முன்னாள் தூதர் சாந்து உட்பட 11 பேருக்கு சீட்: பாஜ அறிவிப்பு

புதுடெல்லி: முன்னாள் தூதர் தரண்ஜித் சிங் சாந்து மற்றும் பிற கட்சியிலிருந்து வந்து சேர்ந்தவர்கள் உட்பட 11 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டுள்ளது. ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களுக்கான 11 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இதில், சமீபத்தில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து பஞ்சாப்பின் அமிர்தரசில் களமிறக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இவர் இலங்கைக்கான இந்திய தூதராகவும் இருந்துள்ளார். இவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. இதுதவிர, பல்வேறு கட்சியிலிருந்து விலகி பாஜவில் சேர்ந்தவர்களுக்கும் சீட் தரப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் ஒரே எம்பியாக இருந்த சுனில் குமார் ரிங்கு கடந்த சில தினங்களுக்கு முன் பாஜவில் சேர்ந்தார். அவருக்கு ஜலந்தர் தனித் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிஜூ ஜனதா தளத்தில் இருந்து வந்த பார்திருஹரி மஹதாப்புக்கு ஒடிசாவின் கட்டாக் தொகுதியிலும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியந்த் சிங்கின் பேரனான ரவ்னீத் சிங் பிட்டு லூதியானா தொகுதியிலும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரினீத் கவுத்துக்கு பாட்டியாலா தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாஜ 411 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

The post முன்னாள் தூதர் சாந்து உட்பட 11 பேருக்கு சீட்: பாஜ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: