ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ஆன்யான் பட்டை

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு பெண்ணும் அவள் வாழ்நாளில் பூப்படைந்த பிறகு பிரதி மாதமும் மாதவிடாயை கடந்து செல்ல வேண்டும். பருத்தி துணி அசவுகரியத்தை ஏற்படுத்தியதால் நாப்கின்கள் அறிமுகமானது. ஆரம்பத்தில் பருத்தியால் தயாரிக்கப்பட்ட இந்த நாப்கின்கள் தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. பெண்களுக்கு சவுகரியமாக கருதப்படும் இந்த நாப்கின்கள் இப்போது அவர்களின் உடல் நிலையை பாதிக்கக்கூடியதாக மாறிவருகிறது.

காரணம், இதில் பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள். இதைத் தவிர்க்க இயற்கை முறையில் நாப்கின்களை உற்பத்தி செய்ய துவங்கினர். அந்த வரிசையில் முழுக்க முழுக்க ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து நாப்கின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் காரைக்குடியை சேர்ந்த கிருத்திகா. இவர் ‘மாம் ஆன்யான்’ என்ற பெயரில் ஆன்லைன் முறையில் இதனை விற்பனை செய்கிறார்.

‘‘வேதியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடிச்சிருந்தாலும், 15 வருடம் வங்கித்துறையில் தான் வேலைப் பார்த்து வந்தேன். திருமணமானதும், எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததால், அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக முழு நேர இல்லத்தரசியாக மாறினேன். இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது பகுதி நேர ஆன்லைன் வேலையில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் அந்த வேலையில் நாம் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். அதற்கான பலன் என்பது நாம் நினைக்கும் அளவுக்கு கிடைக்காது. அந்த சமயத்தில்தான் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஆர்கானிக் பொருட்கள் குறித்து தெரிந்து கொண்டேன்.

அதில் பலர் உணவுப்பொருட்களின் விற்பனையில்தான் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதனால் நான் பெண்களுக்கான ஆர்கானிக் காஸ்மெட்டிக் பொருட்கள் மேல் கவனம் செலுத்தினேன். சோப், சீயக்காய் போன்றவற்றை ஆர்கானிக் முறையில் தயாரிக்கும் நிறுவனத்தில் வாங்கி அதனை நான் என் பேனரில் விற்பனை செய்தேன். அதில் ஈடுபட்ட போதுதான் ஆர்கானிக் சானிடரி நாப்கின் குறித்து தெரிய வந்தது. வாழை மட்டை மற்றும் புளிச்ச கீரை தண்டு கொண்டு நாப்கின்களை தயாரிப்பது தெரிய வந்தது. அது குறித்த ஆய்வில் இறங்கினேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் அதற்கான தேடலில் ஈடுபட்டேன். அந்த சமயத்தில்தான் ஆன்யான் ஸ்ட்ரிப் நாப்கின்கள் பற்றி தெரிய வந்தது. இதனை ஐரோப்பிய நாடுகளில் முழுக்க முழுக்க ஆர்கானிக் முறையில் தயாரிக்கிறார்கள்’’ என்றவர் அது குறித்து விளக்குகிறார்.

‘‘தற்போது கடைகளில் விற்கப்படும் நாப்கின்கள் நம்முடைய சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழலை பெரிய அளவில் பாதிக்கிறது. இவை எளிதில் மக்காது. அதற்கு முக்கிய காரணம் இவற்றில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சந்தையில் விற்கக்கூடிய மலிவான தரமற்ற சானிடரி நாப்கின்களில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக், டையாசக்சின் குளோரின், ப்ளீச்சிங் வாசனை திரவியங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மாதவிடாய் கோளாறுகள், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மன அழுத்தம், குழந்தையின்மை, நீர்கட்டிகள், PCOD என பலவித பிரச்னைகளை பெண்கள் சந்திக்கிறார்கள்.

காரணம், மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு நல்ல சமுதாயத்தை பெண்கள் நினைத்தால் நிச்சயம் உருவாக்க முடியும். அற்புதமான பூமி தாய்க்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் கலந்த நாப்கின்களை தவிர்த்து ஆர்கானிக் நாப்கின்களுக்கு மாற வேண்டும். இதில் ஐந்துவித தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளது. ISO சான்றிதழும் பெற்றுள்ளது. இதில் மெல்லிய ஸ்ட்ரிப் இணைக்கப்பட்டு இருக்கும் அதில்தான் ஐந்துவித தொழில்நுட்ப அம்சங்கள் பொறுத்தப்பட்டுள்ளது. முதலாவது ஆன்யான். இது உதிரப்போக்கின் போது வெளியாகக்கூடிய பாக்டீரியாவை அழிக்கும்.

இதனால் அந்த சமயத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்னையினை தடுக்கும். அடுத்து அகச்சிவப்பு கதிர்கள். உடலில் வலி ஏற்பட்டால், அகச்சிவப்பு கதிர்களை வலியுள்ள இடத்தில் செலுத்துவார்கள். அது வலியை குறைக்கும். இதில் உள்ள அகச்சிவப்பு கதிர்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலிகளை குறைத்து, ரத்த ஓட்டத்தினை சீராக்கும். ஹார்மோன்களை சமன் செய்ய உதவும். இதனை தொடர்ந்து ஸ்ட்ரிப்பில் உள்ள காந்த சக்தி மாதவிடாய் கால அசவுகரியத்தை குறைக்கும். நானோ சில்வர் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். உடலின் PH அளவினை சமன் செய்யும். பல்வேறு மகளிர் சம்பந்தமான நோய்கள் பாதிக்காமல் தடுக்கும். கைட்டிங் (chiting), பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்வதை தடுத்து எளிதில் மக்க செய்யும். நாப்கின் லேயர் மரக்கூழ் கொண்டு அமைக்கப்பட்டு இருப்பதால், அது ஈரத்தன்மையினை உறிஞ்சிக்கொள்ளும்’’ என்றவர் பெண்கள் இதனை சிறுதொழிலாக செய்யவும் உதவி செய்து வருகிறார்.

‘‘பெண்கள் ரூ.2000 முதலீடாக செலுத்தினால் போதும், அவர்கள் மாதம் ஒரு கணிசமான தொகையினை பெறலாம். நான் முதலில் இதனை சமூகவலைத்தளங்களில் தான் பதிவு செய்தேன். அதைப்பார்த்து பலர் இதனை வாங்க முன்வந்தார்கள். அதனைத் தொடர்ந்து இதன் மூலம் மற்ற பெண்களுக்கும் ஒரு வருமானத்தை ஏற்படுத்தி தர விரும்பினேன். அதனால் சுயஉதவிக்குழு பெண்களை சந்தித்து பேசினேன். அவர்களுக்கு முதலில் ஆர்கானிக் நாப்கின் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினேன்.

அவர்கள் ரூ.2000 செலுத்தி 25 பாக்கெட் கொண்ட நாப்கின்களை பெற்றுக் கொள்ளலாம். அதனை லாபத்தில் விற்பனை செய்யலாம். இதனை நாங்க 50 மற்றும் 100 பாக்கெட்களிலும் தருகிறோம். ஒருமுறை இதனை பயன்படுத்த துவங்கினாலே அதில் உள்ள மாற்றங்களை பெண்கள் உணர்வார்கள் என்பதால், இதன் மூலம் மாதம் ஒரு கணிசமான வருமானத்தை பெற முடியும். நான் இந்த தொழில் துவங்கி நான்கு மாதங்கள்தான் ஆகிறது. தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தாலும், கூடிய விரைவில் இதற்கான தயாரிப்பு யூனிட் ஒன்றை இங்கு அமைத்து அதன் மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்ற எண்ணம் உள்ளது’’ என்றார் கிருத்திகா.

தொகுப்பு: ரிதி

The post ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ஆன்யான் பட்டை appeared first on Dinakaran.

Related Stories: