களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

 

வாலாஜாபாத், ஏப்.7: களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். வாலாஜாபாத் ஒன்றியம், களியனூர் ஊராட்சியை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த, கிராமங்களில் உள்ளவர்கள், 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் நெல், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர் வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் நெல் பயிரிட்டு, அதனை அறுவை செய்யும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால், களியனூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் 37 நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு கட்டுப்பாட்டில் 33 நெல் கொள்முதல் நிலையங்களும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியனூர் ஊராட்சியில் முதன்முறையாக அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் கலந்துகொண்டு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, முதல் நெல் கொள்முதலையும் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: