பயமில்லையாம்… ஆனா பாஜவை விமர்சிக்க மாட்டாராம்…கோவை, நீலகிரி பிரசாரத்தில் எடப்பாடி ‘கப்சிப்’: அண்ணாமலை,  எல்.முருகனை பற்றி வாய் திறக்கவில்லை

கோவை மாவட்ட அதிமுக சார்பில், பீளமேடு கொடிசியா வளாகத்தில் அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பேசியதாவது: அதிமுக, பாஜவை பார்த்து பயப்படுவதாக சொல்லுகிறார்கள். இந்தியாவில் யாருக்கும் பயப்படாத கட்சி அதிமுக. எங்கள் மடியில் கனம் இல்லை, அதனால் வழியில் பயமில்லை.

நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. அதிமுக தொண்டன் யாருக்கும் பயப்பட மாட்டான்.நாங்கள், பாஜ கூட்டணியில் இருந்து வெளிய வந்துட்டோம். அவர்களை பார்த்து பயம் கிடையாது. அதிமுகவின் கடைக்கோடி தொண்டன்கூட யாருக்கும் பயப்படமாட்டான். எதற்கு கள்ளக்கூட்டணி என்று பேசி வருகிறீர்கள்? கச்சத்தீவை மீட்கும் திறன் அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. கச்சத்தீவை மீட்க தொடர்ந்து பேசி வரும் கட்சி அதிமுகதான். மீனவ மக்களுக்கு எப்போதும் அதிமுக ஆதரவு அளித்து வருகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அப்போது அவர், திமுக பற்றிய விமர்சனத்தை மட்டுமே எடுத்து வைத்தார். கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் அண்ணாமலை பற்றியோ, பாஜவை பற்றியோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை. விமர்சனமும் செய்யவில்லை. முன்னதாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து ஊட்டியில் எடப்பாடி பிரசாரம் செய்தார்.

இந்த பிரசாரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜவை பற்றியோ, பிரதமர் மோடியை பற்றியோ, பாஜ வேட்பாளர் எல்.முருகனை பற்றியோ ஒரு வார்த்தைகூட பேசாமல் மிக கவனமாக பேசினார். மேலும், திமுக கொண்டு வந்த திட்டங்களை அதிமுக கொண்டு வந்ததாக பொய் சொல்லி மாட்டி கொண்டார். ‘அதிமுக-பா.ஜ., கள்ளக்கூட்டணி ெதாடர்கிறது’ என்று எதிர்க்கட்சிகள் தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் கோவை பிரசாரத்தில் அதிமுகவை எதிர்த்து போட்டியிடும் அண்ணாமலை பற்றி ஒரு வார்த்தைகூட பேசாதது, குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்து உள்ளனர்.

The post பயமில்லையாம்… ஆனா பாஜவை விமர்சிக்க மாட்டாராம்…கோவை, நீலகிரி பிரசாரத்தில் எடப்பாடி ‘கப்சிப்’: அண்ணாமலை,  எல்.முருகனை பற்றி வாய் திறக்கவில்லை appeared first on Dinakaran.

Related Stories: