ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த 96 கிலோ குட்கா பறிமுதல்: வாலிபர் கைது

 

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் புகையிலை குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகள் வழியாக ஆந்திராவிலிருந்து கஞ்சா, குட்கா புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் மேற்பார்வையில் போலீசார் மற்றும் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி போக்குவரத்து சோதனை சாவடியில் போலீசார் வாகன சாதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து திருத்தணி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி கடத்தியது தெரியவந்தது.

இதனை அடுத்து, காரில் பதுக்கி வைக்கப்பட்ட 96 கிலோ எடையுள்ள குட்கா, காருடன் பறிமுதல் செய்யப்பட்டு திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி நடத்திய விசாரணையில் குட்கா கடத்தி வந்தது திருத்தணி அருகே கே.ஜி கண்டிகை சேர்ந்தவர் சிவக்குமார் (30) என்பதும், இவர் தற்போது சென்னையில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருத்தணி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த 96 கிலோ குட்கா பறிமுதல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: