பொதுமக்கள் மனுக்களை செலுத்த தபால் பெட்டி

திருப்போரூர்: தமிழகத்தில் ஏப்ரல் 19ம்தேதி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக வருவாய்த்துறை ஊழியர்கள், அலுவலர்கள் 100 சதவீதம் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு அலுவலருக்கும் பறக்கும் படை, தேர்தல் செலவினங்கள் கண்காணித்தல், வாக்குச்சாவடி முகாமை தயார் செய்தல் என பல்வேறு பணிகள் ஒதுக்கப்படுகின்றன.

இதனிடையே கிராமப்புற மக்கள் தங்களின் பட்டா பெயர் மாற்றம், நீக்கம், திருத்தல், சேர்த்தல், குடும்ப அட்டை திருத்தல் போன்ற பணிகளுக்கும், வீட்டுமனை மற்றும் நிலங்களை அளவீடு செய்தல் போன்ற பணிகளுக்கும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்கள், தேடி வரும் அலுவலர்கள் மாற்றுப்பணியாக தேர்தல் வேலைகளை கவனிக்க சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றொரு முறை வரும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சந்திக்க வரும் அலுவலர் அப்பணியில் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை குறித்த மனுக்களை இந்த பெட்டியில் போட்டுச்செல்ல வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் மனுக்களை இந்த பெட்டியில் போட்டுச் செல்கின்றனர். இம்மனுக்கள் தனியாக எடுத்து எண்ணிடப்பட்டு தனித்தனி துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உடனடியாக தீர்வு அளிக்க வேண்டிய மனுக்களுக்கு வரிசை எண் முறைப்படி தீர்வு வழங்கப்படுகிறது. நீண்டகால பிரச்னைகளுக்கான தீர்வு தேர்தல் பணி முடிந்ததும் அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் இந்த நடைமுறைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The post பொதுமக்கள் மனுக்களை செலுத்த தபால் பெட்டி appeared first on Dinakaran.

Related Stories: