மனசுக் கேற்ற வாழ்க்கைத்துணை அமையச் செய்யும் பொருத்தம்

ராசிப் பொருத்தம் பார்த்துவிட்டு, அடுத்து ராசிக்குரிய அதிபதிகள் பொருந்துகிறார்களா என்று பார்க்க வேண்டும். இதைத்தான் ராசியாதிபதி பொருத்தம் என்பார்கள். ‘‘எங்க வீட்ல இருக்கறவங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லீங்க. ஆனா, எங்க வீட்டுக்காரருதான் எல்லாத்தையும் முடிவு பண்ணுவாரு’’ என்று சொல்வார்கள் அல்லவா… அதுபோலத்தான் இதுவும்! ராசிகள் தங்களுக்குள் ஒத்துப் போனாலும், அந்த ராசிக்குரிய அதிபதிகள், அந்த வீட்டிற்குரிய தலைவர்கள், நட்போடு இருக்கிறார்களா என்று பார்த்துச் சேர்க்க வேண்டும்.

ராசியாதிபதி பொருத்தம் சரியாக இருந்து விட்டால், கம்பீரமாகவும் பர்ஃபெக்ட் தம்பதியராகவும் இருப்பார்கள். மனைவியை எது கேட்டாலும், ‘‘சரியாத்தான் இருக்குது! ஆனா அவரு வந்துடட்டுமே… அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிடறேனே. நாளைக்குப் பேசுங்க’’ என்பார். அதாவது, அன்பையும் அதிகாரத்தையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் விஷயத்தை ராசியாதிபதி பொருத்தம்தான் நிர்ணயிக்கிறது. அது கணவரே முடிவெடுக்கும் விஷயமாக இருந்தாலும்கூட, மனைவியின் பார்வைக்குக் கணவர் கொண்டு செல்வார்.

ராசியாதிபதி பொருத்தம் இல்லையெனில், ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒட்டாமலும் அன்யோன்யம் இல்லாமலும் இருப்பார்கள். ‘‘அவர் வேலையை அவர் பார்த்துக்கறாரு; என் வேலையை நான் பார்த்துக்கறேன். நாலு பேர் மத்தியில ஏதோ சிரிச்சு பேசிக்கிட்டிருக்கோம்’’ என்று விட்டேத்தியாக பேசுவார்கள்.

ராசியாதிபதி பொருத்தம் இருந்தால், கணவர் சம்பளக் கவரை பிரிக்காமல் அப்படியே மனைவியிடம் கொடுப்பார். செலவுக்கு வேண்டுமானால் கேட்டு வாங்கிக் கொள்வார். பொருத்தம் இல்லையெனில், தேவையான அளவு எடுத்துக் கொண்டு மீதியை கொடுப்பார். ‘இதுக்குள்ள எல்லா செலவையும் பார்த்துக்கோ’ என்று நிர்ப்பந்திப்பார். தான்தோன்றித்தனமாகத் திரிவார். கணவனின் கடன்கள் மனைவிக்குத் தெரியாது; மனைவியின் செலவுகள் குறித்து கணவனும் கவலைப்பட மாட்டார்.

‘‘ஏதோ சம்பளத்தைக் கொடுக்கறாரு. அஞ்சு வருஷமா ஒரே சம்பளந்தான். விலைவாசி ஏர்றது இறங்கறது எதுவும் தெரியாது. வீட்ல விருத்திதான் வேணாம்… அரிசியும் பருப்புமாவது எப்பவும் இருக்க வேணாமா’’ என்று வீட்டினுடைய தானிய விருத்தியைக் கூட ராசியாதிபதி பொருத்தம்தான் தீர்மானிக்கிறது. இந்தப் பொருத்தம் சரியாக அமையப் பெற்றால், சிறுகச் சிறுக நகைகள் சேர்த்து விடுவார்கள். பொருள் சேர்க்கை இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் சேமிப்பில் பணம் தங்கும்.

ஒவ்வொரு ஜோதிடரும் தங்களைப் பார்க்க வருபவர்களின் பரம்பரையையோ, தகுதியையோ, செல்வச் செழிப்பையோ பார்த்துப் பலன் சொல்வதில்லை. ‘‘இவ்ளோ பெரிய பணக்காரரா இருக்காரே. இவருக்கு கஷ்டம் வரும்போல இருக்கே. எப்படிச் சொல்றது’’ என்று யோசிக்க மாட்டார்கள். ‘‘இன்னும் வேலையே கிடைக்கலை. ஆனா, இவர் நாலே வருஷத்துல சின்ன கம்பெனிக்கு ஓனரா ஆகப் போகிறாரே… இப்படி இவரால ஆக முடியுமா’’ என்று தயக்கத்தோடு அமர்ந்திருப்பதில்லை. ஜோதிடர் பார்வையில் வெறும் கிரகங்கள்தான் தெரியும். பெயர்கூட சில சமயம் மறந்து விடும். ‘கன்னியா… கடகமா… சொல்லுங்க’ என்றுதான் சில சமயம் சிலரை நினைவுகூர வேண்டியிருக்கும். அதுபோலத்தான் பொருத்தத்திலும் ராசியைத் தாண்டி ராசியாதிபதிகளுக்குள் பொருத்தம் பார்ப்பது. இவர்களைச் சேர்க்கலாமா என்று போட்டோகூட வேண்டாம். கிரகங்களே போதும். ராசியாதிபதிகளுக்குள் ஒத்துப் போனால் ‘பொருத்தம் இருக்கிறது’ என்று டிக் செய்யலாம்.

ஒவ்வொரு கிரகத்திலும் மாறுபட்ட வாயுக்கள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு கிரகத்துக்கும் வேறுபட்ட எண்ணிக்கையுள்ள துணைக்கோள்கள் உள்ளன. இந்த கிரகங்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிரகத்திற்கும் நட்பு வீடுகள் என்றும் அமைகின்றன. ராசிகளுக்குள் கடகத்தையும் மகரத்தையும் சேர்க்கலாம் என்று சொல்கிறோமே, அதுபோல அந்தந்த ராசிக்குரிய அதிபதிகளுக்குள் உள்ள பொருத்தத்தையும் பார்க்க வேண்டும். அப்படி எந்தெந்த ராசி அதிபதிகளுக்குள் பொருத்தம் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்…

உதாரணமாக, மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் செவ்வாய்தான் அதிபதி. இப்போது இந்த செவ்வாயோடு எந்தெந்த ராசியாதிபதிகள் அதாவது கிரகங்கள், நட்போடு சேர்ந்த பொருத்தமும் பெறுகின்றன? சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடகமும், சூரியனை அதிபதியாக கொண்ட சிம்மமும் மற்றும் குருவை அதிபதியாகக் கொண்ட தனுசும் மீனமும் நட்பு வீடுகளாகவும், ராசியாதிபதி பொருத்தத் தோடும் உள்ளன. அது சரி… இதனால் என்ன பலன் என்றுதானே கேட்கிறீர்கள்? அதையும் பார்த்து விடுவோம்.

செவ்வாய் எப்போதும் கனன்று கிடக்கும் கிரகமாகும். செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் மற்றும் விருச்சிகத்தில் பிறந்தோரிடம் செவ்வாயின் போர் வேகம் இருக்கும். இப்போது இதோடு விவேக குருவை அதிபதியாகக் கொண்ட தனுசையும், மீனத்தையும் சேர்க்கும்போது அந்த வேகத்தை பக்குவமாகக் கையாள்வார்கள். சிறு வியாபாரத்தை தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘‘பக்கத்து கடை, எதிர்க்கடையைவிட நாம பிரமாண்டமா பண்ணணும்’’ என்று வேகச் செவ்வாய் முடிவெடுக்க வைப்பார். ஆனால் விவேக குருவோ, ‘‘நீங்க நினைக்கறது சரிதான். ஆனா, இந்த ஏரியாவுக்கு நீங்க நினைக்கற இந்த வியாபாரம் சரியா வராது. அதனால கொஞ்சம் கம்மியா முதலீடு போடுவோம். வேற என்ன பண்ணா சரியா வரும்னு யோசிச்சு செய்வோம்’’ என்று விவேகமாக செயல்பட வைப்பார்.

தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்களைக் கூட வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் தடுக்கலாம். செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷத்தையும் விருச்சிகத்தையும், சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசியோடு சேர்க்கும்போதும் பொருத்தம் அற்புதமாக இருக்கும். செவ்வாய் எமோஷனலாக முடிவெடுக்கும்போது, சமயோசித புத்திக்குரிய சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசியைச் சேர்ந்த வாழ்க்கைத் துணைவர் பக்குவமாக ஆலோசனை வழங்குவார்.

‘‘காரைக் கொண்டு வந்து இடிச்சது தப்புதான். அதுக்காக நீங்க வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டை போடாதீங்க. இப்போ நீங்க ஏதாவது சொல்லிட்டுப் போயிடுவீங்க. நாளைக்கு நான் தனியா போகும்போது நாலு பேர் என்னை ஃபாலோ பண்ணா என்ன பண்றது? நாலு விஷயத்தையும் யோசிச்சுப் பேசக் கத்துக்கோங்க’’ என்று வாழ்க்கைத்துணை யதார்த்தமான உண்மைகளாலும், பேச்சுகளாலும் நெறிப்படுத்துவார். அப்படிச் சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை இந்த செவ்வாய்க்கும் சந்திரனுக்கும் இயல்பாகவே இருக்கும். ‘‘நீயும் நானும் சொன்னா கேட்கவா போறாங்க? சொல்றவங்க சொன்னா, தானா கேட்கப் போறாங்க’’ என்று சொல்கிறோம் அல்லவா… அதுபோல இவர் சொன்னால் அவர் கேட்பார்.

இப்படி அன்றாட வாழ்வில் ராசிக்கு அதிபதிகளான கிரகங்கள் மனிதர்களின் வாழ்வில் நிகழ்த்தும் தாக்கத்தை உரையாடல்கள் மூலமாகவும், ஆலோசனைகள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். அப்படி அறிந்ததாலேயே பெரியோர்கள், ‘இந்த ராசியாதிபதிதான் இந்த ராசியாதிபதிக்குப் பொருத்தமாக இருப்பார்’ என்று குறித்தும் வைத்தனர். அவை என்னவென்று பார்ப்போமா…

1. கன்னியையும், மிதுனத்தையும் ஆட்சி செய்யும் புதனுக்கு… ரிஷபத்தை ஆளும் சுக்கிரனும் சிம்மத்தை ஆளுமை செய்யும் சூரியனும், துலாமின் சுக்கிரனும் கச்சிதமாக பொருந்தும். 2. தனுசையும் மீனத்தையும் ஆளும் குருவுக்கு சரியான கிரகங்களாக மேஷத்தின் செவ்வாயும் கடகத்தின் சந்திரனும் சிம்மத்தின் சூரியனும் அழகாகப் பொருந்தும்.
3. அதேபோல ரிஷபத்தையும், துலாத்தையும் ஆட்சி செய்யும் சுக்கிரனுக்கு இணையாக கன்னி மற்றும் மிதுனத்தை ஆளும் புதனும், மகரத்தையும் கும்பத்தையும் ஆளும் சனியும் சரியாகப் பொருந்திப் போகும்.
4. மகரத்தையும் கும்பத்தையும் ஆளும் சனிக்கு சரி சமமாக மிதுனத்தையும் கன்னியையும் ஆளுமை செய்யும் புதனும், ரிஷபத்தையும் துலாத்தையும் ஒருசேர ஆட்சி செய்யும் சுக்கிரனும் அமோகப் பொருத்தம் உடையதாக இருக்கும்.
5. கடகத்தை ஆட்சி செய்யும் சந்திரனுக்கு… சிம்மத்தின் சூரியனும் மிதுனத்தின் புதனும் துலாமின் சுக்கிரனும் மீனத்தின் குருவும் மேஷத்தின் செவ்வாயும் கன கச்சிதமாகப் பொருந்துவார்கள்.

மேலும், நீரோட்டம் போல ஒரு Inner connectivity ராசிகளும் உண்டு. என் பாட்டனார், ‘‘நண்டையும் தேளையும் மீனையும் ஒருத்தருக் கொருத்தர் சேர்த்தா ரொம்ப நல்லாயிருக்கும்’’ என்று அடிக்கடி சொல்வார்கள். அதாவது நண்டு எனும் கடகத்தையும், தேள் எனும் விருச்சிகத்தையும், மீன் எனும் மீனத்தையும் தங்களுக்குள் திருமணம் செய்து வைத்தால் மண வாழ்க்கை நறுமணம் வீசும் என்பார். மேலே நட்புக்குரிய கிரகங்கள் என்று பார்த்தோம் அல்லவா… அதேபோல இவை மூன்றும் அன்யோன்யமாக இருக்கும் ராசியாதிபதிகளைக் கொண்டவை. ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே, பேசாமலேயே அந்தரங்க அன்யோன்யமாக இருப்பதாக உணர்வார்கள். இதேபோல மேஷமும் ரிஷபமும் தோழமை ராசிகளாகும். ‘‘எங்களுக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இல்லைங்க… நான் எது சொன்னாலும் அவரு நல்லதுக்காகத்தான் சொல்வேன்’’ என்பார்.

‘‘ஏதோ அந்தக் காலத்துல பேர்ப் பொருத்தம்னு பார்த்தாங்க. ‘எல்லாம் பண்ணிக்கலாம். நல்லாயிருப்பீங்க’ன்னு சேர்த்து வச்சுட்டாங்க. ஆனா, ‘ஏதோ வாழ்க்கை ஓடுது’ன்னு சொல்லலாமே தவிர… லட்சியத் தம்பதியா நாங்க இல்லை. இந்த மாதிரி எல்லாப் பொருத்தத்தையும் பத்தி யோசிச்சு பார்த்து சேர்த்திருந்தா இந்த அவஸ்தையெல்லாம் இருந்திருக்காது இல்லையா’’ என்று உங்களில் பலர் மனதிற்குள் வெதும்பித் தவிக்கலாம்.

கவலைப்படாதீர்கள். பொருத்தம் சரியாக அமையவும், ‘திருமணம் ஆகிவிட்டதே… பொருத்தம் சரியில்லையே’ என்று நினைப்போருக்கும் சேர்த்துத்தான் கோயில்கள். இதில் மிகப் பெரிய விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை ஆளும் கிரகங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், கிரகங்களை ஆளும் இறைவனை நாம் பிடித்துவிட்டால் போதும். அந்த மகாசக்தியின் முன்பு கிரகங்கள் தங்களின் எதிர்மறைத் தன்மையை குறைத்துக் கொண்டு நேர்மறையாகவே நம் வாழ்க்கையைக் கொண்டு போகும்.

ராசியாதிபதி பொருத்தம் சரியாக அமையவும், ராசியாதிபதி பொருத்தம் இல்லாதோர் தங்களுக்குள் நெருக்கம் ஏற்படவும் வழிபட வேண்டியது, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ஆலயம். கணவனும், மனைவியும் தனித்தன்மையோடும் சமமான சக்தியோடும் திகழ வைக்கும் ஆலயமே இது. இங்கு நெல்லையப்பரும், காந்திமதி அம்மையும் தனித்தனியாகக் கோயில் கொண்டு அருள்கின்றனர். எனவே, இந்த இரு ஆலயத்தையும் தரிசித்து வாருங்கள். இந்த கோயிலின் சூட்சுமமே, இரு ராசிக்குரிய அதிபதிகளையும் சமமான சக்தியோடும், பலத்தோடும் திகழச் செய்வதேயாகும். ‘அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி விட்டுக் கொடுக்கறாங்க பாருங்க’ என்று சொல்ல வைக்கும் அளவுக்கு அன்யோன்யத்தை இவர்கள் அளிப்பார்கள்.

ராசியாதிபதி பொருத்தம் பார்த்தபிறகு ஜோதிடர் வசியப் பொருத்தம் இருக்கிறதா என்று ஆராய்வார். அதென்ன வசியப் பொருத்தம்? வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் கண்களைப் பற்றிப் பேசும். எது செய்தாலும் டப்பாவில் கணவருக்கென்று தனியாக எடுத்து வைப்பதைச் சொல்லும். வசியப் பொருத்தம் என்பது பொடி போட்டு மயக்குவதல்ல. உடல்ரீதியான ஈர்ப்பும் அல்ல. இது வெறும் ஜெனரல் அட்ராக்சன். அந்த நேரத்தில் மட்டும் இல்லாமல் அதையும் தாண்டி அக்கறை காட்டும் விஷயமாகும்.

The post மனசுக் கேற்ற வாழ்க்கைத்துணை அமையச் செய்யும் பொருத்தம் appeared first on Dinakaran.

Related Stories: