பெண்களின் ஆரோக்கிய பிரச்னைகளை தீர்க்கும் கர்லாக்கட்டை!

நன்றி குங்குமம் தோழி

‘‘இது விளையாட்டு கிடையாது, முழுக்க முழுக்க உடற்பயிற்சி சார்ந்தது. மிகவும் பழமையான உடற்பயிற்சி. பல ஆண்டுகளாக நாம் இதை செய்து வருகிறோம். நம்முடைய தாத்தா காலத்தில் பெரும்பாலானவர்களின் வீட்டில் உடற்பயிற்சிக்காக இதனை வைத்திருப்பார்கள். காலம் மாற மாற இதன் பயன்பாடும் குறைந்துவிட்டது. தற்போது இதன் பலனை தெரிந்து கொண்டு மீண்டும் பயிற்சி எடுக்க ஆரம்பித்துள்ளனர்’’ என்கிறார் அபுதாபியை சேர்ந்த பிரியதர்ஷினி. இவர் நம் பழமை வாய்ந்த உடற்பயிற்சியான கர்லாக்கட்டை பயிற்சியினை பெண்கள்
மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் அளித்து வருகிறார்.

‘‘கிராமத்தில் பெரும்பாலான நம் முன்னோர்கள் வீட்டில் கண்டிப்பா ஒரு கர்லாக்கட்டை இருக்கும். அப்ப ஜிம் எல்லாம் கிடையாது. மல்யுத்தப் பயிற்சிதான். அதில் மிகவும் முக்கியமானது இந்த கர்லாக்கட்டை பயிற்சி. பல்லவர்கள் காலத்துக்கு முன்பு இருந்தே சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக பலரால் செய்யப்பட்ட உடற்பயிற்சி இது. புஜ கர்லா, கை கர்லா, குஸ்தி கர்லா, படி கர்லான்னு பல வகை இருக்கு. முழு உடலுக்கும் பலம் வேண்டும் என்பதால் பெரும்பாலான மல்யுத்த வீரர்கள் குஸ்தி கர்லாவை பயன்படுத்துவாங்க. தலை முதல் பாதம் வரை ஒருவரை பலப்படுத்தும். பெண்களுக்கு படி கர்லா. நாம் அரிசி அளக்க பயன்படுத்தும் படியின் வடிவில் இருக்கும்.

தொப்பை கர்லாவை அனைவரும் பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் இதைக் கொண்டு ஆண்கள் மட்டும் தான் பயிற்சி எடுத்து வந்தார்கள். ஆனால் பெண்களுக்கு உடல் ரீதியாக பல வித பிரச்னைகள் இந்தப் பயிற்சி எடுப்பதால் குணமாகிறது. இதில் மொத்தம் 64 வகை சுற்றுகள் உள்ளது. அதில் ஏதாவது ஒரு சுற்றினைக் கற்றுக்ெகாண்டு தொடர்ந்து பயிற்சி பெற்றாலே வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம்’’ என்றவர் தன்னுடைய உடல் பிரச்னைக்காகத்தான் இந்தப் பயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.

‘‘எனக்கு நரம்பு சம்பந்தமான பிரச்னை இருந்தது. கைக் கால்கள் மறத்துப் போகும். உடல் எப்போதுமே சோர்வாக இருக்கும். வியர்வை அதிகமாக வெளியேறும். இது ஸ்ட்ரெஸ் அல்லது உடல் ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால் ஏற்படும். குறிப்பாக இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. என் ஏழு வயதில் நான் என் தந்தையை இழந்தேன். அந்த பாதிப்பு என்னுடைய ஆழ்மனதில் பதிந்துவிட்டது. அதுகூட காரணமாக இருக்கலாம்.

ஆயுர்வேதம், அலோபதின்னு பார்க்காத சிகிச்சைகள் இல்லை. இதற்கிடையில் திருமணமாகி அபுதாபி சென்றேன். அங்கும் என் பிரச்னைக்கான தீர்வு கிடைக்கல. பலர் உடற்பயிற்சி மேற்கொள்ள சொன்னாங்க. எனக்கு ஜிம்மிற்கு செல்வதில் விருப்பமில்லை. பாரம்பரிய முறையில் உடற்பயிற்சி ஏதாவது உள்ளதான்னு தேடிய போதுதான் புதுச்சேரியில் செந்தில் கண்ணன் அவர்கள் நடத்தி வந்த ஜோதி சிலம்பம் ஷக்த்திரிய குருகுலம் பற்றி தெரிய வந்தது. அவர் அங்கு சிலம்பம், கர்லாக்கட்டை, யோகாசனம் போன்ற பல்வேறு பயிற்சி அளிக்கிறார்.

கர்லாக்கட்டை மிகவும் பாரம்பரிய கலை என்பதால் அதை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். நான் இதற்கான பயிற்சி எடுக்க எடுக்க என்னுடைய உடலில் நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். இதில் உள்ள அனைத்து சுற்றுகளும் கற்றுக்கொண்டு, சான்றிதழ் பெற்றேன். என் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது. அதே போல் மற்ற பெண்களின் உடல் ரீதியான பிரச்னைகளுக்கும் இது ஒரு தீர்வாக இருக்கும் என்று தோன்றியது. நான் கற்றுக் கொண்டதை சொல்லிக் கொடுக்க விரும்பினேன். ‘மெய் ஏன்சியன்ட் ஃபிட்னெஸ் சென்டர்’ என்ற பெயரில் பயிற்சி மையத்தினை துவங்கினேன்’’ என்றவர் தமிழ்நாட்டில் கர்லாக்கட்டை பயிற்சியாளர் சான்றிதழ் பெற்ற முதல் பெண்மணியாம்.

‘‘கர்லாக்கட்டை பயிற்சி எடுத்தால் ஒருவரின் அங்கலட்சணம் அழகாக மாறும். முதலில் கர்லாவை கையில் எடுத்து சுழற்றும் மெய்ப்பாடம் கற்க வேண்டும். சுழற்சிகளை வெறும் கைகள் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். மூன்று மாதம் இந்தப்பயிற்சிக்கு பிறகுதான் கர்லாக்கட்டையை கையால் எடுத்து சுற்றுவதற்கான பயிற்சி அளிக்கப்படும். இதில் 1500 இயக்கங்கள் உள்ளது. அதை செய்வதன் மூலம் நம்முடைய உடல் 360 டிகிரி அளவில் இயக்கப்படும்.

நரம்பு மண்டலம் மற்றும் தசைக்கும் ஒருங்கிணைப்பு ஏற்படும். நம்முடைய உடலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படுவதால், தலை முதல் பாதம் வரை அனைத்தும் வலுப்பெறும். சொல்லப்போனால் கர்லாக்கட்டை பயிற்சி கொடுத்த பிறகுதான் எந்த ஒரு பாரம்பரிய விளையாட்டையும் கற்றுக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு சிலம்பம் மட்டுமில்லை அனைத்து தற்காப்புக் கலைகளுக்கும் அடித்தளமே கர்லாக்கட்டைதான்.

இதில் 64 வகை சுற்றுகள் இருப்பதால், ஒவ்வொரு நாளும் அதற்கான பயிற்சிகள் மாறுபடும். பொதுவாக இந்தப் பயிற்சி ஒருவரின் உடலை வலுவாக்கும் என்றாலும், பெண்களுக்கு உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது. குறிப்பாக PCOD, மாதவிடாய் சுழற்சியை சரி செய்யும், ஆட்டோ இம்மியூனை 80% குணமாக்கும், தைராய்டு பிரச்னை, ஹார்மோனல் இம்பாலன்ஸ் என பெண்கள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்னையை குணமாக்கும்.

நான் இந்தப் பயிற்சி மையத்தினை கோவிட் போது துவங்கியதால், ஆன்லைன் முறையில்தான் இன்றும் பயிற்சி அளித்து வருகிறேன். உலகம் முழுதும் இதுவரை 1000 பேருக்கு மேல் பயிற்சி கொடுத்திருக்கிறேன். சின்னக் குழந்தைகள், நடு வயது பெண்கள் மற்றும் வயதானவர்கள் என அனைத்து வயதினரும் பயிற்சி எடுக்கலாம். நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் பயிற்சி எடுத்தால், அதனை கட்டுப்பாட்டில் வைக்கலாம். முதலில் இன்ஸ்டாவில் தான் இதுகுறித்து பதிவு வெளியிட்டேன். அதைப் பார்த்து பலர் பயிற்சி எடுக்க துவங்கினார்கள். ஆன்லைன் பயிற்சி என்பதால், ஒவ்வொரு பயிற்சியும் பதிவு செய்யப்படும். அவர்களின் நேரத்திற்கு ஏற்ப அதனைப் பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தைகள் சிறிய வயதில் இருந்தே இதற்கான பயிற்சி எடுக்கும் போது, அவர்கள் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், கவனச்சிதறல் ஏற்படாது, நரம்பு மற்றும் தசைக்கும் ஒருங்கிணைப்பு கிடைக்கும். நியாபகசக்தியை அதிகரிக்கும். கர்லாக்கட்டைப் பொறுத்தவரை தனிப்பட்ட ஒருவரின் உடல் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப அமைக்கப்படும். அதாவது, குழந்தைகளுக்கு ஒன்று முதல் ஒன்றரை எடைக் கொண்ட கர்லாக்கட்டை பயன்படுத்துவார்கள். பெரியவர்கள் என்றால் அவர்களின் எடைக்கு ஏற்ப 20 கிலோ வரை பயன்படுத்தலாம். வாகை மரம், அக்னி பலா மரம், மருத மரத்தில் கர்லாக்கட்டை தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பதால், அதனை கையால் பிடித்து சுழற்றும் போது அதனாலும் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

இது நம்முடைய பாரம்பரிய கலை. காலப்போக்கில் அழிந்துவிட்டது. அதனை மீண்டும் மீட்டெடுத்து இன்று பலர் இதனை பயின்றுவருகிறார்கள். இந்தக் கலையை மேலும் பலருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2021 முதல் ஒவ்வொரு வருடமும் 1000 பேர் ஒரே நேரத்தில் புதுச்சேரியில் உள்ள குருகுலத்தில் பயிற்சி செய்து உலக அளவில் சாதனை செய்கிறோம். இந்த வருடமும் இந்த சாதனை தொடரும்.

யோகாசனம் எப்படி எல்லா இடங்களிலும் பிரபலமாக உள்ளதோ அதே போல் கர்லாக்கட்டை பயிற்சியினையும் உலகளவில் பல இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் கனவு. அதனால்தான் இந்த உலக சாதனையை நானும், என் ஆசான் செந்தில் கண்ணன் அவர்களும், உலக விளையாட்டு கூட்டமைப்புடன் இணைந்து நிகழ்த்துகிறோம். தற்போது நான் ஆன்லைன் முறையில் மட்டுமே பயிற்சி அளித்து வருகிறேன். வரும் நாட்களில் ஒரு தனிப்பட்ட பயிற்சி மையம் அமைத்து அதில் அனைவருக்கும் பயிற்சி அளிக்க இருக்கிறேன்’’ என்றவருக்கு உலக விளையாட்டு கூட்டமைப்பு ஷக்த்திரி விருது வழங்கிஉள்ளது.

தொகுப்பு: ஷன்மதி

The post பெண்களின் ஆரோக்கிய பிரச்னைகளை தீர்க்கும் கர்லாக்கட்டை! appeared first on Dinakaran.

Related Stories: