கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக தேமுதிக வங்கி கணக்குகளை முடக்கி பாஜ அச்சுறுத்தியது: பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு

சென்னை: பாஜவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜ அச்சுறுத்தியது என பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று முன்தினம் இரவு மீஞ்சூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பாஜவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜ அச்சுறுத்தியது.

அதிமுக அலுவலகம் சென்று கையெழுத்திடும் வரை பாஜவிடம் இருந்து ஏகப்பட்ட நிர்ப்பந்தம் மற்றும் மிரட்டல்கள் வந்தன. அதனை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா போல தைரியமாக முடிவெடுத்தேன். இந்த முறை அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி என மக்களுக்காக, தொகுதிக்காக உறுதியாக முடிவெடுத்தேன். எத்தனையோ நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்பட்டது. எத்தனை சோதனைகள் வந்தாலும் கேப்டனும், அவரது துணைவியாரும் அஞ்சுபவர்கள் கிடையாது. எனவே ஆளும் பாஜவிற்கு இந்த தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும்.

பாமக, பாஜ நம்முடன் கூட்டணியில் இல்லாததற்கு கையெடுத்து கும்பிட வேண்டும். பாமக இருந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது. பாஜ இருந்தால் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது. கடவுள் புண்ணியத்திலும், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று தெய்வங்கள் ஆசீர்வாதத்தோடு அவர்களாகவே வெளியே சென்று விட்டார்கள்.

அதிமுக-தேமுதிக கூட்டணிக்கு முன்பு வரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வந்த நிலையில் தற்போது, அதிமுக-தேமுதிக கூட்டணி 30 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. டாஸ்மாக் கடைகள், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். துளசி கூட வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக தேமுதிக வங்கி கணக்குகளை முடக்கி பாஜ அச்சுறுத்தியது: பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: