மண்டலா வரைவது மன அழுத்தத்தை குறைக்கும்!

நன்றி குங்குமம் தோழி

‘‘கோபமான மனநிலை அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது மண்டலா(Mandala) வரைய ஆரம்பித்தால், முடிக்கும்போது நிச்சயம் மனநிலை மாற்றம் அடைவதுடன், தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். மண்டலா என்பது ஹீல் வித் ஆர்ட். அதாவது, ஸ்ட்ரெஸ் பஸ்டர். சுருக்கமாய் மண்டலா என்பது நடுவில் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி விரிவுபடுத்திக் கொண்டே செல்வது.

சிலர் எப்போதும் வருத்தமான மனநிலையுடனும், மனச்சோர்வுடனுமே இருப்பார்கள். ஏன் இப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்டால்? அவர்கள் நிலைக்கான காரணத்தை அவர்களுக்கே தெளிவாகச் சொல்லத் தெரியாது. மகிழ்ச்சியான மனநிலைக்கு இங்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரே மாதிரியான ஸ்டீரியோ டைப் வாழ்க்கை அல்லது ஒரே மாதிரியான பேட்டனிலே இவர்கள் வாழ்கிறார்கள்.

ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது ரேண்டமாக மண்டலா ஆர்ட் வரைந்தால் அவர் முடிக்கும்போது அவருக்குள் இருந்த மன அழுத்தம், கோபம், குரோதம், குழப்பம் இவற்றிலிருந்து நிச்சயம் மனநிலை மாறுகிறது. கூடவே குழப்பம் இல்லாமல் முடிவெடுக்க (decision making) அவரால் முடியும்’’ என்கிறார் மண்டலா பயிற்சியாளர் சௌஜனி ராஜன். ‘‘மண்டலா என்பது சமஸ்கிருத வார்த்தை. தமிழில் இதற்குச் சரியான அர்த்தம் வட்டம் (circles). அதாவது, மண்டலா வட்டத்தை ஜியோமெட்ரிக் (Geometric) வைத்தும் வரையலாம். ரேண்டமாகத் தோன்றியதையும் வரையலாம். வட்டத்திற்குள் விதவிதமான டூடுல்ஸ் செய்தும் வரையலாம். அதேபோல், நாம் வரையும் மண்டலா கருப்பு வெள்ளையாகவோ அல்லது கலர்ஃபுல்லாகவும் இருக்கலாம்.

எதெல்லாம் வட்ட வடிவில் இருக்கிறதோ அதெல்லாம் மண்டலா. ஒரு புள்ளியில் தொடங்கி வாசலில் போடும் ரங்கோலி, கோயில் மேற்கூரையில் உள்ள வட்ட வடிவ ஆர்ட், மைவிரல் அழுத்தத்தில் (finger prints) வரும் டிசைன், பெண்கள் உடுத்தும் சேலைகளில் உள்ள வட்டவடிவ பிரின்ட், டைல்ஸ்களில் இருக்கும் டிசைன் என அனைத்துமே மண்டலா ஆர்ட்டிற்குள் இடம் பெறும். மண்டலா ஆர்ட்டிற்குள் விருப்பத்திற்கு எந்த மாதிரியான பேட்டர்ன்களும் செய்யலாம்.

இயல்பில் நான் வழக்கறிஞர். ஆனால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும், மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்கவுமே தேவையானவர்களுக்கு மண்டலா வகுப்பை எடுத்து வருகிறேன்’’ என்ற சௌஜனி, இதற்காக 3 மாத தெரபிடிக் ஆர்ட் லைஃப் பயிற்சி மற்றும் 6 மாத ஆர்ட் தெரபி பிராக்டிஷ்னர்ஸ் பயிற்சிகளை சான்றிதழ் படிப்பாக முடித்திருக்கிறார்.‘‘ஒருவர் வரையும் ஆர்ட்டை வைத்தே அவரின் மனநிலையை கண்டுபிடிப்பது ஆர்ட் தெரபி. ஒருவர் மனநிலையை அறிந்து, அதை கவுன்சிலர் அல்லது தெரபிஸ்டுகளுக்கு என்னால் சொல்லிவிட முடியும்.

இதற்காகவே நான்கிளினிக்கல் (nonclinical) முறையில் பயிற்சி எடுக்கிறேன்’’ என்றவர், ‘‘மண்டலா ஆர்ட் வழியாக மனநிலையை மாற்றுவதே தெரபிடிக் ஆர்ட் லைஃப் கோச். இதையும் நான் செய்து வருகிறேன்’’ என்கிறார். ‘‘நமது மனநிலையை எங்கிருந்து எங்கு கொண்டு செல்கிறோம் என்பதே மண்டலா பயிற்சியில் சொல்லித் தரப்படும். மண்டலா ஆர்ட்டில் கிரியேட்டிவ் பிரைன், லாஜிக்கல் பிரைன் என இரண்டு பிரைன்களையுமே முழுமையாய் பயன்படுத்தப்படும்.

வரைந்து முடிக்கும்போது நமது இடது மற்றும் வலது மூளை இரண்டும் சரியான விகிதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். மன அழுத்தத்தில் ஒருவர் இருக்கும்போதும், முடிவுகளை எடுக்க முடியாமல் தவிக்கும்போதும், மனதுக்குள் மண்டலா ஆர்ட் வடிவத்தை செட் செய்துகொண்டு வரைய ஆரம்பித்தால், முடிக்கும்போது அவர் மனநிலை அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, தெளிவான முடிவுகளை எடுக்கும். முக்கியமாக தேர்வு பயத்தில் தவறான முடிவுகளில் இருக்கும் 16 வயதைத் தாண்டிய மாணவர்களுக்கு மண்டலா ஆர்ட் பயனுள்ள ஒன்று. தவறான முடிவுகளில் இருந்து அவர்களை விடுவித்து ஹேப்பி மனோநிலைக்கு கொண்டு செல்லும். இதனால்தான் மண்டலா வரைபவர்கள் மகிழ்ச்சியான மனோநிலையில் இருக்கிறார்கள்’’ என்று முடித்தார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post மண்டலா வரைவது மன அழுத்தத்தை குறைக்கும்! appeared first on Dinakaran.

Related Stories: