திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாத உண்டியல் காணிக்கை ₹118 கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களுக்கு ஏற்றவாறு பணம், வெள்ளி, தங்கம், வைரம், வெளிநாட்டு கரன்சிகள் போன்றவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இதற்காக கோயிலில் பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.

அதில் பக்தர்கள் செலுத்தப்படும் காணிக்கைகள் தினமும் எண்ணப்பட்டு, ஏழுமலையான் கோயில் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படுகிறது. அதன்படி தினமும் ₹3 கோடி முதல் காணிக்கை கிடைக்கிறது. விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது.அதன்படி கடந்த மார்ச் மாதம் ₹118 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. தொடர்ந்து 25வது மாதமாக உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியுள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

24 மணி நேரம் காத்திருப்பு
இதற்கிடையில் நேற்று ஒரேநாளில் 81,224 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 24 ஆயிரத்து 93 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. அதில், ₹4.35 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காம்ப்ளக்ஸில் 21 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் இல்லாத பக்தர்கள் 24 மணி நேரமும், ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனிவார ஆஸ்தானம், ஆண்டு பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, யுகாதிக்கு முந்தைய செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடப்பது வழக்கம். அதன்படி யுகாதி பண்டிகை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும். 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாத உண்டியல் காணிக்கை ₹118 கோடி appeared first on Dinakaran.

Related Stories: