பாஜவுக்கு எதிராக விளம்பரம் செய்த வழக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக வேண்டும்: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டபேரவைக்கு கடந்தாண்டு நடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் விளம்பரம் செய்ததுடன் பா.ஜ.,வுக்கு எதிராக 40 சதவீதம் கமிஷன் வாங்கியதாக கடுமையாக விமர்சனம் செய்தது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த கேசவ் பிரசாத் என்பவர் ராகுல்காந்தி, முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் மீது தனி புகார் அளித்தார்.

அதை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிமன்றம், ராகுல்காந்தி, சித்தராமையா, சிவகுமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டதுடன் மூன்று பேரும் மார்ச் 28ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராகி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி உள்ளோம். ஆனால் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு சம்மன் வழங்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

இதை கேட்டு நீதிபதி கோபமடைந்து, நீங்கள் தேடி வரும் இருவரும் பெங்களூருவில் ஒரு நாள் கூட இருக்கவில்லையா? நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத நீங்கள், பெரிய குற்றவாளிகளை எப்படி கைது செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர். மேலும் சித்தராமையா மற்றும் சிவகுமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, வரும் ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அப்போது ராகுல்காந்தி தரப்பில் ஆஜரான வக்கீல் தாக்கல் செய்த மனுவில், மக்களவை தேர்தல் நடந்து வருவதால், எனது கட்சிக்காரர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருவதால், அவர் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதையேற்றுக்கொண்ட நீதிபதி, வரும் ஜூன் மாதம் வரை ராகுல்காந்தி நேரில் ஆஜராவதற்கு விலக்களித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

The post பாஜவுக்கு எதிராக விளம்பரம் செய்த வழக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக வேண்டும்: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: