தீவினைகள் களையும் ஸ்ரீ பிரணவேஸ்வரர்

திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதி எந்த அளவுக்கு சிறப்பு மிக்கதோ, அதுபோலவே அதன் துணை நதிகளும் சிறப்பு பெற்றவை. சித்தாறும், கடனாநதியும், பச்சையாறும் பெருமைகளை பல பெற்றவை. இவற்றுள், பச்சையாற்றை ‘‘சியாமளா நதி’’ என்று போற்றி புகழ்கிறார்கள். கங்கையே, சியாமளா நதியாக ஓடிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆதிரையானாள் கங்கை

திருநெல்வேலி தலபுராணத்தில், “மந்திரேசரச் சருக்கம்’’ என்னும் பகுதியில், ‘‘பச்சை ஆறு’’ பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த நதி தோன்றும் முன்பு, இப்பகுதியில் இருந்த கர்தர்ப்ப நகரத்தில் பெரும் தவசியான ரேணு என்ற முனிவர், சிவபெருமானை நினைத்து ‘‘கங்கை தேவியே தனக்கு மகளாக பிறக்கு வேண்டும்’’ என்ற வேண்டுதலுடன் கடும் தவம் புரிந்தார். அதே சமயம், கயிலை மலையில் வீற்றிருந்த சிவபெருமானை தன்னை அவரோடு இணைத்துக் கொள்ளும்படி பிரார்த்தித்தாள் கங்கை. இதைக் கண்டு ஆவேசம் அடைந்த பார்வதிதேவி, ‘‘நீ பூலோகத்தில் மானிடராய் பிறப்பாய்’’ என்று கங்கைக்கு சாபம் கொடுக்கிறாள். அதன்படி, ரேணு முனிவர் தன்னிடம் வேண்டிக் கொண்ட வேண்டுதலை நிறைவேற்ற, கங்கையை பயன்படுத்திக் கொண்டார் சிவபெருமான். ஒருநாள் ரேணு முனிவர் தனது தர்மபத்தினியுடன் துயிலும் போது, அவர்கள் இருவரின் நடுவே குழந்தையாக வந்து விழுந்தாள் கங்கை தேவி. தங்களுக்கு மகளாக கிடைத்திருப்பது, சந்தேகமே இல்லாமல் கங்கை தாய்தான் என்று நினைத்து மகிழ்ந்த அந்த தம்பதியர், குழந்தைக்கு ‘‘ஆதிரை’’ என்று பெயரிட்டனர். ஆதிரை எட்டு வயதை எட்டியபோது, ஒரு சம்பவம் நடந்தது. களந்தை (தற்போதைய களக்காடு) பகுதியை தலைநகராகக் கொண்டு, ஒரு அரசன் ஆட்சி செய்து வந்தார். புத்திர பாக்கியம் இல்லாத அந்த அரசனுக்கு, ரேணு முனிவரின் கையில் இருந்த ஆதிரையை பார்த்ததும் மிகவும் பிடித்துப் போயிற்று. அவரிடம், ‘‘எனக்கு தங்கள் மகளை, தத்து தந்து என் வாழ்வை முழுமை அடையச் செய்ய வேண்டும்’’ என்று வேண்டினார்.

ஆதிரையை அழைத்துச் சென்ற ஈசன்

குழந்தை இல்லாத தவிப்பை ஏற்கனவே உணர்ந்திருந்த ரேணு முனிவர், அரசனுக்கு தன்னுடைய மகளை தத்து கொடுக்க சம்மதித்தார். அரச மாளிகையில் பருவ மங்கை ஆன ஆதிரைக்கு, பொன், பொருள் மீதோ கொஞ்சமும் பற்று இல்லை. எப்போதும் தன் சிந்தனையால், சிவபெருமானையே பற்றிக் கொண்டிருந்தாள். தினமும் நறுமண மலர்களை கொண்டு சிவபெருமானை பூஜித்து வந்தாள். அவளது வழிபட்டால் மகிழ்ந்த ஈசன், அவளுக்கு வெள்ளி ரிஷபத்தின் மேல் தோன்றி காட்சி கொடுத்து, ‘‘ஆதிரையே உனக்கு என்மேல் இருக்கும் அன்பால் உன்னை அழைத்துச் செல்ல வந்தேன்’’ என்று கூறி அவளை மந்திரேசுரம் அழைத்து வந்தார். பல இடங்களிலும் தேடி மகளைக் காணாத மன்னன், மனமுடைந்து உயிரை விட்டுவிடும் செயலில் ஈடுபட முயன்றார்.  அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘‘மன்னா, பொருநை நதிக்கரை அருகே மந்திரசுரத்தில் சிவன் ஆதிரையோடு வீற்றிருக்கிறார். நீ அங்கு சென்று யாகம் ஒன்று செய். உன் மகள் உனக்கு தெரிவாள்’’ என்றது அந்தக் குரல். மன்னனும் அந்த இடத்திற்குச் சென்று, அங்கு மிகப் பெரிய யாகம் ஒன்றைச் செய்தார். அப்போது தூய ஓமகுண்டத்தில் இருந்து ஓங்கி ஒலித்த பிரணவ மந்திரத்தோடு சிவபெருமான் ஆதிரையோடு தோன்றினார்.

ஆதிரையின் கரத்தை சிவபெருமான் பற்றிக்கொண்டார்

‘‘இறைவா, ஆதிரையை என் முன்பு கரம் பிடியுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார் மன்னன். இறைவனும் அப்படியே வரம் தந்தார். அதன்படி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வானவர்களின் தச்சனான மயன் அங்கு தோன்றினார். அவர் அழகிய ஆலயம் ஒன்றை அமைத்தார். திருமால், பிரம்மன், தேவர்கள் தங்குவதற்கான இடங்களையும் வடிவமைத்தார். குறிப்பிட்ட நாளில் திருமணம் நடந்தது. ஆதிரையின் கரத்தை, சிவபெருமானின் கையில் அரசனே பிடித்துக் கொடுத்தார். அனைவரும் விண்ணுலகம் செல்ல தயாரான நிலையில், அரசனால் தன்னுடைய மகளைப் பிரிய மனம் இல்லாமல் தேம்பி நின்றார்.

ஆதிரையை பாதியாக பிரித்த சிவபெருமான்

அதைக் கண்ட சிவபெருமான், ஆதிரையை பாதியாக பிரித்து ஒரு பாதியை தன் தலையில் வைத்துக் கொண்டு, மற்றொரு பாகத்தை அரசன் ஆட்சிக்குட்பட்ட வயிரமலையில் விட்டார். அங்கிருந்து புறப்பட்ட கங்கை (ஆதிரை), தாமிரபரணி நதியில் கலந்து, மந்திரேசுர ஆலயத்தின் அருகே வந்து சேர்ந்தது. ஆதிரை நதியாய் ஓடிய காரணத்தால், அந்த நதிக்கு ‘‘ஆத்திரா நதி’’ என்று பெயர் வந்தது. இந்த நதியைத்தான் ‘‘பச்சை ஆறு’’ என்றும் அழைக்கிறார்கள். சிவனுக்கு, ஆதிரைக்கும் திருமணம் நடக்க தேவதச்சனால் கட்டப்பட்ட ஆலயம், பத்தமடை வழியாக திருநெல்வேலி – பாபநாசம் செல்லும் சாலையில் உள்ள பிராஞ்சேரி என்னும் ஊருக்கு அருகேயுள்ள மேலஓமநல்லூர் என்ற இடத்தில் இருக்கிறது.

ஆமை ஓடு வடிவ சுயம்பு லிங்கம்

இங்கு கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பிரணவேஸ்வர சுவாமி, ஆமை ஓடு வடிவத்தில் சுயம்பு திருமேனி கொண்டுள்ளார். மேலும், சுவாமிக்கு ஸ்ரீ மந்திர மூர்த்தி என்ற திருநாமமும் உள்ளதால், செய்வினை கோளாறினால் பாதிப்படைந்தோர், இங்கு வந்து மனமுருகி வழிபட்டு, தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றினால் அவை அனைத்தும் விலகிவிடும்
என்பது ஐதீகம்.

பெருங்கருணை நாயகி ஸ்ரீசெண்பகவல்லி

கருணையே வடிவான இத்தலத்து இறைவிக்கு, செண்பக மாலை அணிவித்து, கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரணவேஸ்வர சுவாமியையும், தெற்கு நோக்கிய ஸ்ரீ செண்பகவல்லி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறே ஒருசேர தரிசிப்போரின் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும்.

தனிச் சிறப்புகள்

இத்திருக்கோயிலில், தற்போதும் சித்தர்கள் வந்து சிவனை பூஜிப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயத்தில் அகத்திய பெருமான், உரோமச மகரிஷி போன்றவர்கள் தங்கி யாகம் செய்து சிவனருள் பெற்றுள்ளனர். லட்சுமணன், இந்திரஜித்தை கொன்ற பாவத்தைப் போக்க, இங்கு கருநாகமாக இருந்து சிவனை வழிபட்டு வருவதாக ஐதீகம். மேலும், இங்குள்ள பனங்காட்டு கீற்றுகள் இசைக்கும் இசை, “ஓம்’’ என்ற பிரணவ மந்திரத்தை நினைவுப்படுத்துவது போல் இருக்கிறது.

கோயில் அமைவிடம்

பத்தமடை வழியாக திருநெல்வேலி – பாபநாசம் செல்லும் சாலையில், 15 கி.மீ. தூரத்தில் பிராஞ்சேரி வந்துவிடும். அங்கிருந்து பிரியும் சாலையில் 6 கி.மீ. தூரத்தில் மேலஓமநல்லூர் என்னும் இடத்தில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.

மீனாட்சி ரவிசேகர்

The post தீவினைகள் களையும் ஸ்ரீ பிரணவேஸ்வரர் appeared first on Dinakaran.

Related Stories: