நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு 6வது முறையாக பிரதமர் மோடி 9ம் தேதி வருகை: சென்னையில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு 6வது முறையாக பிரதமர் மோடி வரும் 9ம் தேதி வருகிறார். அன்றைய தினம் அவர் சென்னையில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் பிரசாரம் செய்து வருகிறார்.

அதே போல் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய தலைவர்களின் பார்வையும் தற்போது தமிழ்நாடு பக்கம் திரும்பியுள்ளது. அதாவது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி 5 தடவை தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதாவது கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுக்கூட்டங்களிலும் பேசினார். கோவையில் ரோடு ஷோவிலும் பங்கேற்றார். இந்நிலையில் மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிற 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார். அவர் சென்னை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

இதற்கான பயண திட்டம் தயாராகி வருகிறது. 9ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி, தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று கூறப்படுகிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2 இடங்களை தேர்வு செய்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அவர்களின் முடிவை பொறுத்து இடம் உறுதி செய்யப்படும். நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் ேமாடி விமானத்தில் திருச்சி புறப்பட்டு செல்கிறார். அங்கு வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் கேரளா செல்கிறார். அதன் பிறகு மீண்டும் சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய தமிழகம் வருவார் என்று கூறப்படுகிறது.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு 6வது முறையாக பிரதமர் மோடி 9ம் தேதி வருகை: சென்னையில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: