றவற்றை எக்ஸ்போர்ட் செய்து வருகிறார் ஈரோடு மாவட்டம், வேப்பம்பாளையத்தைச் சேர்ந்த நிகிலா.

‘‘பொதுவாகவே பெண்களுக்கு அழகு சாதன பொருட்கள் மேல் தனி ஆர்வம் உண்டு. குறிப்பாக இயற்கையான பொருட்களைக் கொண்டு, எந்தவொரு ரசாயனங்கள் சேர்க்கப்படாமல் சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் என்றால், அதைத் தேடி சென்று வாங்க தனி வாடிக்கையாளர்களே இருக்காங்க’’ என்று பேச ஆரம்பித்தார் நிகிலா.

‘‘சொந்த ஊர் ஈரோடு. எனக்கு இயற்கையான பொருட்கள் மீது ஆர்வம் எப்போதும் அதிகம். அதைப் பற்றி தெரிந்து கொள்ளவும் செய்வேன். சும்மா தெரிந்ததை வீட்டில் தயாரித்து அதை எங்க வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தோம். இப்போதுதான் ரசாயனம் அற்ற வாழ்க்கை வாழ்வது குறித்து பல விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. சாப்பிடும் உணவு முதல் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்கள் வரை இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது என்றால் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதை புரிந்து கொண்டு, நாங்க எங்களுக்காக தயாரிக்கும் இந்தப் பொருட்களை ஏன் ஒரு பிசினசாக செயல்படுத்தக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அப்படி துவங்கப்பட்டதுதான் ‘நாயகி காஸ்மெடிக்ஸ்’. எங்களுடைய நிறுவனம் வேப்பம்பாளையம் ஊரில்தான் அமைந்திருக்கு.

பொதுவாக ஒரு பிசினஸ் துவங்கும் போது நாம் தயாரிக்கப் போகும் ஒவ்வொரு பொருட்களும் மார்க்கெட்டில் எவ்வாறு விற்பனையாகிறது, மக்களிடம் அதற்கான வரவேற்பு, வாடிக்கையாளர்களின் திருப்தி என்ன என்று ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு தான் அந்தப் பொருளை உற்பத்தி செய்வதற்கான அடுத்தக்கட்ட வேலையில் ஈடுபடுவார்கள். அப்படித் தான் நாங்களும் ஆய்வு செய்தோம்.

அதில் எந்தவித ரசாயனமும் இல்லாமல் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்று புரிந்து கொண்டோம். ஒரு நிறுவனம் அமைத்து அதில் நாங்க சோப்பு, ஷாம்பு, க்ரீம், பேஸ் மாஸ்க், பேஸ் வாஷ், ஹேர் சீரம், பேஸ் க்ரீம் மற்றும் லிப் பாம் போன்று பல பொருட்களை உற்பத்தி செய்து வருகிறோம்’’ என்றவர் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை பற்றி விளக்கினார்.

‘‘ஆவாரம் பூ, செம்பருத்தி, ரோஜா, ரெட் வைன், காபி&ஏலக்காய், புதினா, ஸ்ட்ராபெர்ரி, அவகேடா, ஆட்டுப்பால், குங்குமப்பூ, குப்பைமேனி, பீட்ரூட், கேரட் மற்றும் மேலும் பல மூலிகைகள், பழங்கள் என 20க்கும் மேற்பட்ட சோப்புகள், 15 வகையான ஷாம்புகள், 10 சரும க்ரீம்களும், பேஸ் வாஷ்கள், லிப் பாம்கள் என அனைத்தும் ஆர்கானிக் முறையில் நாங்க தயார் செய்கிறோம். சில பொருட்களை வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம்.

அதற்காக எங்க நிறுவனத்தில் நாங்க தயாரிக்கும் ஒவ்வொரு பொருட்களையும் ஆய்வு செய்ய தனிப்பட்ட ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்கள் எந்தவித ரசாயனம் கலக்காமல் எவ்வாறு பொருட்களை தயாரிக்கலாம்னு ஆலோசனை வழங்குவார்கள். இது நாள் வரை என்னிடம் பொருட்கள் வாங்கியவர்கள் யாரும் எந்தவொரு எதிர்மறையான கருத்துக்களையும் சொன்னது கிடையாது. நிறுவனம் ஆரம்பித்த குறைந்த நாட்களில், நிறைய வாடிக்கையாளர்களை சம்பாதிக்க காரணம் எங்க பொருளின் தரம்’’ என்று புன்னகைத்தார்.

‘‘நாங்க ஆர்டரின் பேரில் பொருட்களை தயாரித்து வந்தாலும், எங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அருகில் உள்ளவர்களும் வாங்கிச் ெசல்கிறார்கள். நாங்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் அனைத்துமே இங்கு உள்ளூரில் கிடைக்கும் பொருட்கள் தான். ஒரு சிலது மட்டும் வெளி மாநிலங்களில் இருந்து வரவைக்கிறோம். எண்ணெயும் செக்கில் ஆட்டப்பட்டு சுத்தமாக தயாரிக்கப்படுவதைதான் உபயோகம் செய்கிறோம். சிலருக்கு சருமப் பிரச்னை காரணமாக அவர்களுக்கு சரும நிபுணர்கள் குறிப்பிட்ட சோப்பினை பரிந்துரை செய்திருப்பார்.

அவர்களின் தேவைக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் சோப், க்ரீம்களும் தயாரித்து தருகிறோம். இப்போதுதான் ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்ப பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அந்தக் காலத்தில் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இயற்கையான முறையில் கிடைத்த பொருட்களை வைத்து மட்டுமே தங்களின் சருமங்களை பொலிவுடன் பார்த்துக் கொண்டாங்க நம் முன்னோர்கள்’’ என்றவர், அவர்கள் தயாரிக்கும் காஸ்மெடிக்ஸ் பொருட்கள் குறித்த வர்க்‌ஷாப்புகளும் நடத்துவதாக குறிப்பிட்டார்.

‘‘கல்லூரிப் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஒரு நாள் வர்க்‌ஷாப்பினை நடத்தி வருகிறோம். இதனை நேரடியாக மட்டுமில்லாமல் ஆன்லைன் முறையிலும் செய்து வருகிறோம். ஒரு நாள் நடக்கும் வர்க்‌ஷாப்பில் நாங்க தயாரிக்கும் 15 பொருட்கள் குறித்து விளக்கங்களுடன் கற்றுக்கொடுப்போம். அதில் ஏழு பொருட்களை அவர்களுக்கு அங்கு செயல்முறை வடிவமாகவும் செய்யச் சொல்கிறோம். இதில் கலந்து கொள்ளும் பல பெண்கள் தனிப்பட்ட முறையில் சிறிய அளவில் தொழில் செய்கிறார்கள்.

அதற்கான மூலப்பொருட்களையும் நாங்க சப்ளை செய்கிறோம். சோப், ஷாம்பு தவிர பவுடர், வாசனை திரவியம், லிப்ஸ்டிக் போன்றவையும் செய்து தரச்சொல்லி வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள். அதனை தயாரிக்கும் திட்டம் எதிர்காலத்தில் உள்ளது. இவை அனைத்தும் ஹாண்ட்மேட் பொருட்கள் என்பதால், சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்’’ என்றார் நிகிலா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post இயற்கை காஸ்மெடிக் பொருட்கள் தயாரிப்பில் கலக்கும் இல்லத்தரசி! appeared first on Dinakaran.

Related Stories: