கோயம்பேடு பகுதியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

அண்ணாநகர்: நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு கோயம்பேடு பகுதியில் துணை ராணுவ படையினரின் கொடி அணுவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம், மனிதச்சங்கிலி, கலை நிகழ்ச்சிகள், கோலப் போட்டிகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட மத்திய துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு, வாகன தணிக்கை உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் வாரியாக நேற்று முதல் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவப் படையினரின் கொடி அணுவகுப்பு நிகழ்ச்சி கோயம்பேடு பகுதியில் நேற்று நடந்தது. இதில், கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், விஜயபாஸ்கர், ராஜஷ்குமார், ஜானகிராமன், உள்பட துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். கோயம்பேடு பகுதியில் தொடங்கிய பேரணி பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெற்குன்றம் வழியாக சென்று விருகம்பாக்கத்தில் நிறைவடைந்தது.

The post கோயம்பேடு பகுதியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: