தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் கூடாது: வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!!

டெல்லி: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாமதமாகத் தாக்கல் செய்ததற்காக, அக்கட்சிக்கு அபராதம் மற்றும் ரூ.103 கோடி வட்டி உட்பட ரூ.135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை பிடித்தம் செய்த வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. மேலும் சமீப காலங்களில் பெறப்பட்ட அனைத்து வருமான வரி நோட்டீஸ்களையும், உச்ச நீதிமன்றத்தில் ஒன்றாக சேர்த்து விசாரிக்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்விவகாரங்கள் தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், டெல்லி உயர் நீதிமன்றங்களில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. ஆனால் காங்கிரஸ் கோரிக்கை ஏற்கப்படாததால், தற்போது காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூ.1700 கோடி வசூல் செய்வதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கமாட்டோம் என்றும், ஜூன் 2 வாரத்துக்கு பிறகு வழக்கு விசாரணையை மேற்கொள்ளுமாறு அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இதனை பதிவு செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி தரக்கூடாது என வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் கூடாது: வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: