Freedom Filling Station பெண் கைதிகளின் பெட்ரோல் பங்க்

நன்றி குங்குமம் தோழி

இந்தியாவில் முதல் முறையாக பெண் கைதிகள் இயக்கும் பெட்ரோல் நிலையம் சென்னை, புழல் மத்திய சிறை வளாகம் அருகே “ஃப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேஷன்” என்கிற
பெயரில் திறக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.‘‘சந்தர்ப்பமும் சூழ்நிலையுமே மனிதர்களை குற்றவாளியாக மாற்றுகிறது. சிறைச்சாலைகள் கைதிகளை அடைத்து வைக்கும் இடம் மட்டுமல்ல, சிறை வளாகம் சீர்திருத்தவே அன்றி, பழிவாங்க அல்ல. தவிர்க்க முடியாத சூழலில் குற்றம் புரிந்தவர்களை எத்தனை நாளைக்கு குற்றவாளி… குற்றவாளி… என முத்திரை குத்த முடியும். அவர்களுக்கும் எதிர்காலம் இருக்கிறதுதானே’’ என பேச ஆரம்பித்தார் பெண்கள் தனிச்சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன்.

‘‘ஆண் கைதிகளை சிறை வளாகத்தை சுத்தம் செய்ய வைப்பது, மரம் நடுவது, விவசாயத்தில் ஈடுபடுத்துவது போன்ற வெளிப்பணிகளுக்காக சிறைக்காவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். ஆனால் பெண் கைதிகளுக்கு வெளியில் சென்று வேலை செய்யும் பணி வாய்ப்புகள் கடந்த ஆண்டுவரை வழங்கப்படாமலே இருந்தது. முதன் முதலாக புழல் மத்திய சிறையில்தான் இதற்கான முன்னெடுப்புகளை தமிழக காவல்துறை செய்திருக்கிறது.

சுறுக்கமாய் சொல்வதென்றால் எங்களுடையது Prison and Correction Service. அதாவது, சீர்திருத்தம்… புனர்வாழ்வு… மறு சமூகமயமாக்கல் என மூன்றுவிதமான முறையில் கைதிகளை நாங்கள் வழிநடத்திக் கொண்டு செல்கிறோம். இதில் மூன்றாவதாக வருகிற மறு சமூகமயமாக்கலே பெட்ரோல் நிலைய பணி வாய்ப்பு. அதாவது, நான்கு சுவற்றுக்குள் வேலை செய்வதைத் தாண்டி, பொதுமக்களுக்கு நடுவில் கைதிகள் வெளி உலகத் தொடர்பில் பணியாற்றும் வாய்ப்பு. பெண் கைதிகளிடத்தில் இதில் நல்ல மாற்றம் இருக்கிறது’’ என்றவர் மேலே தொடர்ந்தார்.

‘‘சிறைக் கைதிகளை வெளிப்படைத் தன்மையுடன் வைப்பதால், கைதிகள் என்றாலே தனிப்பிறவிகள் போல், வேறொரு உலகமாக அவர்களை பொதுமக்கள் பார்த்த நிலை மாறி, இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்கள். மக்களுடன் கலந்து பணி செய்யும் இந்த வாய்ப்பால் கைதிகளுக்குள்ளும் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.புழல் மத்திய சிறையில், தண்டனை இல்லாத கைதிகள் (convict inmates), விசாரணைக் கைதிகள் (Remand inmates), பெண்கள் தனிச்சிறை (women inmates) என மொத்தம் 3 தனித்தனி சிறைகள் இருக்கிறது.

இவற்றுக்கு தனித்தனி அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் இருக்கிறது. பெண்கள் தனிச்சிறையில் தண்டனை கைதிகளும், விசாரணைக் கைதிகளும் கலந்தே இருப்பர். இன்றைய தேதிக்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 260+ பெண் கைதிகள் புழல் மத்திய சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் 18 வயது முதல் 74 வயதுக்குள் கலந்தே இருக்கிறார்கள்.

சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக, சிறைத்துறை மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதிதான் ஆண் கைதிகளுக்காக சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் 2018ம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் நிலையம் தொடங்கியது. பெட்ரோல் நிலையம் மூலமாக சிறைத்
துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், ஆண் கைதிகளும் வருமானம் ஈட்டுகின்றனர். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதால், சென்னையை அடுத்துவேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை மாவட்டச் சிறைகளிலும் பெட்ரோல் நிலையங்கள் அடுத்தடுத்து திறக்கப்பட்டன. இவை அனைத்துமே ஆண் கைதிகளைக் கொண்டே இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பெண் கைதிகளையும் ஊக்கப்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து, இந்தியாவில் முதல் முறையாக, புழல் மத்திய சிறையின் பெண்கள் தனிச்சிறை வளாகம் அருகிலேயே, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து, ரூ.1.92 கோடி மதிப்பில், 1170 சதுர அடி மீட்டர் பரப்பளவில் மற்றுமொரு பெட்ரோல் நிலையத்தை, அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கி, பெண் கைதிகளைக் கொண்டு வெற்றிகரமாக இயக்கி வருகிறோம்.

பெண் கைதிகளின் பெட்ரோல் நிலையம் மூலமாக ஒரு நாளைக்கு 8 முதல் 10 லட்சம் வரை வருமானம் வருவதுடன், கைதிகளுக்கு ஊதியமாக ஒருநாளைக்கு 300 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு ஷிஃப்ட்டிற்கு 6 பெண் கைதிகள் என்கிற முறையில் இரண்டு ஷிஃப்ட்டுகளில் 12 பேர் பணியாற்றுகின்றனர். இரவு ஷிஃப்ட்டில் மட்டுமே ஆண் கைதிகள் பயன்படுத்தப்படுகின்றனர். பெட்ரோல் நிலைய பணியில் இருக்கும் கைதிகளை எந்த நேரமும் கண்காணிக்க இரண்டு ஏட்டு மற்றும் ஒரு எஸ்.ஐ. பணியில் இருப்பார்கள். வெளியில் இருந்து வரும் நபர்கள் பெண் கைதிகளுடன் பேசுவதற்கும், அவர்களைப் புகைப்படம் எடுப்பதற்கும் அனுமதியில்லை.

சிறை வளாகத்தை விட்டு வெளியில் வந்து பொதுமக்களோடு கலந்து பணியாற்றும்போது, எங்களின் முகம் வெளியில் தெரியும் எனத் துவக்கத்தில் தயங்கிய பெண் கைதிகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வழங்கிய முறையான பயிற்சி மற்றும் அவர்களுக்கான சீருடைகளை அணிந்து, பணியாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறியிருக்கிறார்கள். இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதால் திருச்சி சிறையிலும் பெண் கைதிகளை வைத்து பெட்ரோல் நிலையத்தை இயக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது.

பெட்ரோல் நிலைய பணி தவிர்த்து மற்ற பெண் கைதிகள், சிறை வளாகத்திற்குள் உள்ள பிரிசன் பஜாரில்(PRISON BAZAAR) உணவுப்பொருட்களை தயார் செய்வது, சேலைகளில் பிரின்ட் செய்வது, ஜுவல்லரி மேக்கிங், பேக்கரி அண்ட் கேக் மேக்கிங், டெய்லரிங் அண்ட் ஆரி போன்ற பயிற்சிகளைப் பெற்று, அது தொடர்பான வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி வருமானம் ஈட்டுகின்றனர். இவர்களின் தயாரிப்புகள் சென்னை எக்மோரில் உள்ள ஃப்ரீடம் பஜாரில் (FREEDOM BAZAAR) காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. கைதிகளின் வருமானம், அவர்களது குழந்தைகளின் படிப்புச் செலவு மற்றும் குடும்பச் செலவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பெண் கைதிகளில் அதிகம் படித்தவர்கள் இருந்தால், அவர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்துவது, நூலக கண்காணிப்பாளர் பணியில் அமர்த்துவது போன்ற பணிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுகிறது. மேலும் இவர்களை பாராலீகல் வாலண்டியர்ஸ்ஸாகவும் நியமித்து, இவர்களைக் கொண்டே சிறைக்குள் இருக்கும் பெண் கைதிகளின் பிரச்னைகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு மனு செய்வது, குற்றங்களில் இருந்து கைதிகள் தங்களை விடுவித்து வெளியில் செல்ல எந்த மாதிரியான மனுக்களை யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் போன்ற பணிகளிலும் படித்த பெண் கைதிகளை ஈடுபடுத்துகிறோம்.

90% குற்றங்கள் சட்டென முடிவெடுத்து நடப்பது. இவர்களை வெளிக்கொண்டு வருவது ரொம்பவே சுலபம் என்பதால், தன்னார்வ அமைப்பினர் சிலர் சிறைத்துறை அனுமதி பெற்று, பெண் கைதிகளின் உடல் மற்றும் மன ரீதியான மாற்றத்திற்கு யோகா, விளையாட்டு மற்றும் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.சிறைக்குள் படிக்க விரும்பும் பெண் கைதிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலமாகவும், திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் வாயிலாகவும் படிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. சிறை வளாகத்திற்குள்ளேயே தேர்வுகளும் நடைபெற்று, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பெண் கைதிகள் விடுதலைப்பெற்று வெளியே செல்லும்போது கைத்தொழிலையும் கற்று, எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் வெளியில் செல்கின்றனர்.

குற்றம் புரிந்தவன்…

ஒரு குற்றச்செயல் நடக்கும்போது, அதில் தொடர்புள்ளவர்களை ரிமான்ட் செய்து சிறைக்கு கொண்டு வருவார்கள். இது தற்காலிகமான ஒரு நிகழ்வே. பிறகு வழக்கின் தன்மையை பொறுத்து அவர்களுக்கு ஜாமீன் (bail) வழங்கப்படும். இதில் கொலைக் குற்றவாளியாக இருந்தால் 45 நாட்களுக்குப் பிறகு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கொடுப்பார்கள். 60 நாட்கள் கடந்துவிட்டால் செஷன்ஸ் கோர்ட்டிலும், 90 நாட்கள் கடந்தால் அவர்களை ரிமான்ட் செய்த கோர்ட்டிலும் விண்ணப்பித்து ஜாமீன் பெறலாம்.

வழக்கின் தன்மையை பொறுத்தே குற்றவாளி வெளியே செல்வது இருக்கும். சிறு தண்டனை, குறுகிய கால தண்டனை, நீண்டகால தண்டனை என்று தண்டனை பெற்று உள்ளே வரும் கைதிகளின் வழக்கைப் பொறுத்து தண்டனை காலம் மாறுபடும்.குறுகிய கால தண்டனைக்கு அவர்களின் குற்றச்செயலைப் பொறுத்து 3 ஆண்டுகள் வரை வழங்கப்படலாம். அதற்கு மேல் 20 முதல் 30 வருடம் என நீண்டகால தண்டனையில் வருபவர்களும் இருக்கிறார்கள்.

இது இரண்டிலும் இல்லாத ஆயுள் தண்டனை கைதி என்பவர்களின் தண்டனை காலம் இறப்புவரை நீட்டிப்பது. ஆயுள் தண்டனைக்கு 14 வருடங்கள் நிறைவடைந்துவிட்டாலே, தண்டனை காலத்தில் அவர்களின் நன்னடத்தை பொறுத்து, அட்வைசரி போர்ட் அமைத்து தண்டனை குறைப்பும் செய்யப்படலாம். அல்லது பொது மன்னிப்பு மூலமாக தண்டனை காலம் குறைக்கப்பட்டு விடுதலையும் செய்யப்படலாம்.

கைதிகள் செய்யும் வேலை, அவர்கள் ஈட்டுகிற வருமானம் இவற்றை வைத்தும் தண்டனை குறைப்பு காலம் இருக்கும். இதில் கைதிகளின் நன்னடத்தை பொறுத்து 5 ஆண்டு தண்டனை பெற்றவர்கள் மூன்றே கால் அல்லது 4 வருடத்தில் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்படலாம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: அருண்

The post Freedom Filling Station பெண் கைதிகளின் பெட்ரோல் பங்க் appeared first on Dinakaran.

Related Stories: