மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும்: அண்ணாமலை பேச்சு

ஈரோடு : மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் ஈரோடு கவுந்தப்பாடியில் திருப்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; யார் பிரதமராக வர வேண்டும் என்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. யாருக்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்; வீடு, வீடாக சென்று பாஜகவினர் வாக்கு சேகரிக்க வேண்டும். திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் 100 வாக்குறுதிகள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. 45 லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6,000 கொடுக்கப்படுகிறது.

வருவோர், போவோர் எல்லாம் சமூக நீதி பேசுகிறார்கள்; சமூக நீதி பேசுவோருக்கும், அந்த குறிப்பிட்ட நபர்களுக்கும் சம்பந்தமில்லை. சமூகநீதியை நிலைநாட்டி கொண்டிருப்பது பாஜக மட்டும் தான். ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என்ற 4 சாதிகளை நோக்கியே மத்திய அரசு திட்டங்கள் உள்ளன. இதுவரை 3 முறை பெட்ரோல் டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளார். மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும். பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 5வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என கூறினார்.

The post மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும்: அண்ணாமலை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: