ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உட்பட 32 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு: 21 மனுக்கள் தள்ளுபடி

செங்கல்பட்டு: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உட்பட 32 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 21 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருமான அருண்ராஜ் தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்பட 53 பேர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான அருண்ராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது.

இந்நிலையில், நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் வேட்பு மனுவில் நோட்டரி சான்றிதழ் புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் அவரது வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, டி.ஆர்.பாலு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவில் புதுப்பிக்கப்பட்ட நோட்டரி சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளது என திமுகவினரும், தேர்தல் அலுவலர்களும் தெளிவுபடுத்தினர்.

பின்னர், அதிமுகவினரின் பார்வைக்கு வைத்து சந்தேகத்தை தீர்த்து வைத்து டி.ஆர்‌.பாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோல், 32 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், பல்வேறு குளறுபடிகள் இருந்ததாலும் சரிவர பூர்த்தி செய்யாததாலும் 21 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்வதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அருண்ராஜ் தெரிவித்தார். இதேபோல், அதிமுக, தமாகா, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

The post ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உட்பட 32 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு: 21 மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: