கட்சிகள், வேட்பாளர்களுக்கு உதவும் சுவிதா இணையதளம் தேர்தல் ஆணைய அனுமதி கேட்டு 73,000 விண்ணப்பங்கள்: தமிழ்நாட்டில் இருந்து அதிகபட்சமாக 23,239

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தலை சிக்கலின்றி நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து எளிதில் புகாரளிக்க சி-விஜில் செயலி, தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்புகள், வாக்காளர் பெயர் சரி பார்த்தல், மாற்று திறனாளி வாக்காளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய சாக்ஷம் செயலி, கட்சிகள், வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் சுவிதா செயலி, இணையதளம் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய, வேட்பு மனுவின் நிலை பற்றி அறிந்து கொள்ள சுவிதா செயலி உதவுகிறது. வேட்பாளர்கள் மேடை அமைத்து பிரசாரம் செய்ய, வாகனங்கள் பயன்படுத்த, தெருமுனை கூட்டங்கள் நடத்த, தற்காலிக கட்சி அலுவலகம் திறப்பது, காணொலி பிரசார வாகனங்கள் இயக்குவது போன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் சுவிதா செயலி, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு அனுமதிகளை கேட்டு சுவிதா இணையதளத்தில் 73,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுக்கூட்டம், பேரணி நடத்த மைதானம் முன்பதிவு, தற்காலிக கட்சி அலுவலகம் திறப்பு, காணொலி பிரசார வாகனம் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை கோரி 73,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் இருந்து 23,239, மேற்குவங்கத்தில் இருந்து 11,976 மற்றும் மத்தியபிரசேத்தில் இருந்து 10,636 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக மணிப்பூரில் இருந்து 20, லட்சத்தீவிலிருந்து 18, சண்டிகரில் இருந்து 17 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதுவரை பெறப்பட்ட மொத்த கோரிக்கைகளில் 44,600 கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 11,200 கோரிக்கைகள்(15%) நிராகரிக்கப்பட்டு விட்டன. மேலும் போலியான, செல்லாதவையாக கருதப்பட்ட 10,819 விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கட்சிகள், வேட்பாளர்களுக்கு உதவும் சுவிதா இணையதளம் தேர்தல் ஆணைய அனுமதி கேட்டு 73,000 விண்ணப்பங்கள்: தமிழ்நாட்டில் இருந்து அதிகபட்சமாக 23,239 appeared first on Dinakaran.

Related Stories: