விதிகளை மீறி கழிவுகள் வெளியேற்றுவதால் தனியார் அட்டை கம்பெனியை மூட வேண்டும்: நிலத்தடி நீர் மாசு, மக்களுக்கு நோய் பரவும் அபாயம்; பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: பவுஞ்சூர் அருகே இயங்கி வரும் தனியார் அட்டை தொழிற்சாலையால் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதோடு, கிராம மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த தொற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்துள்ள புலியரணங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கீரல்வாடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அட்டை மறுசுழற்சி செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இந்த தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் தினமும் பயன்படுத்தி வீணான அட்டை பெட்டிகளை ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் இந்த தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டு கொதிகலன் மூலம் கூழாக்கப்பட்டு, மீண்டும் புதிய அட்டை பேட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த மறுசுழற்சி பணியின்போது, தொழிற்சாலை நிர்வாகம் விதிகள் மீறி கழிவுகள் வெளியேற்றி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். திறந்த வெளியில் கழிவுகள் வெளியேற்றப்படுவதால், மழைக்காலங்களில் கழிவுகள் மழைநீருடன் பூமியில் ஊறி கீரல்வாடி கிராமம் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள கிராமங்களான மேலாகண்டை, கீழ்கண்டை, ஜமீன் எண்டத்தூர், அத்திவாக்கம், மாரிபுத்தூர், காவாதூர் கிராமங்களின் நிலத்தடி நீர் மாசடைந்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொழிற்சாலையை சுற்றி விவசாயிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர், வேர்க்கடலை, தர்பூசணி, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர் செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலை கழிவுகள் நிலத்தில் கலப்பதால் பயிர்கள் தரம் குறைந்து, வரும் காலங்களில் விஷமாக மாறும் சூழல் உள்ளது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்த கழிவுகள் கலந்த குடிநீரை பருகியதால் 10 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், தற்போது நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னும் பலருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் நிறைந்த புகையால், சுற்றியுள்ள மக்கள் மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் அல்லது வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என பல ஆண்டு காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு காரணம் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை இந்த தொழிற்சாலை மூலம் மாதம்தோறும் லஞ்சம் செல்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி பொதுமக்கள் உடல் நலனை கருதி இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த கழிவுகள் கலந்த குடிநீரை பருகியதால் 10 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், தற்போது நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னும் பலருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் நிறைந்த புகையால், சுற்றியுள்ள மக்கள் மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

The post விதிகளை மீறி கழிவுகள் வெளியேற்றுவதால் தனியார் அட்டை கம்பெனியை மூட வேண்டும்: நிலத்தடி நீர் மாசு, மக்களுக்கு நோய் பரவும் அபாயம்; பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: