நகைகளை இப்படித்தான் வடிவமைப்பு செய்கிறார்கள்!

நன்றி குங்குமம் தோழி

நகைகளை விரும்பாத பெண்களே இல்லை… ஒரு மெல்லிய தங்கச் செயினாவது தங்களின் கழுத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சாதாரண டிசைனர் செயின் முதல் பெரிய காசு மாலை மற்றும் வைர நகைகள் பெரியதாகவோ அல்லது சிறிய வடிவமாக இருந்தாலும், அதனை மிகவும் கவனமாக வடிவமைக்க வேண்டும். நகையில் இணைக்கப்படும் சின்ன முத்தும் மிகவும் நுணுக்கமாக பொருத்த வேண்டும். பார்க்க அழகாகவும் அணியும் போது வசீகரமாக தோன்றும் இந்த நகைகளை உருவாக்க ஒரு தனிப்பட்ட குழுவே செயல்பட்டு வருகிறது. முன்பு பொற்கொல்லர்தான் நகை செய்து தருவார். ஆனால் இன்று அப்படி இல்ைல.

நாம் வாங்கும் ஒவ்வொரு நகைகளும் தனித்து இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். இவர்களுக்காகவே வைரம் மற்றும் தங்க நகைகளுக்கு என தனிப்பட்ட வடிவமைப்பாளர் குழுவினை அமைத்து அதன் மூலம் அவர்கள் விரும்பும் டிசைன்களை உருவாக்கி தருகிறார்கள் உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர். ஒரு நகை எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் வடிவமைக்கப்பட்டு வாடிக்கையாளரின் கழுத்தினை அலங்கரிக்கிறது என்பது குறித்து இதன் நகை வடிவமைப்பாளரான அகல்யா விளக்கம் அளித்தார்.

‘‘நான் NIFTல் நான்கு வருடம் ஆக்சசெரிஸ் டிசைனிங் குறித்து படிச்சேன். அதில் நகை வடிவமைப்பது எப்படின்னு என்னுடைய ஸ்பெஷாலிட்டி படிப்பு முடிச்ச தும், இங்கு வடிவமைப்பாளரா வேலைக்குச் சேர்ந்தேன். பொதுவாக ஒரு நகையை வடிவமைக்கும் போது அதற்கு பல மீடியம்களை நாங்க இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கொள்வோம். அது டிசைனுக்கான சாவி என்றும் சொல்லலாம்.

நம்மைச் சுற்றி உள்ள விஷயங்களே நமக்கான டிசைனாக மாறும். இயற்கை கூட எங்களுக்கு ஒரு வகையான இன்ஸ்பிரேஷன் தான். கொடி வகை சார்ந்த செடி படர்ந்து இருப்பதைப் பார்த்துக்கூட அதன் இலைகள் மற்றும் காம்புகள் கொண்டு அழகான நகையினை உருவாக்க முடியும். சில சமயம் வாடிக்கையாளர்களும் தங்களுக்குப் பிடித்த டிசைனை கொண்டு வருவார்கள். எல்லாவற்றையும் விட இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப டிரண்ட் என்ன என்று பார்ப்போம். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் நாங்க நகையினை வடிவமைப்போம்’’ என்றவர் அதன் செயல்முறை குறித்து விவரித்தார்.

‘‘முதலில் ஒரு டிசைனை தேர்வு செய்து அதனை நாங்க கம்ப்யூட்டரில் ஸ்கெட்ச் செய்வோம். அதன் பிறகு அந்த டிசைனுக்கான அங்கீகாரம் கிடைத்ததும் அதனை 3டி முறையில் வடிவமைத்து, ராபிட் புரோடோடைப் முறைக்கு எடுத்துச் செல்லப்படும். அதாவது, நாம் வடிவமைக்கப்படும் டிசைன்களை மெழுகு அல்லது ரெசினில் அச்சு எடுக்கும் முறைதான் இது. அதில் நேரடியாக உருக்கப்பட்ட தங்கத்ைத சேர்த்தால் மெழுகு உருகி டிசைன் சரியாக வராது. அதனால் மெழுகில் உள்ள டிசைனை பிளாஸ்டர் ஆப் பாரீசில் அச்சு எடுக்க வேண்டும். அதில்தான் தங்கத்ைத உருக்கி ஊற்றுவோம். அதை காஸ்டிங் என்று குறிப்பிடுவோம். அதன் பிறகு டிசைனிற்கு ஏற்ப சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கப்படும்.

பிறகு பாலீஷ் மற்றும் கற்கள் பதிக்கப்பட்டு, அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, நகையின் எடை கணிக்கப்பட்டு, ஷோரூமிற்கு விற்பனைக்கு வைக்கப்படும். வைர நகைகளை காஸ்டிங் முறையிலும், தங்க நகைகளை கைகளால்தான் இன்றும் டிசைன் செய்கிறார்கள். தங்க நகைகளில் சில பாரம்பரிய டிசைன்களான மயில், மாங்காய், லட்சுமி போன்ற வடிவங்களுக்கு ஏற்கனவே டை எடுத்து வைத்திருப்பார்கள். அதைக் கொண்டு நகையினை டிசைன் செய்வார்கள்.

நாங்க டிசைன் செய்யும் ஒவ்வொரு நகைகளும் இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் விரும்புபவைதான். இப்போது அம்பானி அவர்களின் இல்லத் திருமண நிச்சயதார்த்த விழாவில் பலரும் எமரால்ட் பதிக்கப்பட்ட நகையினைதான் அணிந்திருந்தார்கள். அதை நாங்க வேறு ஒரு டிசைனில் கொண்டு வருவோம்’’ என்றவர் நகை வடிவமைப்பது மட்டுமில்லாமல் அனைத்து துறை சார்ந்தும் தெரிந்து வைத்திருக்கிறார்.

‘‘ஒரு நகை மார்க்கெட்டில் எவ்வாறு டிரண்டாகிறது, அதனை புகைப்படம் எடுப்பது என அனைத்து துறை குறித்தும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அதன் மூலம் ஒவ்ெவாரு விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடியும். உடைக்கு ஏற்பவும் நகைகளை வடிவமைக்க தெரிந்திருக்க வேண்டும். கடந்த மாதம் சென்னையில் எக்ஸ்க்ளூசிவ்வாக எங்க கடையில் வடிவமைக்கப்பட்ட நகைகளுக்கான ஃபேஷன் ஷோ நடைபெற்றது. அதில் கவுரங்கஷா அவர்கள் டிசைன் செய்த புடவைகளுக்கு பார்த்து பார்த்துதான் நகையினை டிசைன் செய்திருந்தோம்.

புடவையின் நிறம் மற்றும் வடிவத்திற்கு ஏற்ப நகை டிசைன்கள், அதில் பொறிக்கப்படும் கற்கள் முதற்கொண்டு திட்டமிட்டோம். அதன் அடிப்படையில் சமகாலம் மற்றும் பாரம்பரிய டிசைன்களை அமைத்திருந்தோம்’’ என்றவர் ஆர்டிசன் விருதும் பெற்றுள்ளார்.‘‘ஒவ்வொரு வருடமும் ரத்தினம் மற்றும் நகை மேம்பாட்டு கவுன்சிலால் நகை வடிவமைப்பாளர்களுக்கு டிசைனிங் போட்டி நடத்தப்படும். கடந்த வருடமும் நடைபெற்றது. அதில் நான் அசாதாரண பொருள் கொண்டு நகையினை வடிவமைக்கும் போட்டியில் பங்கு பெற்று, பனை உறையைக் கொண்டு பிரேஸ்லெட் ஒன்றை வடிவமைத்தேன். அதற்கு எனக்கு விருது கிடைத்தது’’ என்றார் அகல்யா.

அனுப்பம் கர்மாகர், தலைமை வடிவமைப்பாளர்

“நாங்க மாஸ் தயாரிப்பு செய்வதில்லை. அன்றைய டிரண்டிற்கு ஏற்ப ஒவ்வொரு நகைகளையும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கிறோம். சர்வதேச அளவில் நகைகளின் மார்க்கெட் நிலவரம் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பதான் நாங்க டிசைனில் கவனம் செலுத்துகிறோம். கடந்த மாதம் சென்னையில் முதல் முறையாக வி.பி.ஜே நகைகளுக்கான ஃபேஷன் ஷோ ஒன்றை நிகழ்த்தியது. அதில் சமகாலம் மற்றும் பாரம்பரிய நகைகளை நாங்க மக்களின் பார்வைக்காக வைத்திருந்தோம்.

குறிப்பாக உடை அமைப்பாளர் கவுரங்கஷாவின் புடவைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு நகையும் பார்த்து பார்த்து ஆறு மாதமாக அதில் ஈடுபட்டு வந்தோம். இந்த நகைகளின் சிறப்பம்சமே அனைத்தும் கன்வர்டபில் நகைகள். பொதுவாக பெண்களுக்கு திருமண விழா என்றாலுமே முகூர்த்தத்திற்கு ஒரு நகையும், மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வேறு ஒன்றையும் அணிய விரும்புவார்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வாங்குவதற்கு பதில் ஒரே நகையை பல நிகழ்வுக்கு அணியும்படி அமைத்திருந்தோம். உதாரணத்திற்கு பிரைடல் நெக்லெஸ் என்றால், அதில் 13 வகையான டிசைன் நகைகளை மாற்றி அமைக்க முடியும்.

பெரிய ெநக்லசின் ஒரு பகுதியை பிரித்து எடுத்தால் அதனை மாலை நேர பார்ட்டிக்கு அணியும் சிம்பில் நகையாக மாற்றிக்கொள்ள முடியும். இதை எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என்பதற்கான குறிப்பும் தருகிறோம். வாடிக்கையாளர்களே எளிதாக பிரித்து இணைத்துக் கொள்ளும்படி அமைத்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து சின்ன நகையிலும் இதே கன்வர்டபில் முறையினை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. அதற்கான ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் பிளாட்டினம் மற்றும் செராமிக் கொண்டு ஒரு புதிய கலெக்‌ஷனை அறிமுகம்
செய்கிறோம். நகைகளில் பிளாட்டினத்துடன் செராமிக் இணைக்கப்படுவது இந்தியாவிலேயே இது முதல் முயற்சி.’’

கவுரங்கஷா, ஆடை வடிவமைப்பாளர்

ஐதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 20 ஆண்டுகளாக நாடு முழுவதும் பயணம் செய்து, இந்தியாவின் நெசவு மரபுகளுக்கு ஊக்கமளித்து வருகிறார். அவரது பணி 16 மாநிலங்களில் பரவி, 7000 நெசவாளர்கள், கைவினைஞர்கள் இவருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இவரின் பெரும்பாலான உடைகளில் கோயில் கலை, கட்டிடக்கலை, வடிவியல் மற்றும் புராணங்கள் சார்ந்த டிசைன்களை காண முடியும். குறிப்பாக இவரின் புடவைகளில் இந்த வடிவங்கள் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். இவரின் ஒவ்வொரு புடவையும் இந்திய கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு புதிய முகத்தை அளித்து வருகின்றன என்பதில் ஐயமில்லை.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

The post நகைகளை இப்படித்தான் வடிவமைப்பு செய்கிறார்கள்! appeared first on Dinakaran.

Related Stories: