மாவூற்று வேலப்பர் கோயிலில் குறைவாக விழும் ஊற்றுநீரில் குளித்து மகிழும் பயணிகள்


ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் மாவூற்று வேலப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த வேலப்பர் கோயிலில் மலையில் ஊற்று அமைந்துள்ளது. இந்த ஊற்று தண்ணீர் வடிந்து செல்வதற்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாய் முடிவடையும் இடத்தில் பக்தர்கள், பயணிகள் நின்று குளிக்கும் வகையிலும் பள்ளம் அமைக்கப்பட்டுள்ளது. மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த ஊற்று நீரில் குளித்து பின்னர் வேலப்பரை வணங்குவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் உள்ளது.

இதனால் வேலப்பர் கோயிலில் உள்ள ஊற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது. இருப்பினும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொறுமையாக நின்று குளித்து செல்கின்றனர். மேலும் அந்தப் பகுதியில் நின்று செல்பி, புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்கின்றனர். அருகில் உள்ள சுருளி அருவியில் தண்ணீர் வரத்தில்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள வேலப்பர் கோயில் பகுதிக்கு வந்து குறைவாக வரும் ஊற்று நீரில் குளித்து திருப்தி அடைகின்றனர்.

The post மாவூற்று வேலப்பர் கோயிலில் குறைவாக விழும் ஊற்றுநீரில் குளித்து மகிழும் பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: