டெல்டாவிற்கு அடுத்து விவசாய பூமியாக விளங்கும் திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு?

திருவண்ணாமலை மக்களவை தொகுதி ஒரு ‘விவசாய பூமி’ என்றே கூறலாம். தமிழ்நாட்டில் 11வது மக்களைவை தொகுதியாக திருவண்ணாமலை விளங்குகிறது. கடந்த 2008க்கு முன்பு வரை திருப்பத்தூர் மக்களவை தொகுதியாக இருந்து வந்தது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த திருவண்ணாமலை, செங்கம் (தனி), கலசப்பாக்கம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கி கடந்த 2009ம் ஆண்டு திருவண்ணாமலை மக்களவை தொகுதி புதிதாக மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

இந்த தொகுதியில் பரவலாக வன்னியர், பட்டியலினத்தவர், முதலியார், யாதவர் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 50 சதவீதத்திற்கும் மேலானோர் தற்போதும் விவசாயத்தை நம்பியே இருக்கின்றனர். இந்த தொகுதியின் தேர்தல் வரலாற்றை பார்க்கையில், திருப்பத்தூர் மக்களவை தொகுதியில் இருந்தபோது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கைகளே ஓங்கி இருந்தன. அதன்பின்னர், திருவண்ணாமலை தொகுதியாக 3 தேர்தல்களை சந்தித்த நிலையில் அதில் 2 முறை திமுகவும், ஒரு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் வென்ற திமுக வேட்பாளரான அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் இதுவரை 52 விவாதங்களில் பங்கேற்று 442 கேள்விகளை தொகுதி நலன் சார்ந்து முன்வைத்துள்ளார். அதேபோல், ஒரு தனி நபர் தீர்மானத்தையும் அவர் கொண்டு வந்திருக்கிறார். சென்னை – திருவண்ணாமலை – ஜோலார்பேட்டை இடையே ரயில்கள் இயக்க கோருதல், திருவண்ணாமலையில் சிறிய விமான நிலையம், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்பாடுத்துதல் போன்ற விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.

இந்த முறை மீண்டும் திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் அவர் களம் காண்கிறார். அதேபோல், அதிமுக சார்பில் கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ்பாபு ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர். திமுகவின் செல்வாக்குமிக்க பகுதியாக திருவண்ணாமலை உள்ளதால், பிற கட்சி வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பரப்புரை மூலமாக மக்களின் வாக்குகளை பெற முயன்று வருகின்றன. மேலும், மூன்று மக்களவை தேர்தலை மட்டுமே சந்தித்துள்ள திருவண்ணாமலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத நிலைமை உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

The post டெல்டாவிற்கு அடுத்து விவசாய பூமியாக விளங்கும் திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு? appeared first on Dinakaran.

Related Stories: