ஏப்.3 முதல் தீவிர பிரசாரம் 8 கோடி வீடுகளுக்கு ஆதரவு கேட்டு பயணம்: காங்கிரஸ் புது யுக்தி

புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்.3ம் தேதி முதல் 8 கோடி வீடுகளுக்கு நேரில் செல்லும் பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்க உள்ளதாக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் டெல்லி தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 5ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 6ம் தேதி ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத் பொதுக்கூட்டங்களில் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்றுவார்கள். மேலும் வீட்டுக்கு வீடு உத்தரவாதம் என்ற அடிப்படையில் வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஓட்டு கேட்கும் பணி ஏப்.3ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் உள்ள 8 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு நேரில் சென்று பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும் சமூக ஊடகங்கள், தொலைகாட்சிகள், பத்திரிகைகள் மூலமும் அதிக அளவு பிரசாரம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ‘ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் நாளை டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டமே முதல் பிரசார கூட்டமாக தொடங்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘மும்பைக்குப் பிறகு நடைபெறும் இரண்டாவது பெரிய இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் எதேச்சதிகாரத்தை எடுத்துரைக்கும் வகையில் முதல் பிரமாண்ட பிரசார பேரணியாக அமையும்’ என்றார்.

The post ஏப்.3 முதல் தீவிர பிரசாரம் 8 கோடி வீடுகளுக்கு ஆதரவு கேட்டு பயணம்: காங்கிரஸ் புது யுக்தி appeared first on Dinakaran.

Related Stories: