ஃப்ரெஷ் உணவுகளை மக்களிடம் சேர்க்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

‘‘சென்னைதான் என்னோட ஊர். இந்த பீச் காற்றில்தான் நான் வளர்ந்தேன். நாங்க மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. என் தாத்தா கடலில் சென்று மீன் பிடிப்பார். அப்பா
கடலுக்கு எல்லாம் போனதில்லை. பீச் கரையில் அவர் மீன் கடை ஒன்றை நடத்தி வந்தார். மீன் வாசனையோட வளர்ந்ததால்தான் நானும் அதே ெதாழிலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்’’ என்று கூறும் அபர்ணா இன்ஸ்டாவில் ‘ஃபிஷர்மேன் ஸ்பெஷல்’ என்ற பெயரில் ஆன்லைன் முறையில் மீன், இறால், கனவா போன்ற கடல் சார்ந்தவைகளை விற்பனை செய்து வருகிறார்.

‘‘எனக்கு மருத்துவம் படிக்கணும்னு விருப்பம். ஆனால் நான் +2 படிக்கும் போதுதான் நீட் தேர்வு அறிமுகமானது. அதற்கு தனிப்பட்ட பயிற்சி எடுக்கணும். என் குடும்பம் இருக்கும் சூழலில் அவ்வளவு செலவு செய்ய முடியாது என்பதால் நான் இயன்முறை மருத்துவம் படிச்சேன். இரண்டாவது வருடம் படிக்கும் போது, என் பேராசிரியரின் கிளினிக்கில் உதவி இயன்முறை மருத்துவரா வேலை பார்த்து வந்தேன். இது தவிர காலை ஆறு மணிக்கு பிட்னெஸ் மையத்தில் இயன்முறை பயிற்சியாளராகவும் இருந்தேன்.

இந்த சமயத்தில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஊரே வீட்டிற்குள் அடங்கியது. அப்பாவாலும் கடையை திறக்க முடியல. என்னோட வருமானம் மட்டும்தான். இதில் பிட்னெஸ் மையமும் மூடியதால், மேலும் சிக்கல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆன்லைன் பிசினஸ் எல்லாம் பிரபலமாச்சு. எல்லோரும் பிரியாணி மற்றும் இதர உணவுகளை ஆன்லைனில் விற்கவும் வாங்கவும் ஆரம்பிச்சாங்க’’ என்றவர் கொரோனா காலத்தில்தான் ஆன்லைன் மீன் விற்பனையும் ஆரம்பித்துள்ளார்.

‘‘பார்த்து வந்த வேலைகளையும் கொரோனாவினால் தொடர முடியல. அப்பாவாலும் கடையை திறக்க முடியல. வீட்டு வாடகை, என் படிப்பிற்கான செலவை சமாளிக்கணும். அதை மனதில் கொண்டு நானும் ஆன்லைனில் ஏதாவது செய்யலாம்னு நினைச்சேன். ஊரே உணவு கடைகளைதான் திறந்தாங்க. அதற்கு முதலீடு போடணும். வீட்டுச் செலவிற்கே பணம் இல்லாத போது என்னால் பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாது. அதனால் மீனை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்தேன். காரணம், அந்த நேரத்தில் பலரும் தரமான உணவுகளை தேடினாங்க. குறிப்பா கடல் உணவுகளை ஃப்ரெஷ்ஷா கொடுக்கும் போது, கண்டிப்பா விரும்புவார்கள். இது குறித்து என் வருங்கால கணவரிடம் ெசான்னேன். அவரும் சம்மதிக்க, அப்படித்தான் இந்த ஆன்லைன் பிசினசை ஆரம்பித்தோம்.

இன்ஸ்டாவில் ஒரு பக்கம் ஆரம்பித்தோம். முதலில் அன்று பிடிக்கப்படும் மீன்களை படம் பிடித்து விற்பனைக்கு இருப்பதாக பதிவு வெளியிட்டோம். அதைப் பார்த்து ஆர்டர் வர ஆரம்பித்தது. பிரபலங்களும் என்னிடம் வாங்க முன்வந்தாங்க. பிசினஸ் நல்லாவே போனது. வீட்டுச் செலவையும் என்னால் சமாளிக்க முடிந்தது. சென்னை முழுக்க ஓ.எம்.ஆர் முதல் தாம்பரம், போரூர், மடிப்பாக்கம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கொளத்தூர், அம்பத்தூர், ஐயப்பன்தாங்கல் என பல இடங்களுக்கு இலவச டெலிவரி கொடுத்தோம்’’ என்றவர், தன் வீட்டுச்சூழல் காரணமாக லாபகரமாக இருந்த பிசினசை தொடராமல் விட்டுவிட்டார்.

‘‘ஒரு பிசினஸ் நன்றாக செயல்படும் போது அதை தொடராமல் இருக்க யாருக்குதான் மனம் வரும். ஆனால் நான் என் குடும்பத்திற்காக பிசினசை இழந்தேன். அதற்கு காரணம் என் அண்ணன் மற்றும் அப்பா. அவனுக்கு சரியான வேலை இல்லை. தினமும் வீட்டில் ஏதாவது பிரச்னை செய்வான். அப்பாவும் அவனை தட்டிக் கேட்கமாட்டார். இதனாலேயே என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அப்பாவிற்கு வேலை இல்லாததால், அவரும் பல இடங்களில் கடன் வாங்கி அதை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்தார்.

ஆனால் அம்மா மட்டும் என்னிடம் படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது, மேலும் உனக்கு என்று சம்பாத்தியம் இருக்கணும்னு சொல்லிட்டார். அந்த சமயத்தில் என் கணவர்தான் எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். அவரின் உதவியால்தான் அப்பாவின் கடன் எல்லாவற்றையும் அடைத்தோம். அப்பாவால் அந்த பணத்தை திரும்ப தரமுடியாது. அதற்கு ஈடாக கடையினை எங்களுக்கு கொடுத்திட்டார். கடையையும் பார்த்துக் கொண்டு பிசினசையும் தொடர முடியாது என்பதால் நான் கடையில் என் முழு கவனத்தை செலுத்தினேன்.

தினமும் ஃப்ரெஷ்ஷாக மீனை வாங்கி சுத்தம் செய்து மசாலா தடவி வச்சிடுவோம். வாடிக்கையாளர்கள் கேட்கும் மீனை பொரித்து தருவோம். இதில் என்ன பிரச்னை என்றால், காலை முதல் இரவு வரை நின்று கொண்டு இருக்கணும். வெயில் காலத்தில் பீச் மணலில் காலே வைக்க முடியாது. மணல் சூட்டில் கால் பாதம் எல்லாம் வெந்திடும். மீன்களில் மசாலா தடவுவதால், கை எல்லாம் நெருப்பில் வைத்தது போல் எரியும்.

கடையில் வந்த வருமானத்தில் அப்பா வாங்கிய கடனை அடைத்தோம், வீட்டிற்குச் செலவு செய்தோம். இப்படி முழுக்க முழுக்க அப்பாவின் தேவைகளைதான் நாங்க பூர்த்தி செய்தோம். ஓரளவு சேமிப்பும் வந்தது. அதைக் கொண்டு இன்னொரு கடையை வாங்கினோம். அதை ஆரம்பிக்கலாம்னு நினைக்கும் போது மறுபடியும் என் அண்ணன் கடையை அவனுக்கு தரச்சொல்லி பிரச்னை செய்ய ஆரம்பிச்சான். அப்பாவும் அண்ணனுக்கு சப்போர்ட் செய்ய நான் ரொம்பவே வெறுத்துட்டேன். எல்லாம் செய்தும் அப்பாவால என்னை புரிஞ்சுக்க முடியலன்னு எனக்கு வருத்தமா இருந்தது. அதனால் நான் கடையை என் சித்தியிடம் கொடுத்து அவர்களைப் பார்த்துக்க சொல்லிட்டோம்.

வாங்கிய இன்னொரு கடையை இப்ப திறக்க வேண்டாம்னு முடிவு செய்தோம். இதற்கிடையில் என் அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமானதால், நான் அவர்களுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் மீண்டும் ஆன்லைன் பிசினசை துவங்க முடிவு செய்தேன்’’ என்றவர் மறுபடியும் தன் ஆன்லைன் மீன் விற்பனை பிசினசை மூன்று மாதம் முன்பு முழு மூச்சாக துவங்கியுள்ளார்.

‘‘கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கு மேல் நான் இந்த பிசினசை செய்யவில்லை. என் வாடிக்கையாளர்கள் மீண்டும் என்னைத் தேடி வருவார்களான்னு எனக்கு சந்தேகம் இருந்தது. மறுபடியும் மீன் விற்பனை குறித்து பதிவு செய்தேன். என் பழைய வாடிக்கையாளர்கள் அனைவரும் மீண்டும் ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் அவர்கள் மூலமாகவும் பலர் வரத் துவங்கினார்கள். இந்த ஆன்லைன் பிசினஸ் ஆரம்பிச்சு மூண மாசம்தான் ஆகுது. தினமும் குறைந்தபட்சம் ஐந்து ஆர்டர்கள் மேல் வரும். வார இறுதி நாட்களில் அதிகமா இருக்கும். சிலர் எங்களின் பேக்கிங்காகவே ஒரு முறையாவது வாங்க வேண்டும் என்று ஆர்டர் செய்கிறார்கள்.

காலை நான்கு மணிக்கு காசிமேட்டில் மீன் வரும். நானும் என் கணவரும் காலை மூன்று மணிக்கு எல்லாம் அங்கு போயிடுவோம். முதல் நாளே ஆர்டர் எடுத்திடுவோம். அதற்கு ஏற்ப மீன், இறால் வாங்குவோம். அதாவது, ஒருத்தர் 1 கிலோ சங்கரா சொல்லி இருப்பாங்க. அதே போல் மற்றொரு ஆர்டரும் 1 கிலோ சங்கரா என்றால், 2 கிலோ சங்கரா வாங்குவோம். சில சமயம் ஆர்டர் செய்த மீன்கள் இருக்காது. அந்த சமயத்தில் அவர்கள் வேறு மீன்கள் விரும்பினால் அதை கொடுத்திடுவோம். காலை ஏழு மணிக்குள் எல்லா மீன்களையும் வாங்கி வந்திடுவோம். சின்னச் சின்ன மீன்கள், நண்டு, இறாலை நாங்க வீட்டில் வைத்து சுத்தம் செய்திடுவோம்.

பெரிய மீன்களை வீட்டில் வைத்து வெட்ட முடியாது என்பதால், அதை அங்கேயே வெட்டி வாங்கி வீட்டில் சுத்தம் செய்து பேக்கிங் செய்வோம். முதலில் பாக்கு மட்டை தட்டில்தான் டெலிவரி செய்து வந்தோம். மீன் என்பதால் தண்ணீர் கசியும். அதனால் அதை பலர் விரும்பவில்லை. அதன் பிறகு தான் பிளாஸ்டிக் டப்பாவிற்கு மாறினோம். இதில் மீனும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். தண்ணீரும் கசிவதில்லை. டெலிவரி நான், என் கணவர் மற்றும் என் தம்பிகள்தான் ெசய்கிறோம். ஆர்டருக்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஒரு ஏரியாவை தேர்வு செய்து கொள்ேவாம்.

தினமும் ஃப்ரெஷ் மீன்களைதான் டெலிவரி செய்ய வேண்டும் என்பதில் நாங்க ரொம்பவே உறுதியா இருக்கிறோம். அதனால் நாங்க ஃப்ரீசர் பெட்டிக்கூட வாங்கி வைக்கவில்லை. பெரும்பாலும் காலையில் அனைத்து ஆர்டர்களும் போயிடும். சில சமயம் எக்ஸ்ட்ரா மீன் இருக்கும். சிலர் மாலையில் ஆர்டர் செய்தால் கொடுப்போம். அப்படி இல்லைன்னா நாங்க அதை சமைத்து சாப்பிடுவோம். எங்களின் ஒரே வேண்டுகோள் குறைந்தபட்சம் ஒரு கிலோ ஆர்டர் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

இதில் என்ன பிரச்னைன்னா… நாங்க இங்க சுத்தம் செய்து டப்பாவில் அடைத்து அனுப்பும் போது, மீன் என்பதால், அதை திறக்கும் போது மீன் வாசனை வரும். சிலர் அது கெட்டுவிட்டதுன்னு நினைத்து திருப்பி அனுப்பிடுவாங்க. நாங்க சுத்தம் செய்து அனுப்பினாலும், டப்பாவில் அடைத்து இருப்பதால், மறுபடியும் தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும் அவ்வளவுதான். அதே போல் சிலருக்கு கடல்இறால் அலர்ஜியை ஏற்படுத்தும். அவர்களுக்கு ஃப்ரெஷ் வாட்டர் இறாலை அனுப்புவோம்.

ஆன்லைனில் இது போல் பலர் பிராண்டாக விற்பனை செய்கிறார்கள். அவர்களுடன் நாங்க போட்டி போட விரும்பல. எங்களுக்கு என தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போல் மேலும் பல வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரெஷ்ஷான உணவுப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். படிப்படியாக இந்தத் தொழிலில் முன்னேற வேண்டும்’’ என்றவர், பள்ளி ஒன்றில் உடல் பயிற்சி ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகிறார்.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post ஃப்ரெஷ் உணவுகளை மக்களிடம் சேர்க்க வேண்டும்! appeared first on Dinakaran.

Related Stories: