வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு மேலும் ரூ.1823 கோடி அபராதம்: வருமான வரித்துறை நடவடிக்கையால் சர்ச்சை

புதுடெல்லி: ரூ.1823 கோடி அபராதம் செலுத்த கோரி வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது என்றும் தேர்தலுக்கு முன் கட்சியை முடக்குவதற்கு கட்சி மீது வரி பயங்கரவாதம் நடத்தப்படுகிறது என காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பு குற்றம் சாட்டினார். கடந்த 2018-19ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக காங்கிரஸ் கட்சி, இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் பல வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், காங்கிரசுக்கு மேலும் ரு்.1823 கோடி அபராதம் செலுத்துமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறுகையில்,‘‘ரூ.1,823 கோடி அபராதம் செலுத்துமாறு வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன் காங்கிரசை நிதி ரீதியாக முடக்கும் வகையில் வரி பயங்கரவாதத்தில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆளும் பாஜ கட்சி,வருமான வரி விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. அந்த கட்சியிடம் ரூ.4800 கோடி அபராதம் வசூலிக்க வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அந்த கட்சி ரூ.8200 கோடி வசூலித்துள்ளது. இதற்கு பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு,பிந்தைய ரெய்டு லஞ்சம் மற்றும் போலி கம்பெனிகளின் வழியாக இந்த பணம் பெறப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறத்தில் எதிர்க்கட்சிகள் மீது வரி பயங்கரவாதம் நடத்தப்படுகிறது. தேர்தலில் காங்கிரசை முடக்க சதி நடக்கிறது. அதற்கு எல்லாம் காங்கிரஸ் பயப்படாது. காங்கிரசின் பிரசாரம் தொடரும். மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகளை நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும்’’என்றார்.

கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன்,‘‘ காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை குறி வைத்து அவற்றுக்கு எதிராக வருமான வரித்துறை செயல்படுகிறது. வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்’’ என்றார்.

* பழைய பான் அட்டையை பயன்படுத்திய இந்திய கம்யூ.வுக்கு ரூ.11 கோடி அபராதம்
பழைய பான் அட்டையை பயன்படுத்தியதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை ரூ.11 கோடி அபராதம் விதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது பழைய பான் அட்டையை பயன்படுத்தியுள்ளது. எனவே, இதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன. வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு எதிராக வழக்கு தொடருவது பற்றி வக்கீல்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அந்த கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

* திரிணாமுல் எம்பிக்கும் நோட்டீஸ்
அதே போல் திரிணாமுல் கட்சி எம்பி சகேத் கோகலேவுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிடுகையில், எனக்கு வருமான வரித்துறையிடம் இருந்து கடந்த 72 மணி நேரத்தில் 11 நோட்டீஸ்கள் வந்துள்ளன. 7 வருடங்களுக்கு முந்தைய வரி சம்மந்தமாகவும் சில நோட்டீஸ்கள் வந்துள்ளன. இது எதிர்க்கட்சியினருக்கு அழுத்தம் கொடுக்கவே இது போன்று ஒன்றிய அரசு செயல்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

The post வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு மேலும் ரூ.1823 கோடி அபராதம்: வருமான வரித்துறை நடவடிக்கையால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: