மதிப்புக்கூட்டல் பொருட்கள் மேல் எனக்கு ஆர்வம் அதிகம்!

நன்றி குங்குமம் தோழி

தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க ஆண்களுக்கு நிகராக பெண்களும் தங்களுக்கு தெரிந்த வகையில் முயற்சி செய்து வருகின்றனர். அதில் இந்த தலைமுறைக்கேற்ப பல துறைகளில் அவர்களின் ஈடுபாடும் அதிகரிப்பது போல் இருந்தாலும், அதற்கு சமமாக விவசாயம் மற்றும் மதிப்புக்கூட்டலிலும் அவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மேலும் வீடுகளில் இருந்தபடியே அவர்கள் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தையும் உருவாக்கிக்கொள்கின்றனர். அதில் ஒருவர்தான் அரியலூர் மாவட்டம், தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த தீபா. இவர் ‘மார்வே’ என்ற பெயரில் பொடி, ஊறுகாயினை தயாரித்து அதனை சிறு தொழிலாக செய்து வருகிறார்.

‘‘பொதுவாக கிராமங்களில் இருக்கும் பெண்கள் வயல் வேலைகளிலும், கூலி தொழிலிலும்தான் ஈடுபடுவார்கள். அதில் ஒருசிலர் படித்திருந்தாலும், அதற்கேற்ப வேலையில் ஈடுபடுவது என்பது எங்கள் தலைமுறையில் கொஞ்சம் சிரமமே. நான் எட்டாவது வரைதான் படித்திருக்கேன். திருமணத்திற்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என அவர்களை பார்த்துக்கொண்டு, வீட்டோடுதான் இருந்தேன். குழந்தைகள் வளர்ந்த பிறகு அவரவர் தங்களின் வேலைகளை பார்த்துக் கொள்ள ஆரம்பித்ததும், எனக்கு வீட்டு வேலை போக அதிகப்படியான நேரம் இருந்தது.

அந்த நேரத்தில் சும்மா இருக்க பிடிக்காமல் என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு சமையல் செய்வது என்பது ரொம்ப பிடித்த விஷயம். அதனால் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொடிகளையும் நானே தயார் செய்வேன். சில சமயம் வேலைக்குச் செல்பவர்களுக்காக எனக்கு தெரிந்த உணவுகளை சிறிய அளவில் அவர்களுக்கு சமைத்துக் கொடுத்து வந்தேன். உணவுக்கு தேவையான பொடிகள் மட்டுமில்லாமல், என் மகளுக்காக வீட்டிலேயே குளியல் பொடி மற்றும் சீயக்காய் போன்றவற்றையும் அரைத்து வைப்பேன். அதைப் பார்த்தவர்கள் இதை ஏன் ஒரு தொழிலாக செய்யக்கூடாது என்று என்னிடம் கேட்டார்கள்.

எனக்கும் இது போன்ற வேலையில் ஆர்வம் அதிகமாக இருந்ததால், செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதற்காக என்ன செய்யலாம், அதற்கு தேவையான பொருட்களை எங்கு வாங்கலாம் என ஒவ்வொன்றை பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தேன்’’ என்ற தீபா, தற்போது தன்னை போல் வீட்டில் இருந்தபடியே தொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

‘‘தொழில் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்ததும், எனக்கு சோலார் ட்ரையர் பற்றி தெரிய வந்தது. அதன் பிறகு மேலும் உணவுப் பொருட்களை தயாரிக்க சில இயந்திரங்களின் தேவை இருந்ததால், அதை வாங்குவதற்கு நான் வங்கியில் லோன் அப்ளை செய்திருந்தேன். வங்கியில் எனக்கு வேளாண் தொழில், அறிவியல் மையம் மற்றும் விவசாயம் சார்ந்த

சிறு தொழில் செய்வதற்கான அரசு
நிதி வழங்கும் திட்டத்தை பற்றியும்
விளக்கினார்கள். அதன்படி நானும்
சிலரை சந்தித்து இது குறித்து தெரிந்து
கொண்டேன். இடையில் வங்கியில்
என்னுடைய லோனுக்கான வேலை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் பொடிகளை வீட்டில் வைத்து தயார் செய்ய தேவையான இயந்திரங்களை வாங்கி வைத்தேன். அதில்தான் பொடிகளை தயாரித்து வருகிறேன்’’ என்றவர், தான் தயாரிக்கும் பொடிகள் மற்றும் இதர தயாரிப்புகளை பற்றியும் விளக்கினார். ‘‘ஆரம்பத்தில் சீயக்காய் தூள், இட்லி பொடி மற்றும் பருப்பு பொடி போன்றவற்றைதான் செய்துட்டு வந்தேன். அதுவும் என் வீட்டு பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், உறவினர்கள், நண்பர்கள்னு கேட்டா அவர்களுக்கு செய்து தருவேன்.

தற்போது இட்லி பொடிகளிலே ஆறு வகையான பொடிகளை தயாரிக்கிறேன். மேலும் ப்ரீ மிக்ஸ் தோசை மாவு, கஞ்சி மாவு அதிலும் சில வகைகள் தயாரிக்கிறேன். இவை தவிர ஊறுகாய் மற்றும் தொக்கு வகைகளும் செய்து கடைகளில் விற்பனை செய்கிறேன். ஒரு சிலர் நான் செய்வதை அறிந்து என்னிடம் நேரடியாகவும் பெற்றுக்கொள்வார்கள். இது போக எங்கள் பகுதியில் ஆவாரம் பூ விளைச்சல் அதிகம் என்பதால், அதை வைத்து குழந்தைகளுக்கான குளியல் பவுடர்கள் மற்றும் ஆவாரம் பூ தேநீர் (tea bags) தயாரிக்கிறேன்.

அரசு நடத்தும் சில கண்காட்சிகளில் ஸ்டால்கள் அமைத்து அதில் எங்களின் பொருட்களை விற்பனை செய்வேன். அதன் மூலமாகவும் எனக்கு வாடிக்கையாளர்கள் வருவாங்க. குறைந்த அளவிலான பொருட்கள் என்பதால் வீட்டிலேயே தான் தயாரிக்கிறேன். அதனால் என்னுடைய இந்த வேலையை நானே பார்த்துக் கொள்கிறேன்.

அதாவது, மூலப்பொருட்கள் வாங்குவது முதல், பொடி வகைகளை தயார் செய்வது, அதனை கடைகளில் கொண்டு சேர்ப்பது வரை அனைத்துமே நானே பார்த்துக் கொள்கிறேன். இதில் என் கணவரும் எனக்கு உதவியாக இருக்கிறார். பொடிகளுக்கு நான் உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் இங்கு எங்கள் கிராமத்திலும், பக்கத்தில் உள்ள கிராமங்களிலும் கிடைக்கக்கூடியவைதான்.

ஒரு சில பொருட்களை அருகில் இருக்கும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்வேன். தற்போது என்னுடைய தயாரிப்புகளில் 2 வகை இட்லி பொடி, சீயக்காய், சிறுதானிய தோசை மாவு, கருப்புகவுனி கஞ்சி மாவு, ஒரப்படை அடை மிக்ஸ் என குறிப்பிட்ட ஆறு பொருட்களுக்கு கடைகளில் பார் கோடும் வாங்கியிருக்கேன். கடைகளுக்கு கொடுப்பதோடு, கேட்பவர்களுக்கு சில்லரையாகவும் என்னுடைய தயாரிப்புகளை கொடுத்து வருகிறேன்.

என்னுடைய தயாரிப்புகளில் இயற்கையான முறையில் விளையும் பொருட்களைதான் பயன்படுத்துகிறேன். இதில் எந்த ஒரு ரசாயனமும் கலப்பதில்லை. இவை அனைத்தும் பொருட்களின் ஆரம்ப விலையான 75 ரூபாயில் கிடைக்கும். மேலும், பொருட்களின் அளவுக்கு ஏற்ப விலையும் மாறுபடும். பொடி, சீயக்காய், ஊறுகாய் மட்டுமில்லாமல் தலை முடிக்கான எண்ணெயும் தயாரிக்கிறோம். குளியலுக்கென பிரத்யேக மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் நலங்கு மாவு மற்றும் குளியல் பொடியும் உள்ளது.

நாங்கள் தயாரிக்கும் பொருட்களைதான் எங்க வீட்டில் உள்ள அனைவருமே பயன்படுத்தி வருகிறோம். எங்களின் சொந்த தேவைக்காக தயாரிக்க ஆரம்பித்து, தற்போது கடந்த இரண்டு வருடமாக கடைகளுக்கு விற்பனைக்காக கொடுத்து வருகிறேன். ஆரம்பத்தில் நான்கு பொருட்கள் மட்டுமே தயாரித்து வந்தோம். தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறோம்’’ என்று புன்னகையுடன் பதிலளித்தார் தீபா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

படங்கள்:ஜா.குணசேகரன்

The post மதிப்புக்கூட்டல் பொருட்கள் மேல் எனக்கு ஆர்வம் அதிகம்! appeared first on Dinakaran.

Related Stories: