பசியில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

‘பசி தவிர்ப்பதே முக்கியம்… அன்னதானமே பிரதானம்… பழங்கஞ்சியானாலும் வழங்குவது நன்று’ என்று பாடியுள்ளார் வள்ளலார். அவர் தான் வாழ்ந்த காலம் முழுதும் மனிதர்கள் மீது அன்பு செலுத்தினார். தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவினார். அதனாலேயே பலரும் இன்று வள்ளலார் பெயரில் மடங்கள் தொடங்கி மூன்று வேளை உணவுகளையும் இலவசமாக வழங்கி வருகின்றனர். அவரின் வழியை பின்பற்றி வருகிறார்கள் மதுரையைச் சேர்ந்த மூன்று பெண்கள்.

இவர்கள் ‘அன்னை வசந்தா’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றை அமைத்து அதில் கடந்த ஒன்றரை வருடமாக உணவினை வழங்கி வருகின்றனர். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் வகுப்புகள் மற்றும் தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொடுக்கிறார்கள். இதில் முக்கியமானது இந்த டிரஸ்ட்டினை முழுக்க முழுக்க இந்த மூன்று பெண்கள் மட்டுமே நடத்தி வருகிறார்கள். இது குறித்து அந்த டிரஸ்ட்டின் நிறுவனர்களில் ஒருவரான அமுத வள்ளி நம்மிடம் அமைப்பின் இயக்கம் மற்றும் செயல்பாடு குறித்து விவரித்தார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் மதுரையில் உள்ள திருமங்கலம். மூணாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். அதன் பிறகு படிக்க முடியல. என் அப்பா சென்னையில் வேலை பார்த்து வந்ததால், நானும் அவருடன் சென்னையில் சில வருடங்கள் இருந்தேன். அதன்பிறகு மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவருடன் எனக்கு கல்யாணம் ஆனது. திருமணம் ஆன சில வருடங்களில் ஏதாவது சிறு தொழில் செய்ய விரும்பினேன். வீட்டில் இருந்தபடியே சிறு தானிய உணவுகளில் கஞ்சி பவுடர் தயாரித்து விற்பனை செய்து வந்தேன்.

அந்த சமயத்தில்தான் கொரோனா வந்தது. வியாபாரம் எல்லாம் தடைபட்டது. வீட்டிற்குள் முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் விவசாயம் அல்லது கூலி வேலைக்கு செல்பவர்கள். அவர்களுக்கு தினசரி வருமானம். இந்த நிலையில் அவர்களுக்கு வேலையும் இல்லை, வருமானமும் இல்லை. அதனால் பலரும் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

அவர்களுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என நினைத்தேன். நானும் என் நண்பர்களான சித்ரா மற்றும் அம்சவள்ளி அவர்களுடன் சேர்ந்து சமைத்து உணவுகளை வழங்கத் தொடங்கினோம். இதற்கு காரணம் வள்ளலார்தான். ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றவர் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என நினைத்தவர். அவருடைய மடங்களில் அடுத்தவர்களின் பசியை ஆற்ற இன்றும் அணையாமல் தீ எரிந்து கொண்டே இருக்கும். அவரின் வழியினை பின்பற்றிய எனக்கும் அடுத்தவர்கள் பசியை போக்க வேண்டும் என தோன்றியது’’ என்றவர் தொடர்ந்து இரண்டு வருடமாக சாலையோர மக்களுக்கு உணவளித்து வருகிறார்.

‘‘நான், சித்ரா மற்றும் அருள்ஜோதி என நாங்கள் மூவரும் இணைந்துதான் இந்த சேவையை செய்து வந்தோம். எங்களால் முடிந்த தொகையை சேர்த்து 70 பேருக்கு சமைக்கத் தொடங்கினோம். சமையல் முழுக்க முழுக்க நாங்களே தான் செய்வோம். சமைத்த உணவினை பார்சல் செய்து சாலையில் உள்ள ஆதரவற்ற மக்களை தேடிச்சென்று அவர்களுக்கு உணவுப் பொட்டலத்தை கொடுப்போம். இப்படியே தினமும் செய்ய ஆரம்பித்தோம். கடுமையான நோய் சூழலிலும் மற்றவர்களுக்காக உதவ முடிகிறது என்று எண்ணிய போது எங்களுக்கு ஒரு மனநிம்மதி இருந்தது. நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு உணவு கொடுப்பதைப் பார்த்த பலர் பண உதவி செய்ய முன்வந்தார்கள்.

அது எங்களுக்கு மேலும் ஊக்கமளித்தது. அதனால் கொரோனா காலம் முடிந்தும் தொடர்ந்து இதே மாதிரி உணவு கொடுக்க வேண்டும் என விரும்பினோம். காரணம், நாங்கள் உணவு கொடுக்க செல்லும் போதுதான் தெரிந்தது பலர் ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று. எங்களிடம் இருந்து வரும் உணவினை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அதனால் இதனை தனியாக செய்யாமல் ஒரு அமைப்பு மூலமாக கொண்டு செல்ல விரும்பினோம். ஒரு அமைப்பாக செயல்படும் போது, மக்களுக்கும் நாங்க உண்மையாக சேவை செய்கிறோம் என்ற நம்பிக்கை வரும். மேலும் பலர் உதவ முன் வருவார்கள். அதன் அடிப்படையில் துவங்கப்பட்டதுதான் ‘அன்னை வசந்தா அமைப்பு’ இதில் நான் தலைவியாகவும் சித்ரா செயலாளராகவும், அருள்ஜோதி பொருளாளராகவும் இருக்கிறோம்.

நாங்களே சமைத்துதான் இன்றும் உணவினை வழங்கி வருகிறோம். அமைப்பு ஆரம்பித்து 650 நாட்கள் வரை வழங்கி இருக்கிறோம். நான் படிக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு எப்போதுமே இருக்கும். படித்தால்தான் இந்தக் காலத்தில் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளமுடியும். செல்வங்களிலேயே கல்விச் செல்வம் மட்டும்தான் சுயமாக நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். இதை நாங்களே உணர்ந்திருந்தோம். அதனால் பள்ளி படிக்கும் குழந்தைகளுக்காக மாலை நேர டியூசன் வகுப்புகளை எங்களின் அமைப்பு வளாகத்தில் இலவசமாக நடத்தி வருகிறோம்.

அதற்காக இரண்டு ஆசிரியர்களை நியமித்து இருக்கிறோம். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தற்காப்புக் கலைகளும் சொல்லிக் கொடுக்கிறோம். காலை நேரங்களில் மட்டும் சிலம்பம் பயிற்சி அளிக்கிறோம். ஒரு பக்கம் பலரின் பசி போக்கும் பணியை தொடர்ந்து வந்தாலும், அடுத்த தலைமுறையினரும் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதுதான் எங்க அமைப்பின் கனவு என்பதால், அதை நோக்கி செயல்பட்டு வருகிறோம்’’ என மகிழ்ச்சிப் பொங்க சொல்கிறார் அமுதவள்ளி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post பசியில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்! appeared first on Dinakaran.

Related Stories: