ஆவடி அருகே பூச்சி அத்திப்பேடில் டாஸ்மாக் பாருக்கு சீல் வைப்பு: பீர்பாட்டில்கள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர், முனைவர் எஸ்.விசாகன் உத்தரவின்படி, சென்னை முதுநிலை மண்டல மேலாளர் ஆர்.பன்னீர்செல்வம் அறிவுரையின்படி, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மதுபாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்வது, கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வது போன்றவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட மேலாளர் சி.கே.செந்தில்குமார் தலைமையில் ஆவடி அருகே மோரை அடுத்த பூச்சி அத்திபேடு பகுதியில் செயல்பட்டுவந்த டாஸ்மாக்கில் சோதனை மேற்கொண்டார். அப்போது அரசு அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது கண்டறியப்பட்டதால் அங்கு சோதனை செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 59 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தியதாக கு.வடிவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 59 பீர்பாட்டில்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ‘’மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு நடைபெறும்’’ என்று மாவட்ட மேலாளர் சி.கே.செந்தில்குமார் தெரிவித்தார்.

The post ஆவடி அருகே பூச்சி அத்திப்பேடில் டாஸ்மாக் பாருக்கு சீல் வைப்பு: பீர்பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: