சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு 790 ஜார்க்கண்ட் ஆயுதப்படை போலீசார் அனுப்பி வைப்பு: தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

சேலம்: சேலத்திற்கு தேர்தல் பணிக்காக தனி ரயிலில் வந்திறங்கிய 790 ஜார்க்கண்ட் ஆயுதப்படை போலீசாரையும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பினர். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் முதல் கட்ட தேர்தலாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால், தேர்தல் முன்னேற்பாடு பணியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இத்தேர்தலின்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள துணை ராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளனர். அதற்காக வட மாநிலங்களில் இருந்து சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் மற்றும் பல்வேறு மாநில ஆயுதப்படை போலீசார் தமிழ்நாட்டிற்கு வரவழைக்கப்படுகின்றனர்.

இந்தவகையில் நேற்றிரவு சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு தனி ரயிலில் 790 ஜார்க்கண்ட் மாநில ஆயுதப்படை போலீசார் வந்திறங்கினர். எஸ்பி விஜய்ஆசீஷ் குஜூர் தலைமையில் வந்த ஜார்க்கண்ட் ஆயுதப்படை போலீசார், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டனர். இதன்படி, தர்மபுரி மாவட்டத்திற்கு டிஎஸ்பி ராஜேந்திரகுமார் தலைமையில் 166 போலீசார் (2 கம்பெனி) அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 78 போலீசாரும் (ஒரு கம்பெனி), நாமக்கல் மாவட்டத்திற்கு 78 போலீசாரும் (ஒரு கம்பெனி) அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டத்திற்கு டிஎஸ்பி மஜ்ருல்கோடா தலைமையில் 234 போலீசாரும் (3 கம்பெனி), சேலம் மாநகருக்கு டிஎஸ்பி பிரமோத்குமார் சிங் தலைமையில் 234 போலீசாரும் (3 கம்பெனி) அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், பிறகு வாக்குப்பதிவுக்காக அந்த இயந்திரங்களை எடுத்துச் செல்லவும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் பயன்படுத்தவுள்ளனர். அதற்கான பணியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

The post சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு 790 ஜார்க்கண்ட் ஆயுதப்படை போலீசார் அனுப்பி வைப்பு: தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: