புளிய மரங்கள் சொல்லும் கதை!

நன்றி குங்குமம் தோழி

சாலை ஓரத்தில் வரிசையாக இருக்கும் புளிய மரங்கள் ஒவ்வொன்றாக வேரோடு வீழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு மரத்திலும் கடைசியாக இருக்கிற புளியங்காய்களை பல பெண்கள் பறித்துக் கொண்டிருக்கின்றனர். புளிய மரம் வறட்சியை தாங்கி நிற்கும். உறுதித்தன்மை, பன்னெடுங்காலம் வளரும் தன்மை போன்றவற்றால் புளிய மரங்கள் நம்முடையநிலத்தின் குறியீடாக கருதப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரம் இருக்கும் புளிய மரங்களில் இருக்கும் காய்களையும் கொட்டைகளையும் உதிர்த்து பல பெண்கள் எடுத்துச்செல்வதை பார்த்திருப்போம். மூட்டையாக எடுத்துச் செல்வதில் பாதி விற்பனைக்காகவும் தங்களுடைய உணவிற்காகவும் மக்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

மன்னராட்சி காலத்தில் இருந்து புளிய மரம் நம்முடைய உணவு, மருந்து, கடவுள் நம்பிக்கை, சடங்குகள், வணிகம் என பல தளங்களிலும் மக்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறது. இன்று அருகி வரும் மரமாகவும் புளிய மரம் இருக்கிறது. அடித்தட்டு மக்களின் முக்கிய உணவாகவும் புளியை பார்க்கலாம். வீழ்த்தப்பட்ட மரத்தில் தன்னுடைய உணவிற்காக புளியங்காய்களை பறித்துக்கொண்டிருந்தார் ராதிகா. அவரிடம் இது குறித்து கேட்ட போது…

‘‘நாங்க கள்ளக்குறிச்சியை சேர்ந்தவங்க. நாங்க இங்க புளிய மரத்தில் இருந்து புளிப் பறிக்க வந்தோம். ஆலத்தூர் போகிற வழியில் உள்ள இந்தச் சாலையின் இருபுறமும் புளிய மரங்கள்தான் இருக்கும். இங்கிருக்கும் மரத்தில் இருந்து வருடத்திற்கு ஒருமுறை வந்து புளியங்காய்களை பறிச்சிக் கொண்டு போவோம். அந்தப் புளியை எங்க வீட்டுச் சமையலுக்கு பயன்படுத்துவோம். இந்த புளி இரண்டு வருடம் வரைக்கும் அப்படியே இருக்கும். வெளியூர்களுக்கு செல்லும் போது புளிச்சோறு கட்டி எடுத்துப் போனா 4 நாட்கள் வரை சாப்பிடலாம். குழம்பில் புளி சேர்ப்பதால் குழம்பு கெடாமல் இருக்கும். சிலர் விற்பனைக்காகவும் எடுத்துச் செல்றாங்க. குறிப்பாக வயதானவர்கள். அவர்கள் புளியை சேகரித்து விற்றுவிடுவார்கள். இப்போது சாலை விரிவாக்கம் செய்வதால், சாலை எங்கும் இருக்கும் புளியமரங்களை வெட்டி வருகிறார்கள். இனி புளி எடுப்பதற்கு நெடுந்தூரம் போகணும்’’ என்றார் ராதிகா.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலும் புளிய மரங்களே அதிகமாக நிறைந்திருக்கின்றன. தற்போது இவை அனைத்தும் சாலை விரிவாக்கத்திற்காக தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. நம் சாலைகளில் இருக்கும் புளிய மரங்கள் கிட்டதட்ட 450 வருடம் பழமையானது. இதுகுறித்து ‘சுளுந்தீ’ என்ற நாவலில் புளிய மரங்களை பற்றிய தகவல்களை குறிப்பிட்டு இருப்பார் அந்நாவலின் ஆசிரியர் இரா.முத்துநாகு. அவரிடம் தமிழ்நாட்டில் புளிய மரங்கள் எப்படியெல்லாம் நடப்பட்டன? ஏன் நடப்பட்டன? புளிய மரத்தின் வரலாறு குறித்து விவரித்த போது, பல அறிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘புளிய மரம் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளரக்கூடியது. குறிப்பாக ஆந்திராவில் வடக்குப் பகுதிகளில் அதிகமாக புளிய மரங்களை பார்க்க முடியாது. கர்நாடகப் பகுதிகளில் பரவலாக இருக்கும். கேரளாவில் புளிய மரங்களை பார்க்கவே முடியாது. அதே போல் வட இந்தியாவிலும் புளிய மரங்கள் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டுமே எல்லா மாவட்டங்களிலும் புளிய மரத்தை பார்க்கலாம். இதன் படி புளிய மரம் நம்முடைய தமிழ் நிலத்திற்கான அடையாளமாக கருதப்படுகிறது என்று சொல்லலாம்.

புளிய மரம் கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. புளி உணவை பதப்படுத்தவும் பயன்படுத்தியிருக்கின்றனர். வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் கட்டுச் சோறு என்றாலே புளி சாப்பாட்டை செய்து எடுத்துப் போகிறார்கள். புளியில் செய்யும் குழம்பு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். பல உணவுப் பொருட்களிலும் புளி சேர்த்துதான் தயாரிக்கிறோம். அப்படிப்பட்ட புளிக்கு பின்னணியில் சில வரலாறுகள் உள்ளது.

மன்னராட்சி காலகட்டங்களில் தண்ணீர் தர்மம் போலவே வெயில் காலங்களில் பானை காரம் என்ற ஒன்றும் புழக்கத்தில் இருந்தது. வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்கவும் உடலில் தடிதடிப்பாக ஏற்படுவதை தடுக்கவும் புளி தண்ணீரில் கருப்பட்டி அல்லது உப்பை கலந்து குடித்து வந்தனர். இதற்கு பானை காரம் என்று பெயர். மருத்துவத்திலும் புளி பல வகைகளில் மக்களுக்கு பயன்படுகிறது. புளி உணவில் இருக்கக்கூடிய நஞ்சுகளை நீக்கக்கூடியது. அதோடு தற்கொலைக்கு யாராவது முயன்று மருந்து குடித்தால் அந்த காலகட்டங்களில் புளியையும் உப்பையும் கொடுத்துதான் அவர்கள் குடித்த அந்த மருந்தை முறியடிப்பார்கள்.

புளிய மரத்தில் இருக்கும் இலைகளை பறித்து சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளித்தால் காய்ச்சல், உடம்பு வலி குணமாகும். வெற்றிலை போட பயன்படுத்தப்படும் சுண்ணாம்பினை புளிய மரத்தின் காய்களை பயன்படுத்தி தயார் செய்தார்கள். வெற்றிலையை நம்முடைய செரிமானத்திற்காக மக்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதனுடன் முக்கியமாக செரிமானத்தை தூண்டுவதற்காக புளி பயன்படுத்தப்படுகிறது.

வைணவக் கோவில்களில் தல விருட்சமாகவே புளிய மரம் இருக்கிறது. ஆடு, மாடுகளுக்கு கால்களில் அடிபட்டால் புளியங்கொட்டைகளின் தோலை வைத்து பத்து போடுவார்கள். புளியங்கொட்டைகளை உணவாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். மருத்துவம், உணவு, வைணவ மதத்தின் குறியீடு போன்றவைதான் புளிய மரம் நம்முடைய சடங்குகளுக்குள் நுழைய காரணமாயிற்று.

எந்த ஒரு விஷயமும் நம்முடைய சடங்குகளுக்குள் இருந்தால்தான் மக்கள் அதை அதிகமாக பயன்படுத்தத் துவங்குவார்கள். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் கற்பூரம் அரபு தேசத்தில் இருந்து இங்கு வந்தது. ஆனால் அது நம்முடைய சடங்குகளுக்குள் இருப்பதால் பல தலைமுறையாக நாம் அதனை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். அப்படியான ஒன்றுதான் புளிய மரம். அரச மரம், ஆலமரம் என பல மரங்கள் இருந்தாலும் புளிய மரம் நம்முடைய உணவு மற்றும் மருத்துவம் இரண்டிற்கும் பயன்படும் மரமாக உள்ளது.

அதோடு வறட்சியை தாங்கி நெடுங்காலம் இருக்கும் மரம் என்பதால் இதனை அரசர்கள் தங்களுடைய அரசாட்சியின் குறியீடாக வைத்திருந்தனர். புளிய மரம் வைணவ சமயத்தில் தல விருட்சமாக வணங்கப்படுகிறது. அதனால்தான் பெருமாளுக்கு உகந்த புளியோதரையே செய்து படையலிடுகிறார்கள். அந்தக் காலத்தில் வைணவ அரசர்கள் யாராவது இறந்து விட்டால் அவரின் நினைவாக ஒரு புளியமரத்தை வைத்து விடுவார்கள். காரணம், புளிய மரம் பலமானது, பல்லாண்டு காலம் தழைத்து இருக்கக்கூடியது. இந்த மரத்தைப் போல் தனக்கு பின் வரும் அரசர்களும் வாழ வேண்டும் என்பதை குறிக்கவே இந்த மரத்தை நடுவார்கள். புதிதாக பொறுப்பேற்கும் அரசர் அந்த புளிய மரத்தின் நிழலில்தான் பதவியேற்பார். ‘நிழலடி நிழலாக வருவார்கள், அவர்களை அசைக்க முடியாது’ என்ற சொலவடையும் இருக்கிறது.

மதுரையை 1659ம் ஆண்டு காலங்களில் ஆட்சி செய்தவர் சொக்கநாதர் என்ற மன்னர். இவருடைய காலகட்டங்களில் தான் அதிகம் போர்கள் நடைபெறவில்லை. போரிட்டுக் கொண்டே இருந்தால் வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், போரற்ற காலங்களில் நாட்டின் வணிகத்தை அரசர்கள் மேம்படுத்தி வந்தார்கள். அதில் ஒன்றாக சாலைகளை உருவாக்க காரணமாக இருந்தார் மன்னர் சொக்கநாதர். அந்த சாலைகளுக்கு தன் மனைவியின் பெயரான ராணி மங்கம்மாள் சாலை என பெயரிட்டார்.

அந்த சாலை நெடுக்க புளிய மரத்தை நட்டு வைத்தார். ஆங்கிலேயர் ஆட்சியிலும் புளிய மரங்களே நடப்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் புளிய மரங்கள் பெருகின. 450 வருடத்தை கடந்தும் புளிய மரங்கள் தமிழ்நாட்டில் நீடித்து இருக்கிறது. புளியை வைத்து வணிகமும் நடந்துள்ளது. டச்சுக்கார்கள் புளியை இங்கிருந்து அவர்களுடைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். அவர்களை தொடர்ந்து போர்த்துக்கீசியர்களும் புளியை கொண்டு வணிகம் செய்தனர்.

இன்றும் பிரெஞ்ச் தேசத்தில் புளிச்சோறு ஒரு உணவாக இருக்கிறது. கடல் ஒட்டிய பகுதிகளில் இருக்கும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் புளியை படையலாக வைத்திருந்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன. இன்றும் சாலை ஓரங்களில் இருக்கும் புளிய மரங்கள் எல்லாமே நம்முடைய நிலத்தின் குறியீடு’’ என்கிறார் எழுத்தாளர் முத்துநாகு.

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்: சி.அர்ச்சுனன்

The post புளிய மரங்கள் சொல்லும் கதை! appeared first on Dinakaran.

Related Stories: